மணம்



‘‘டிக்கெட்... டிக்கெட்...’’ என்று வந்த   நடத்துனரிடம் ‘‘சென்னிமலை ஒன்று...’’ என்று நீட்டினேன்.நாளை தைப்பூசம் என்பதால் பேருந்தில் நல்ல கூட்டம். உட்கார இடம் கிடைக்குமா என்று சுற்றும் பார்த்தேன்.‘‘அக்கா... நகருங்க...’’ என்றபடியே என் பக்கத்தில் இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண் எழுந்திருக்க, ‘அப்பாடா...’ என்று உட்கார்ந்தேன்..சென்னிமலை என் அம்மா பாட்டி ஊர். பத்தாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன். தைப்பூசம்தான் ஊரில் பெரிய விழா. தை பிறந்ததிலிருந்தே ஊரே நிலை கொள்ளாது.

மாமா, ‘‘நீ தைப்பூசத்திற்கு வந்து எத்தனை வருடமாகிறது..? இந்த வருடம் வந்தே ஆக வேண்டும்...’’ என்று வற்புறுத்தியதால் புறப்பட்டு வந்தேன்.பாட்டி தைப்பூசம் முதல் நாள் தொட்டிக் கட்டு வாசலை ‘முத்தா’வை விட்டு சாணி போடுவாள். வாசலின் நாலுபக்கமும் பசேலென்று இருந்தால்தான் திருப்தி. ம்... பாட்டி இறந்துதான் இரண்டு வருடத்திற்கு மேலாகி விட்டதே...
முத்தா இப்போது உயிரோடு தான் இருக்குமா..? ‘‘ச்சே... ச்சே...’’ என்று உள்ளுக்குள்ளேயே அதட்டிக் கொண்டேன்.

‘‘சாமீ... கண்ணு... நல்லாருக்கீங்களா..?’’ என்ற முத்தாவின் குரல் காதுக்குள் கேட்டது.முத்தா... ஊருக்குள் அவள் பெயரை யாரும் கூப்பிட்டுப் பார்த்ததில்லை. எல்லோருக்கும் அவள் கக்கூஸ்க்காரி. பாட்டி மட்டுமே ‘முத்தா...’னு கூப்பிடுவா.

‘‘ஏன் உங்க பெயர் முத்தானு வச்சாங்க..?’’ என்றேன் ஒருநாள்.‘‘அதுவா கண்ணு... நான் பொறக்கறப்போ எங்கம்மா முத்தாரம்மன் கிட்ட வேண்டிக்கிட்டாங்களாம் அதான்...’’
எங்க ஊரில் அப்போது எல்லோர் வீட்டிலும் மனிதர்களால் சுத்தம் செய்யப்படும் ‘எடுப்பு கழிவறைகள்’தான். எங்கள் தெருவில் இருக்கும் அத்தனை கழிவறைகளையும் முத்தாதான் சுத்தம் செய்வாள்.

காலை ஆறு மணிக்கே பெரிய வாளியுடன் தெருவுக்குள் நுழைந்தால் எங்கள் வீட்டுக்கு வர மணி எட்டாகி விடும். வாளி என்று பெயர்தானே தவிர அதற்கு ஒரு மூடி கூட இருக்காது. அதன் மேலே சதுரமாக தகரத் தகடும், கரண்டி போன்ற அமைப்பில் ஒரு நீளத்தகடும் இருக்கும். அதில்தான் கழிவுகளை  வாரி வாளிக்குள் போடுவாள்.ஏழரை மணியிலிருந்தே பாட்டி புழக்கடையில் இருக்கும் சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் நிரப்பச் சொல்லி என்னை விரட்டிக் கொண்டே இருப்பாள்.

சரியாக எட்டு மணிக்கு முத்தா வந்து விடுவாள். அப்புறம் அரை மணிநேரம் அந்தப் பக்கம் போக முடியாது. என்னதான் கதவை அழுந்தச் சாத்தினாலும் நாற்றம் குடலைப் பிடுங்கும்.
எங்கள் வீட்டில் சுத்தம் செய்துவிட்டு தெரு முக்கில் நிற்கும் பஞ்சாயத்து வண்டியில் கழிவுகளைக் கொட்டிவிட்டு மீண்டும் எங்கள் புழக்கடைக்கே வந்து கைகால் சுத்தம் செய்து விட்டு ‘‘ஸ்... அப்பாடா...’’ என்று உட்காருவாள்.

வியர்வையின் பளபளப்பில் முதுகு மின்னும். கருந்தேக்கை பாலீஷ் செய்தால் மினுமினுக்குமே... அது போல கருப்பு தேகம் முத்தாவிற்கு. காதில் பெரிய பம்பட்டி போட்டிருப்பாள். நல்ல ஆகிருதியான உயரமான உடம்பு.அதனால்தான் அவ்வளவு பெரிய கழிவு வாளியை சர்வசாதாரணமாக தோளில் வைத்துக்கொண்டு வருவாள். மலத்தை தூக்கிக்கொண்டு நடக்கிறோமே என்று  முகத்தில் ஒரு அருவருப்பு தெரியாது. சப்பரத்தில் சாமியைத் தூக்கிக்கொண்டு போவோர்களின் பாவமே விரவிக் கிடக்கும்.

பாட்டி கொஞ்சம் பாலும், நிறையத் தண்ணீரும் கலந்து கொடுக்கும் காப்பியை தன்னுடைய டம்ளரில் அமிர்தமாட்டம் வாங்கிக் குடித்துவிட்டுப் போவாள். சிலசமயம் பழைய சோறு நிறைய இருந்தால் அதற்காகக் கொண்டு வரும் குண்டானில் வாங்கிப் போவாள்.பாட்டி வேலையாய் இருக்கும் சமயங்களில் நான்தான் ஊற்றுவேன். டம்ளரில் படாமல் கீழே தணித்து வாங்குவாள். ஊற்றத் தெரியாமல் சிந்திவிடும். ‘‘சாமீ...’’ என்றபடி கையால் வழித்துக் கொள்ளுவாள்.

முத்தா இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவள். முதல் தாரத்திற்கு குழந்தை இல்லை என்று இவளைக் கட்டி வைத்தார்கள். கணவன் ரங்கன் சரியான குடிகாரன். கணவன், இரண்டு குழந்தைகள், மூத்த சம்சாரம், மாமியார் எல்லார் வயிறும் இவள் சம்பளத்தில்தான் நிறைந்து கொண்டிருந்தது.

முத்தாவின் பெண் பூங்கோதை என்கூடத்தான் பள்ளியில் படித்தாள். இறுக வழித்துப் பின்னி சாமந்திப் பூ வைத்திருப்பாள். ஒல்லியாக இருப்பாள். அதென்னவோ மலையடிவாரத்தில் அரசு கொடுத்த நிலத்தில்தான் குடிசை போட்டு முத்தா மற்றும் அவள் குலக்காரர்கள் தங்கியிருந்தனர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சாமந்திப் பூ அல்லது துலுக்கமல்லிச் செடிதான் பூத்துக் குலுங்கும்.

ஒருதரம் ஆர்வ மிகுதியில் முத்தா வீட்டுக்கு பூங்கோதையுடன் போய்விட்டேன். ‘‘வாங்க சாமி...’’ என்று பிரியமாக வரவேற்றவள் கடைக்கு ஓடிப்போய் காப்பி வாங்கிட்டு வந்து பெட்டியை உருட்டி ஒரு சின்ன வெள்ளி டம்ளரை எடுத்து ஊற்றித் தந்தாள்.

பாட்டியிடம் பெருமையாக சொல்லப் போக ஏக திட்டு திட்டினாள்.எங்கள் ஊரில் இருக்கும் ஒரே பள்ளி என்பதால் பேத வித்தியாசமில்லாமல்  எல்லா குழந்தைகளும் அங்கேதான் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் பூங்கோதையிடம் சில பேர் மட்டுமே சேர்வார்கள்.முத்தா என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘‘நல்லாப் படிக்குதா சாமி எம்புள்ள..?’’ என்று கேட்காமல் இருக்க மாட்டாள்.‘‘அருமையாப் படிக்கிறாங்க...’’ என்பேன்.

பெருமிதமான சிரிப்பு விரிந்தாலும் ‘‘என்னைப் போய் சாமி ‘ங்க’ போடுதுங்க...’’ என்பாள் பாட்டியிடம்.‘‘சிறுசுதானே முத்தா...’’ என்பாள் சமாதானமாக பாட்டி.‘‘முத்தா... நாளைக்கு மச்சாண்டார் பேரப்புள்ளைய கூட்டிட்டு வர்றாங்க. வேலைய முடிச்சுட்டு நல்லாக் கைகால் சுத்தம் பண்ணிட்டு வா...’’‘‘சரிங்க பெரியம்மா...’’எந்தக் குழந்தை பிறந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் ஆடை அணிவிக்காமல் கழிவு எடுப்பவர்களிடம் கொடுத்து வாங்குவார்கள். எந்த வியாதியும் அண்டாது என்றொரு நம்பிக்கை.

‘‘ஏம் முத்தா... மேலத்தெருவுல ‘புள்ளப் பெத்தா’ முறை செய்யப் போனியே... சேல கீல எடுத்துக் கொடுத்தாங்களா..?’’

‘‘ம்... பாலியெஸ்டர் சீலையும், ஒரு மரக்கா நெல்லும், இருபத்தஞ்சு பணமும் கொடுத்தனுப்பினாங்கம்மா... நானா கட்டறேன்... நீங்க கொடுக்கற சேலையத் தவிர எதக் கட்டுறேன்..? எல்லாம் அந்த எளவட்டக் கழுத கட்டிகிடட்டும்...’’முத்தாவுக்கு எப்போதும் பாட்டியின் பழைய எட்டுகஜ நெகமம் புடவைதான். ரவிக்கை போடமாட்டாள். புடவையையே மார் தெரியாமல் பின் கொசுவம் வைத்து நாசுக்காக கட்டிக் கொள்வாள்.

மேலத்தெரு வீடுகளில் குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாளில் தீட்டுக் கழிக்கும் வரை குழந்தை பெற்ற பெண்களை ஓர் அறைக்குள் இருக்க வைத்திருப்பார்கள். அந்த அறையின் மூலையிலேயே சாம்பல் கொட்டி ஒரு வாளியும், பக்கத்திலேயே சாம்பல் மூட்டையும் வைத்து விடுவார்கள். அந்தப் பெண் கழிவுகளை அந்த வாளியில் செய்துவிட்டு பக்கத்தில் உள்ள சாம்பலைக் கொட்டி மூடி விட வேண்டும்.

அந்தக் கழிவுகளை தினமும் போய் முத்தா போன்ற கழிவு எடுப்பவர்கள் சுத்தம் செய்வார்கள். அதற்குத்தான் சன்மானம்.ஏனோ ஒரு இனந் தெரியாத பாசம் எனக்கும் முத்தாவிற்கும் இடையில். முத்தா வரும் வேளையில் பள்ளி விடுமுறை என்றால் அவளுடன் பேசுவதில், சொல்லும் கதைகளைக் கேட்பதில் அவ்வளவு விருப்பம் எனக்கு.‘‘ஏன் பூங்கோதை ஸ்கூலுக்கு வர்றதில்லை..?!’’

‘‘சாமி... புள்ள உட்கார்ந்துடுச்சுங்க. இனி மாமன் மனை சுத்தினாத்தான் வெளியவே அனுப்புவோம். அதுவும் இஸ்கூலுக்கு வர மாட்டாங்க. வயசுக்கு வந்த புள்ளய ஒரு வருஷத்துக்குள்ளார கலியாணம் முடிச்சுக் குடுத்துருவங்க...’’‘‘ராசாவ மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பறீங்க..?’’ராசா... பேருக்கேத்த மாதிரி ராஜா மாதிரி அழகா சிவப்பா இருப்பான். அதென்னவோ முத்தாவின் குலத்தில் இல்லாத கலராய் பிறந்திருந்தான்.

‘‘எங்க மாமனாரு கலரு...’’ என்பாள் பெருமையாக. பையன் பேச்சை எடுத்தாலே முகமெல்லாம் பூரித்துப் போகும் முத்தாவிற்கு. ஈரோட்டில் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தான் ராசா.

அந்த ராசா தலை மேல் இடியைத் தூக்கிப் போடுகிற மாதிரி அப்படி ஒரு காரியம் செய்வானென்று முத்தா நினைத்திருப்பாளா என்ன..?ஊரே பத்திக்கிட்டு எரிஞ்ச மாதிரி எங்க திரும்பினாலும் அதையே பேசினார்கள்... ‘‘கக்கூஸ்க்காரி முத்தா பையன் சேட்டான் பொண்ண கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டானாமே...’’மலையடிவாரத்துலதான் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடும். வாரத்துக்கு ஒருமுறை தவிர சும்மா கிடந்த இடத்தில் கூடாரம் போட்டுத் தங்கியிருந்தார்கள் வடக்கிலிருந்து வந்த நாடோடிகள். அதிலிருந்த ஒரு பெண்ணைத்தான் ராசா கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து விட்டான்.

முத்தாவின் வளவு என்றில்லை, ஊரில் அவரவர் சமுதாயத்திற்கு அவரவர் சமூகப் பெரியவர்கள் தலைமையில் ஒரு பஞ்சாயத்து உண்டு. அது சொல்படிதான் நடப்பார்கள்.
ராசா பண்ணிய தப்புக்கு, சாதி விட்டு சாதில கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு, முத்தாவைக் குடும்பத்துடன் பத்து வருஷம் ஊரைவிட்டே தள்ளி வைத்துவிட்டது பஞ்சாயத்து.
கதறிக் காலில் விழுந்து அழுத முத்தாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை ஊர்.அடுத்த நாள் பாட்டியிடம் சொல்லிக் கொண்டு போக வந்தவள் ‘‘ம்மா...’’ என்று விம்மினாள்.

‘‘ராசா... இப்படிப்  பண்ணுவான்னு  நெனக்கவே இல்லை. உன் தலைல இப்படி இடியத் தூக்கிப் போட்டுட்டானே... வேலைய என்ன பண்ணுன முத்தா..?’’
‘‘எழுதிக் கொடுத்திட்டேன்மா... வேற வழியில்லமா...’’‘‘எங்க போற..?’’‘‘ராசாவோட சிநேகிதப்புள்ள எதோ அவனுக்கு ஒரு வேலை வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கானாம்... அவங்கூடத்தாம் போறோம்மா...’’ என்றவள் அருகில் நின்ற என்னைப் பார்த்து ‘‘சாமீ...’’ என்று மீண்டும் கதறினாள்.அன்று பார்த்ததுதான் முத்தாவை. அதற்கப்புறம் எங்கே இருக்கிறார்கள் என ஒரு தகவலும் இல்லை.

கால ஓட்டத்தில் பல மனித முகங்கள் மறந்து போயிருந்தாலும் ஏனோ முத்தாவின் முகம் மட்டும் அழியவே இல்லை.‘‘ராஜீவ் காந்தி... ராஜீவ் காந்தி...’’ என்ற நடத்துனரின் குரலில் திடுக்கிட்டு உணர்வு பெற்றேன்.ராஜீவ் காந்தி கல்லூரி நிறுத்தத்தில் நின்றது பேருந்து. பட்டாம்பூச்சிகளாய் மாணவ மாணவிகள் ஏறினர். சிரிப்பொலியும், கலகலவென்ற பேச்சொலியும் பேருந்தை நிறைத்தன.

‘‘எக்ஸ்கியூஸ் மீ... கொஞ்சம் தள்ளி உட்கார்றீங்களா..?’’அழகாக இருந்த அந்தப் பெண் கேட்கவேதான் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மா இறங்கிப் போயிருப்பதே தெரிந்தது.தள்ளி உட்கார்ந்தேன். குப்பென்று மல்லிகையின் மணம். தலையை அழகாகப் பின்னி நீளமாக மல்லிகைச்சரம் வைத்திருந்தாள் அந்தப் பெண். வாடியிருந்தாலும் கொஞ்சமும் குறையாது மணத்தது.

ஊர் வந்து விட்டது. காவடி ஆட்டங்கள் வழி நெடுக தென்பட ஆரம்பித்தன. மனசு சந்தோஷப் பரபரப்புக்கு போக வேடிக்கை பார்த்தேன்.‘‘வண்டி மலையடிவாரம் சுத்திப் போகுது... வண்டிப் பேட்டை எறங்கறவங்கல்லாம் எறங்குங்க...’’ நடத்துனரின் குரலுக்குக் கட்டுப்பட்டு இறங்கப் போனவள் நிதானித்தேன்.மலையடிவாரத்தில் இறங்கினால் சென்டெக்ஸ் சந்தில் பத்து நிமிஷத்தில் போய்விடலாம். மலையடிவாரத்தில் இறங்கிய என்னுடனேயே இறங்கினாள் அந்தப் பெண்ணும்.நிமிர்ந்து பார்த்து சிரித்தேன். புன்னகைத்தாள். ‘‘படிக்கிறாயாம்மா..?’’‘‘ஆமாக்கா...’’‘‘என்ன மேஜர்..?’’

‘‘எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்...’’அவளுடன் பேசியபடியே கண்களைச் சுழற்றியவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்படி மாறிவிட்டது இந்த இடம். குடிசைகள்  இருந்த இடமே தெரியாமல் தார்ஸ் கட்டிடங்கள் முளைத்திருந்தன.‘‘அக்கா... வீடு வந்துருச்சு. வர்ரேங்க்கா. எங்க பாட்டி நிக்கறாங்க...’’ என்றபடியே விடைபெற்று நடந்தாள் அந்தப்பெண்.
வயதான ஒரு மூதாட்டி கையில் கம்பு ஊன்றி அந்தப்பெண் வரும் வழியிலேயே நின்றிருந்தார்.அப்போதுதான் அவர் காதில் ஆடிய பாம்படங்களை கவனித்தேன். மனம் ஆச்சரியத்தில் கூவியது. முத்தாங்க..!ஓடிப்போய் கைகளைப் பிடித்துக் கொண்டேன். ‘‘முத்தாங்க... எப்படி இருக்கீங்க..?’’ஒரு கணம் தடுமாறியவர் ‘‘சாமீ... நீங்களா..? எப்பிடி இருக்கீங்க..? வூட்ல எல்லாம் நல்லாருக்காங்களா..? பெரிம்மா இப்புடி பொசுக்குன்னு போயிருச்சே..?’’ வாய் கேள்விகளை அடுக்க... கண்ணில் நீர் கசிந்துகொண்டிருந்தது.

‘‘வாங்கம்மா... இதான் எங்கூடு...’’ என்றபடியே அழகான அந்த வீட்டுக்குள் அழைத்துப் போனார். முன்னால் மல்லிகைக் கொடி படர்ந்து கிடந்தது. நவீன பாணியில் கட்டப்பட்டிருந்த அழகான ஹாலில் நுழைந்ததுமே கண்ணில் பட்டது ராசாவின் பெரிதுபடுத்தப்பட்ட புகைப்படமும் கூடவே மாட்டியிருந்த ரங்கனின் புகைப்படமும். பிளாஸ்டிக் மாலையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

‘‘ராசாதாம்மா... இப்பதான் இரண்டு வருஷம் முன்னாடி நெஞ்சு வலி... நிமிஷ நேரத்தில் கொண்டு போயிருச்சும்மா... நாங்க இங்க இருந்து போனவுடனேயே ராசாவோட அப்பாவும் போயிட்டார்...’’

அதுவரை நாங்கள் பேசியதையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் ஓடிப்போய் நாற்காலியை இழுத்துப் போட்டாள்.‘‘என்ன புள்ள பாக்கற... அடிக்கடி சொல்வேனில்ல பெரிம்மா... பெரிம்மான்னு... அவங்க பேத்தி...’’‘‘எப்ப வந்தீங்க இந்த ஊருக்கு..?’’‘‘இப்பதான் ரெண்டு வருஷமாச்சு மா... இங்கேருந்து போனதிலிருந்தே எங்களுக்கு நல்ல காலந்தாம்மா. ராசாவோட சிநேகிதன் வாங்கித் தந்த வேல கைபிடிச்சிருச்சுமா... மருமவளும் துணி தைக்கற மிசின் போட்டா... இந்தப் பொண்ணு மோனி பொறந்தா. நல்ல வசதியா சந்தோஷமாவும்தான் இருந்தோம்...

யார் கண்ணு பட்டதோ ராசா அப்படி பொக்குன்னு போயிட்டான். வேலை பார்த்த இடத்துல நல்ல தொகை கொடுத்தாங்க. இந்தப் பொண்ணுக்கு நம்ம ஊர் காலேசுலேயே இடம் கிடைக்க, சரி இனியாவது நம்ம சாதி சனத்தோட இருக்கலாம்னு புறப்பட்டு வந்துட்டோம்...இது என்ற தம்பி வூடும்மா...

மருமவ இப்போதான் தைக்கற கடை போட இடம் பார்த்துகிட்டு இருக்கறா... அது விஷயமாத்தான் எங்கேயோ போறேன்னு போயிருக்கா...’’‘‘பூங்கா நல்லாருக்காளா..?’’‘‘இருக்காம்மா... ஒரே பையன்தானே... கட்டடங்கட்டற படிப்பு படிச்சுட்டு வேலைக்குப் போறான். நல்ல சம்பளம். கல்யாணத்துக்குப் பாக்கறா. நாங்கூட பேத்தியவே குடுக்கலாம்னு பார்த்தேன். அதென்னவோ இப்பத்தான் சொந்தத்தில கலியாணம் முடிக்கக் கூடாதுன்னு டாக்டருங்க சொல்றாங்களாமே... கூடாதுன்னுட்டா...’’

‘‘க்கா காப்பி...’’ என்று நீட்டினாள் அந்தப் பெண். அழகான கப் அண்ட் சாசரில் காப்பியும் கூடவே அழகான தட்டில் பிஸ்கட்டுகளும் இருந்தன.என்றோ முத்தா வீட்டில் குடித்த வெள்ளி டம்ளர் ஞாபகம் வந்தது. காப்பியைக் குடித்து விட்டு மீண்டும் முத்தாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்று வெளியே வந்தேன். ‘‘பார்த்து சாமி... ஊரே சனமாக் கெடக்குது... பத்திரமாப் போங்க...’’ என்றபடியே வந்த முத்தாவைப் பார்த்து தலையாட்டியபடியே மெல்ல நடக்கத் தொடங்கினேன்.என்னைச் சுற்றிக் கொண்டது வீட்டு வாசலில் பூக்கத் தொடங்கி யிருந்த மல்லிகையின் மணம்.  

- விஜி முருகநாதன்