கெஹ்ரையான்
சென்சாரின் கிடுக்கிப்பிடியால் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி அப்ளாஸை அள்ளிவருகிறது ‘கெஹ்ரையான்’ என்னும் இந்திப்படம். அலிஷா சிறுமியாக இருந்தபோதே அம்மா தற்கொலை செய்துகொண்டார். அந்தச் சம்பவம் அவள் மனதை ஆழமாகப் பாதித்துவிட்டது. அம்மாவின் மரணத்துக்கு தந்தைதான் காரணம் என்று தந்தையை அவள் ஒதுக்கி வைத்துவிடுகிறாள்.
 இளம் வயதில் யோகா சொல்லிக்கொடுக்கும் அலிஷா, தன் துறை சார்ந்து ஒரு appபை வெளியிடுவதில் மும்முரமாக இருக்கிறாள். இதற்காக சில லட்சங்களைச் செலவு செய்தாலும் எதுவும் வெற்றிகரமாக நடப்பதில்லை. இதுபோக தன் காதலனுடன் 6 வருடங்களாக லிவிங் டுகெதராக வாழ்ந்து வருகிறாள். காதலன் ஓர் எழுத்தாளன். அவனுக்கு எந்த வருமானமும் இல்லை. அலிஷாவே எல்லா செலவையும் செய்ய வேண்டும். பொருளாதாரப் பிரச்னை அவர்களுக்குள் பிளவை உண்டாக்குகிறது.
இந்நிலையில் தனது குழந்தைப்பருவ தோழியான தியாவையும், அவளது வருங்கால கணவனான ஜெயினையும் சந்திக்க அலிஷா தன் காதலனுடன் செல்கிறாள். நாளடைவில் அலிஷாவுக்கும் ஜெயினுக்கும் இடையில் ரகசிய உறவு ஏற்பட, அது என்ன மாதிரியான விளைவுகளை நால்வரின் வாழ்க்கையிலும் கொண்டு வருகிறது என்பதே திரைக்கதை. அலிஷாவாக அதகளம் செய்திருக்கிறார் தீபிகா படுகோனே. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் நஸ்ருதீன் ஷா. படத்தின் இயக்குநர் ஷகுன் பத்ரா.
தொகுப்பு: த.சக்திவேல்
|