ஃபேஸ்புக்குக்கு என்ன ஆச்சு..?



இதுதான் இப்போது உலகம் முழுக்க பேச்சு. காரணம், உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக் முதன் முதலாக தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இழப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் முதல் முறை இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ஃபேஸ்புக் தளத்துக்கு போட்டி நிறுவனங்கள் வந்துள்ள நிலையில் இந்த இழப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஃபேஸ்புக், தன் பயனாளர்களை இழக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டில் - அதாவது அக்டோபர், டிசம்பர் மாதங்களில் ஃபேஸ்புக்கை தினசரி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 192.9 கோடியாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் 199 கோடியாக இருந்தது.

ஃபேஸ்புக் தொடங்கப்பட்டது முதல் அதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடிதான் இருந்தது. ஆனால், முதன் முறையாக கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தினசரி பயனாளர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியது. இதனால் நடப்பாண்டில் மட்டும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு சுமார் 75  ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கணிப்பு வெளியான பிறகு மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20% அதாவது 200 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இந்திய மதிப்பீட்டின்படி ஒரே நாளில் ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவின் சந்தை மதிப்பு சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது.ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் சரிவுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றி அமைத்த பாதுகாப்பு அம்சமும் காரணம். ஆப்பிள் செய்துள்ள விதி மாற்றத்தின் மூலம் மட்டும் 2022ல் 10 பில்லியன் டாலர் வருவாய் இழக்கும் நிலை உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக, செயலிகளைக் கண்காணிக்கும் வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாகத் தங்களுடைய ஆன்லைன் செயல்பாடுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து கண்காணிப்பதை விரும்பவோ, தடுக்கவோ ஐபோன் உரிமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பையும் அளித்தது ஆப்பிள். இப்படித் தனியுரிமையைப் பாதுகாக்கும் வாய்ப்பை ஆப்பிள் நிறுவனம் அளித்ததால், மெட்டா நிறுவனத்தின் வியாபாரத்துக்கு பலத்த அடியாக விழுந்தது. ஏனென்றால், இனி ஃபேஸ்புக்கும் இதர செயலிகளும், வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து பின்தொடர அனுமதிக்குமாறு அவர்களிடமே கேட்டாக வேண்டும்.

இதனாலேயே பல வாடிக்கையாளர்கள் மெட்டாவிலிருந்து வெளியேறினர். ஃபேஸ்புக்குக்கு இனி பயனீட்டாளர் பற்றிய தரவுகள் குறைந்துவிடும். அதனால் இலக்கு வைத்து வாடிக்கையாளர்களைப் பின்பற்றி வந்த அதன் வியாபாரம் சரிந்துவிடும். இதனால் நிறுவனத்தின் வருமானம், லாபம் இரண்டும் கடும் பாதிப்பை எதிர்கொள்ளும். அதேபோல் டிக்டாக், யூ டியூப் போன்ற செயலிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும் ஃபேஸ்புக்கை விட்டு பயனாளர்கள் வெளியேற காரணமாகக் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சீனத்தின் டிக்டாக் செயலி மிகப் பெரிய எதிரியாகவே திகழ்ந்தது. அதில் வெளியான குறுகிய கால வீடியோக்களுக்கு 100 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏற்பட்டுவிட்டனர். அது இப்போது மெட்டாவின் இன்ஸ்டாகிராமுடன் கடுமையான போட்டியிலிருக்கிறது. டிக்டாக்கைப் போலவே இன்னொரு செயலியை மெட்டா உருவாக்கியது. அது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற வீடியோ காட்சிகளையும் கொண்டது. அதுவே இப்போது அதன் செயலிகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவதில் முதலிடத்தில் இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் படிப்பதை விட, வீடியோ காட்சிகளைப் பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். அதுவும் குறுகிய கால வீடியோவின் சுவாரசியத்திற்கு அடிமையாகியுள்ளனர். எனவே, அதற்கேற்றாற் போல் புதிய புதிய செயலிகளும் ஃபேஸ்புக்குக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துவிட்டன. அதை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் தடுமாறி நிற்கிறது ஃபேஸ்புக்.

அடுத்து ஃபேஸ்புக்கின் லாபத்தைவிட சில கட்டுப்பாடுகளால் கட்டிய அபராதங்களே அதிகம். ‘கடும் போட்டியின் எதிரொலியாக வரும் காலத்தில் ஃபேஸ்புக்கின் தினசரி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் சரியும். இதனால் வருவாயின் வீதம் குறையும்’ என உலவி வரும் செய்திகளும் சரிவுக்கு காரணம் என்கின்றனர்
நிபுணர்கள்.

அதோடு சமூகவலைத்தளங்களின் அடுத்த தலைமுறை மெட்டாவெர்ஸ் என்று ஃபேஸ்புக்கின் நிறுவனரான ஜூகர்பர்க் நம்புகிறார். அதற்காக மேலும் பல கோடிகளைச் செலவிடவும் தயாராக இருக்கிறார். META UNIVERSE என்ற வார்த்தைகளை இணைத்து உருவானதுதான் METAVERSE. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்துக்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பதுதான் இதன் அர்த்தம்.

கடந்த ஆண்டு மட்டும் 1,000 கோடி டாலர்களுக்கும் மேல் இதற்காக செலவிட்டார். இன்னும் அதிகமாகக் கூட செலவு செய்யவும் விரும்புகிறார். ஆனால், மெட்டாவெர்ஸ் இன்னும் சயின்ஸ் ஃபிக்‌ஷனாக மட்டுமே இருக்கிறது. எதார்த்தத்தில் - பிராக்டிக்கல் அப்ளிகேஷனாக எங்கேயுமே கிடையாது.

எனவே, மக்கள் அதிகம் விரும்பும் வெற்றிகரமான செயலியை நோக்கி முதலீட்டாளர்கள் நகர ஆரம்பித்துள்ளனர். ஒரு வேளை மெட்டாவெர்ஸ் மட்டும் வெற்றிகரமாக அமைந்துவிட்டால் ஃபேஸ்புக், தான் இழந்ததை இரட்டிப்பாகப் பிடித்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

எத்தனை பேர் எந்தெந்த தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்..?

ஒன்றிய அரசு இந்தியாவில் சமூக வலைத்தளங்களை எத்தனை கோடிப் பேர் பயன்படுத்துகிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்          53 கோடிப் பேர்.
யூ டியூப்          44.8 கோடி.
ஃபேஸ்புக்           41 கோடி.
இன்ஸ்டாகிராம்     21 கோடி.
டுவிட்டர்          1.75 கோடி.

ஃபேஸ்புக் ஆண்டுக் கணக்கில் புழக்கத்தில் இருந்தும் 41 கோடிப் பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதன் பின் வந்த இன்ஸ்டாகிராமை 21 கோடிப் பேர் பயன்படுத்துகிறார்கள். டிக் டாக்கை இந்தியாவில் தடை செய்த பிறகு இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியர்கள் சமூகவலைத்தளத்தை பயன்படுத்தும் நேரம்

காலை  - குறைந்தபட்சம் 30 நிமிடங்கள்.
மாலை  - குறைந்தபட்சம் 30 நிமிடங்கள்.
இரவு    - குறைந்தபட்சமாக 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை.

சமூக வலைத்தளங்களில் நேரத்தை குறைக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தால் கூட அவர்களாலேயே அப்படிச் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு சமூகவலைத்தளத்துக்கு மக்கள் அடிமையாக இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் மட்டுமே பார்த்துவிட்டு வெளியே வந்துவிடலாம்... என தீர்மானித்தால் கூட, அப்படி முடியாமல் அடுத்தடுத்த நேரங்களை அந்த சமூக வலைத்தளங்கள் விழுங்கிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் துயரம். இது லாபக் கணக்கு மட்டுமல்ல, மக்களின் உளவியல் சார்ந்த பிரச்னையும் கூட...

அன்னம் அரசு