திரைகடலோடி திரவியம் தேடுவதில் மலையாளிகளை மிஞ்சும் தமிழர்கள்!
சவுதி அரேபியா, குவைத், ஓமன்... போன்ற வளைகுடா நாடுகளில் அதிகமாக மலையாளிகள்தான் வேலை செய்து வருகிறார்கள் என்பது பொதுக்கருத்து. உண்மையில் அங்கே தமிழர்களும் அதிகமாக வேலை செய்கின்றனர். இதற்கு சாட்சியாக இருக்கிறது சமீபத்தில் வெளியான ஆங்கிலப் புத்தகம் ஒன்று.
 ‘தமிழ் மைக்ரன்ட்ஸ்’ ((TAMIL MIGRANTS), அதாவது ‘புலம்பெயர் தமிழர்கள்’ என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். இதை நான்கு பேர் சேர்ந்து எழுதியிருக்கின்றனர். அதில் ஒருவரான பெர்னார்ட் டி’ சாமி, சென்னை லயோலா கல்லூரியின் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர். வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் குறித்து அவரிடம் உரையாடினோம்.  ‘‘பொதுவாக வளைகுடா நாடுகளுக்கு அதிகமாக மலையாளிகள்தான் வேலைக்குச் செல்கின்றனர் என்று நம்பப்பட்டு வருகிறது. எந்தெந்த மாநிலங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகின்றனர் என்பதைக் கவனித்தோம். 2004ல் வேலைக்காக மலையாளிகளைவிட தமிழர்கள்தான் வெளிநாடுகளுக்கு அதிகமாகப் போகின்றனர் என்பது தெரியவந்தது. ஆனால், மீண்டும் 2005 முதல் 2007 வரை மலையாளிகள் அதிகமாகச் சென்றனர். அதனால் இதில் கவனம் செலுத்துவதை நிறுத்தினோம்.
 1998ல், ‘சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (சி.டி.எஸ்)’ எனும் கேரளாவில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனம், வளைகுடா நாடுகளுக்குப் போகும் மலையாளிகளைக் குறித்து ஆய்வு செய்தது. இந்த நிறுவனத்தின் பேராசிரியர் இருதயராஜனும், உலக வங்கியில் பணிபுரிந்துவிட்டு, ஓய்வுபெற்ற சர்க்காரியா என்பவரும் ஆய்வில் முக்கிய பங்காற்றினர். ஆய்வின் துல்லியத்தைப் பார்த்து கேரள அரசாங்கம் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் மலையாளிகளுடைய குடும்பங்களின் பிரச்னைகளைத் தீர்க்க ஆர்வம் காட்டியது. அதனால் இந்த ஆய்வை ஒவ்வொரு 5 வருட இடைவெளியிலும் செய்துகொடுக்க வேண்டுகோள் விடுத்தது.
 தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவை வைத்து கேரள அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டியது; குடும்பங்களின் பிரச்னைகளையும் தீர்த்தது...’’ என்கிற சாமி, புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆய்வுக்குத் திருப்புமுனையாக இருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார்.‘‘2007க்குப் பிறகு மலையாளிகளைவிட தமிழர்கள்தான் அதிகமாக வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் கேரள ஆய்வு முறையை அடிப்படையாக வைத்து கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்கள் ஆய்வு செய்தன.
நாங்களும் தமிழக அரசை நாடினோம். அப்போது கலைஞரின் கடைசி ஆட்சி. வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்காக ஒரு வாரியம் அமைக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தும்கூட இருந்தார். ஆனால், அடுத்த ஆண்டு ஆட்சி மாறவே எங்கள் முயற்சிக்கு ஒரு இடைவெளி விழுந்தது. ஆனால், ஒன்றிய அரசாங்கமும், தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கான மறுவாழ்வு மையமும் எங்கள் முயற்சிக்கு உதவ முன்வந்தது. 2015ல் பெரிய சர்வே ஒன்றை தமிழகம் முழுக்க செய்தோம்...’’ என்ற சாமி, அந்த சர்வே குறித்தும் பேசினார்.
‘‘மனிதர்களின் பிறப்பு, இறப்பு அல்லது ஒரு பொருளின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதியை இலகுவாகக் கணக்கிட்டுவிடலாம். ஆனால், நகரும் மனிதனைக் கணக்கிடுவது கடினம். ஆனாலும் இருதயராஜன் மற்றும் சர்க்காரியா செய்த ஆய்வு முறை மிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும், ஓரளவு மக்களின் புலம்பெயர்வைக் கணிக்கக்கூடியதாக இருந்தது.
அந்த அடிப்படையில்தான் எங்கள் ஆய்வையும் தொடங்கினோம். இதற்காக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைத் தேர்வு செய்தோம். கிராமம், நகரம், ஆண்கள், பெண்கள் என்று ஒரு கலவையாக ஆய்வு செய்தோம்.
இதற்காக ஒரு வினாத்தாளை தயாரித்தோம். வெளிநாட்டில் வேலை செய்யவில்லை என்று சொன்னால் இலகுவாக முடிந்துவிடும். ஒருவேளை வேலை செய்கிறார்கள் என்றால் அந்தக் குடும்பத்தின் தலைவி மற்றும் முதியோர் தொடர்பான வினாத்தாள்கள் வழங்கப்படும். வெளிநாடு மட்டுமல்ல; வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்கள் பற்றியும் வினா இருக்கும்...’’ என்கிற சாமி, இந்த சர்வேயில் வெளிநாட்டு வேலை தொடர்பாக கண்டுபிடித்த முடிவுகளைப் பகிர்ந்தார். ‘‘சர்வேயில் 4 விதமான கேள்விகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர்..., வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியோர் எத்தனை பேர்..., வெளிமாநிலத்தில் வேலை செய்வோர் எத்தனை பேர் மற்றும் வெளிமாநிலத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியோர் எத்தனை பேர்... என்பவைதான் அந்தக் கேள்விகள். 2015ல் எடுக்கப்பட்ட சர்வேயின் படி வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சுமார் 54 லட்சம் தமிழர்கள் வேலை செய்வதாக விடை கிடைத்தது. இவர்களை வெளிநாட்டு வாழ் அல்லது புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் ‘நான் ரெசிடென்ட் தமிழ்’, அதாவது சுருக்கமாக ‘என்.ஆர்.டி’.
இந்த 54 லட்சத்தில் 22 லட்சம் பேர் வெளிநாடுகளில் மட்டும் வேலை செய்பவர்கள். வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியோர் 13 லட்சம். வெளிநாடுகளிலும் சிங்கப்பூரில் 4 லட்சம், ஐக்கிய அரேபிய எமிரேட்டில் (UAE) 4 லட்சம், சவுதியில் 3.5 லட்சம், மலேசியாவில் 1.9 லட்சம், சவுதி, குவைத், ஓமன், கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும், செய்த தமிழர்கள் சுமார் 10 லட்சம் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
அதாவது வெளிநாட்டில் வேலை செய்யும் 22 லட்சம் தமிழர்களில் பாதிப்பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள். கேரளாவில் ஐந்து வீடுகளில் ஒருவராவது வளைகுடா நாடுகளில் வேலைசெய்கிறார் என்றால், தமிழகத்தில் பத்து வீட்டில் ஒருவராவது வளைகுடா நாட்டில் இருப்பார். ஆனால், மலையாளிகள் சிங்கப்பூர் எல்லாம் செல்வதில்லை. தமிழர்களுக்கு வரலாறு, பண்பாடு ரீதியாக சிங்கப்பூர், மலேசியா நெருக்கமாக இருப்பதால் அங்கே வேலைக்குச் செல்கிறார்கள். மட்டுமல்ல; வெளிநாடுகளில் வேலை செய்யப்போகும் எல்லா இந்தியர்களிலும் சுமார் 70 சதவீதம் பேர் படிப்பறிவில்லாத அல்லது குறைந்தளவே படித்தவர்கள். இதை தமிழர்களுக்கும் பொருத்திப் பார்த்தால் தமிழர்களின் நிலையும் பரிதாபகரமானது...’’ என்கிற சாமி, வெளிநாடுகளுக்கு வேலைக்காகப் போகும் தமிழர்களின் நிலை, குடும்பச்சூழ்நிலை பற்றியும் விவரித்தார்.
‘‘வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது பல காரணங்களுக்காக நடைபெறும். ஆனால், எங்கள் ஆய்வில் தெரியவந்தது என்னவென்றால், கல்வி அறிவில்லாத அல்லது ஓரளவு கல்வி பெற்ற மக்களிடையே நிகழ்ந்த வெளிநாட்டு மற்றும் வெளிமாநில வேலைகள் தொடர்பான பிரச்னைகள்தான்.
மூளை வேலைக்காக செல்லும் ஐடி துறை தொடர்பான விஷயங்கள் இந்த சர்வேயில் வெளிப்படவில்லை. காரணம், கிராமம் - நகரம் சார்ந்த கலவையாக இந்த சர்வே இருந்தது. இப்படி கல்வி அறிவில்லாத ஒரு சமூகம் வேலைக்காக வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும்போது குடும்பம் ஓரளவு நிதி ரீதியாக காப்பாற்றப்படலாம்.
ஆனால், ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு ஆண்மகன் வீட்டில் இல்லாதபோது அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்மணிகளும், முதியோர்களும் அடையும் துன்பத்துக்கு அளவேதும் இல்லை.
உதாரணமாக வெளிநாட்டில் வேலை செய்யும் குடும்பத்தில் உள்ள ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறார். அதை சமாளிப்பது பெரிய சிக்கலையும், செலவீனங்களையும் இழுத்துவிடும்.
இந்தக் குடும்பங்கள் பாதுகாப்பு இன்மையையே பெரிதும் உணர்கிறார்கள். கேரளாவில் வெளிநாட்டு வாழ் மலையாளிகளுக்கு என்று ஓர் அமைச்சகம் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இது அவசியம். தமிழகத்திலும் அமைச்சகம் உருவாகும்போது இந்த வெளிநாட்டு வாழ் தமிழர்களின் குறை நீங்கும்.
தமிழகத்தின் வருவாயில் சுமார் 15 சதவீதம் இந்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மூலம்தான் கிடைக்கிறது. ஆனால், இந்த தமிழர்களுக்கு அரசு திருப்பி என்ன செய்கிறது என்பதும் முக்கியம். கேரளாவில் பென்ஷன் எல்லாம் கொடுக்கிறார்கள். இதுமாதிரி தமிழகமும் முயற்சிக்க வேண்டும்...’’ என்று அழுத்தமாக முடித்தார்.
டி.ரஞ்சித்
|