நேபாள் யூடியூபர்ஸ்!



நேபாளம் என்றாலே கூர்காதான் முதலில் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், இப்போது அவர்களது யூடியூப் சேனல்களும் பிரபலமாகி வருகின்றன. அங்கே பல இளைஞர்கள் யூடியூப் சேனலைத் தொடங்கி, பணம் சம்பாதிப்பதை ஒரு தொழில் போலவே செய்துவருகிறார்கள். தவிர, கலைத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பிரத்யேக யூடியூப் சேனல்களும் மக்களை வசீகரிக்கின்றன. இதில் முதன்மையான சில நேபாள யூடியூப் சேனல்களைப் பற்றிய அறிமுகம் இதோ...

தி சோனிகா ஷோ (The Sonica Show)

மாடல், டான்ஸர், ஆர்ஜே, விஜே என பன்முகங்களைக் கொண்ட சோனிகா ரோகயாவின் சேனல் இது. நேபாளத்திலுள்ள தங்கதி எனும் ஊரில் பிறந்த சோனிகா, மாஸ் கம்யூனிகேஷன் படித்தவர். காத்மண்டுவில் செயல்பட்டு வந்த ஒரு யூடியூப் சேனலில் விஜேவாக பணியாற்றியபோது, தனியாக ஒரு யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் சோனிகாவுக்குள் துளிர்விட்டது. உடனே அந்த வேலையிலிருந்து விலகி, அக்டோபர் 8, 2017ல் ‘தி சோனிகா ஷோ’வை ஆரம்பித்துவிட்டார்.

ஏதாவது ஓர் இடத்துக்குச் சென்று அங்குள்ள சுவாரஸ்யமான விஷயங்களை வீடியோவாக்குவது, பிரபலங்களிடம் இரட்டை அர்த்தங்களில் கேள்விகளைக் கேட்டு அவர்களைத் திக்குமுக்காட வைப்பது, பொதுமக்களிடம் விந்தையான கேள்விகளைக் கேட்டுப் பதற வைப்பது... போன்ற லைவ் டாக் ஷோக்கள்தான் இந்தச் சேனலில் கொட்டிக்கிடக்கின்றன.

சில வீடியோக்கள் 10 லட்சம், 20 லட்சம் பார்வைகளைத் தாண்டி வைரலாகியிருக்கின்றன. சோனிகாவின் கவர்ச்சியான உடைகளும், எப்போதுமே சிரித்த முகத்துடன் அவர் நடத்தும் டாக் ஷோக்களும் பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. இதுவரை இந்தச் சேனலை 5.53 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதிலுள்ள வீடியோக்களை 7.9 கோடிப்பேர் பார்த்துள்ளனர்.

மியூசிக் நேபாள் (Music Nepal)

நேபாளத்தில் அதிக பார்வைகளை அள்ளும் யூடியூப் சேனல் இது. தவிர, நேபாள மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் யூடியூப் சேனலும் இதுவே. ‘மியூசிக் நேபாள்’ எனும் இசை நிறுவனம் நடத்திவரும் இச்சேனல் உலகளாவிய இசைப்பிரியர்களுக்கு பெரிய பொக்கிஷம். ஆம்; நாட்டுப்புறப் பாடல்கள், நவீன பாடல்கள், பழைய மற்றும் சமகால நேபாள் இசைக் கலைஞர்களின் பாடல்கள் என பல்வேறு இசை வகைமைகளைச் சேர்ந்த பாடல்கள் இங்கே குவிந்து கிடக்கின்றன.

வேற்று மொழிப் பாடல்களும், வித்தியாசமான இசைக்கருவிகளைப் பற்றிய தகவல்களும் கிடைக்கின்றன. இதுவரை நேபாளத்தில் வெளியான பாடல்களில் 90 சதவீதத்தையும், 25 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களின் ஒரிஜினல் பிரதிகளையும் தன்வசம் வைத்துள்ளது ‘மியூசிக் நேபாள்’. இந்தச் சேனலில் பங்களித்த, பங்களிக்கும் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ராயல்டியும் வழங்கப்படுகிறது. நேபாளத்தில் இசைக்கலைஞர்களுக்கு ராயல்டி வழங்கும் முதல் சேனலும் இதுதான். செப்டம்பர் 7, 2011ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 66 லட்சத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதில் பதிவான வீடியோக்களை 367 கோடிக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.

2பி கேமர் (2B Gamer)

நேபாளத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் சேனல்களின் பட்டியலில் 6ம் இடம், அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட நேபாளத்தின் கேமிங் சேனல் என இச்சேனலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். காத்மண்டுவில் பிறந்த சந்தேஷ் தமாங் எனும் வீடியோ கேம் பிரியர் இச்சேனலை நடத்தி வருகிறார். செப்டம்பர் 27, 2019ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேனலை 36.5 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

சேனல் ஆரம்பித்த ஒருசில வருடங்களிலேயே இவ்வளவு சப்ஸ்கிரைபர்களை அள்ளிய ஒரே நேபாள் யூடியூபர் சந்தேஷ்தான். இச்சேனலில் நேபாளத்தில் பிரபலமான ‘ஃப்ரீ ஃபயர்’ கேமை சந்தேஷ் விளையாடுவதைப் பார்க்கவே கூட்டம் அள்ளுகிறது. விளையாடும்போது ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால் அதை நகைச்சுவையாக்கி பார்வையாளர்களின் அப்ளாஸை அள்ளுகிறார் சந்தேஷ். உலகளவில் ‘ஃப்ரீ ஃபயர்’ கேமை வேகமாக விளையாடுபவர்களில் இவரும் ஒருவர். இதுவரை ‘2பி கேமர்’ சேனலில் வெளியாகியிருக்கும் வீடியோக்களை 46 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

யம்மி ஃபுட் வேர்ல்டு (Yummy Food World)

நேபாளத்தின் முக்கியமான சமையல் யூடியூப் சேனல் இது. இதை நிர்வகித்து வருபவர் மகர்ஜன். சின்ன வயதிலிருந்தே உணவுப் பிரியையாக இருந்தவர் மகர்ஜன். அதனால் இந்திய உணவு, மேற்கத்திய உணவு சம்பந்தமான யூடியூப் சேனல்களைப் பார்ப்பது அவரது வழக்கம். நேபாள உணவுக்கு என்று ஏதாவது சேனல் இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் அவரே நேபாள உணவுக்கென்று பிரத்யேகமான இந்தச் சேனலைத் தொடங்கிவிட்டார்.

வீடியோவில் பின்னணியில் இருந்து சமையல் பற்றிய அவரது குரல் மட்டுமே கேட்கும். முகத்தைக் காட்டவே மாட்டார் மகர்ஜன். நேபாளத்தின் பாரம்பரிய உணவுகள் முதல் இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் வரை இருநூறுக்கும் மேலான ரெசிப்பிகள் சேனலை அலங்கரிக்கின்றன. ஜனவரி 31, 2016ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 9.3 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதில் பகிரப்பட்ட சமையல் வீடியோக்களை 12 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சேனல் ஆரம்பித்த முதல் மாதத்தில் வெறும் 150 பார்வைகள் மட்டுமே கிடைத்தது என்பதுதான் ஹைலைட்.

ஓஎஸ்ஆர் டிஜிட்டல் (OSR Digital)

நேபாள திரைப்படங்கள் குறித்த அனுபவம் வேண்டுமா? உடனே இச்சேனலுக்கு விசிட் அடியுங்கள். நேபாளத்தில் அதிகளவில் திரைப்பட சிடி, விசிடி, டிவிடியை விநியோகிக்கும் நிறுவனம் ‘ஒஎஸ்ஆர் டிஜிட்டல்’. இந்நிறுவனத்தின் பிரத்யேக யூடியூப் சேனல்தான் இது. யூடியூப்பில் சூப்பர் ஹிட் நேபாள படங்களை வழங்கும் ஒரே சேனலும் இதுதான். நேபாள சினிமா குறித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று நவம்பர் 19, 2014ல் இச்சேனல் தொடங்கப்பட்டது.

ஆக்‌ஷன், காமெடி, ரொமாண்டிக், ஹாரர், டிராமா என பல வகைமைகளில் நேபாளப் படங்கள் குவிந்து கிடக்கின்றன. இதுபோக நேபாள வெப் சீரிஸ்களும், நகைச்சுவை வீடியோக்களும், சீரியல்களும் காணக்கிடைக்கின்றன. இதில் பதிவிடப்பட்ட எல்லா வீடியோக்களும் டிஜிட்டல் உரிமம் பெற்றவை. இதுவரை இச்சேனலை 53.4 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதில் வெளியான வீடியோக்களை 237 கோடிப்பேர் பார்த்துள்ளனர்.

த.சக்திவேல்