டால் கேர்ள் 2



மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்டது ‘டால் கேர்ள்’ ஆங்கிலப்படம். இப்போது இதன் அடுத்த பாகமான ‘டால் கேர்ள் 2’ ‘நெட்பிளிக்ஸில்’ வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.  இயல்பை மீறிய அதிக உயரம் கொண்ட பெண், ஜோடி. பள்ளியில் உடன் படிக்கும் சக மாணவ, மாணவர்கள் அவளின் உயரத்தை வைத்து கேலி செய்கின்றனர். இது அவளுக்குள் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறது.

இந்நிலையில் அவளுக்கு உறுதுணையாக இருந்து, மனதில் இடம் பிடித்து ஜோடியின் பாய் ஃபிரண்டாகிறான் டங்கல். பள்ளியில் ஓர் இசை நிகழ்ச்சி வருகிறது. அதில் பங்கேற்க ஆடிசனில் கலந்துகொள்கிறாள் ஜோடி. ஆடிசனில் வெற்றி பெற்று முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தேர்வாகிறாள்.

இருந்தாலும் அவளுக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மையால் அவதிப்படுகிறாள். தன்னால் மேடையில் ஏறி சிறப்பாக பாடி, நடனமாட முடியுமா என்று அவநம்பிக்கை கொள்கிறாள். இன்னொரு பக்கம் டங்கலுக்கும் அவளுக்கும் சின்ன பிரச்னை உண்டாகி, பிரிந்துவிடுகின்றனர். காதலனின் பிரிவு, தாழ்வு மனப்பான்மையை மீறி ஜோடி எப்படி ஜெயிக்கிறாள் என்பதே திரைக்கதை.  

தோற்றம் தரும் தாழ்வுமனப்பான்மையைத் தூக்கி எறிந்துவிட்டு, உள்ளுக்குள் நாம் எப்படியிருக்கிறோமோ அதுதான் முக்கியம் என்பதை ஆழமாகச் சித்தரிக்கிறது இந்தப் படம். ஜோடியாக பின்னியிருக்கிறார் அவா மிச்சிலி. படத்தின் இயக்குநர் எமிலி டிங் எனும் பெண்.