மதுரைக்கு வடை சாப்பிட வாங்க!



தூங்கா நகர் எனும் பெயருக்குரிய மதுரை, ‘உணவுகளின் பெருநகரம்’ என பெருமை கொண்டிருக்கிறது. சங்க காலம் முதலே ‘உண்டு உயர்ந்தோர்’ பட்டியலில் இந்நகர்வாசிகளே நகராமல் நின்று நிலைக்கின்றனர்.‘மதுரைக் காஞ்சி’ வாசிப்போர், இந்நகரத்து தெருக்களில் மணக்கும் விதவித உணவுகளையும் நுகர்ந்துணர முடியும்.
மதுரையில் ஒவ்வொரு உணவுச் சாலையையும் அடையாளம் காட்டிட அக்காலத்தில் கடை வாசலில் ‘தனியாக ஒரு கொடி’ பறக்கவிடப்பட்டதும் அறிய முடிகிறது. வேறுபட்ட உணவுகளை, சுவை குன்றாது வழங்கிட அக்காலத்தில் ‘அறக்கூழ் சாலை’ பெயரில் ஆங்காங்கே உணவுக்கூடங்கள் இருந்ததும் தெரிகிறது.

வாசிக்கிற இலக்கியங்கள் அத்தனையிலும் மதுரையில் பரிமாறிய உணவுகளின் பட்டியலைப் பார்க்கலாம். வாழை, மா, பலா என்னும் முக்கனிகளோடு, முந்திரி வரை இவ்வூரில் கிடைத்திருக்கிறது. பாகல், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளுடன், சர்க்கரைப்பாகும் கலந்து பரிமாறிய வேறுபட்ட மதுரை உணவுகளை பழமை மனிதர்களும், பழங்காலத்து இலக்கியங்களும் மட்டுமல்ல, இக்காலத்தவரும் பேச மறப்பதில்லை.

‘நாளங்காடி’ எனும் பகல் கடைகளுடன், ‘அல்லங்காடி’ என்ற இரவுக்கடைகளும் அக்காலம் முதல் விடிய விடிய விழித்துக் கிடந்ததாலேயே மதுரை நகரம் ‘தூங்காநகர்’ என பெயர்
பெற்றிருக்கிறது. தெருக்கள்தோறும் சத்திரங்கள்... இந்த சத்திரங்கள் தோறும் அறுசுவை உணவு பரிமாறல் என அக்காலத்திலேயே மதுரை அசத்தி வந்திருக்கிறது. உணவுக்குப்பிறகு, உண்போர் நலன் கருதி ‘இஞ்சிச் சாறு’, ‘சுக்குத் தண்ணீர்’ கொடுக்கும் வழக்கமும் இங்கிருந்தது.

இன்றைக்கும் உறவுகளை, நட்புகளை சந்திக்கிறபோதெல்லாம் மதுரைவாசிகளின் முதல் வார்த்தை ‘சாப்பிடுங்க’ என்பதாகவே இருக்கிறது. வேறெங்கும் இல்லாத வகையில் ‘சோத்துக் கடைத் தெரு’ மதுரையில்தான் இருக்கிறது. கூழும், கஞ்சியுமாகக் கழிந்த காலத்தில், கொப்பரைகளில் சமைத்தெடுத்த சோறு பரிமாறல் இங்கேதான் நடந்திருக்கிறது.

ஒவ்வொரு சமயத்தவரின் வேறுபட்ட அசைவம், சைவம் என அத்தனை வகை ஒட்டுமொத்த உணவுகளையும் ருசிக்கலாம். புளியோதரை உள்ளிட்ட ‘வெரைட்டி ரைஸ்’ தொடங்கி, மாவுத் துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுத்துத் தரும் இனிப்பான ‘கேக்’ வரை இன்றைக்கும் ரோட்டோரக் கடைகள் பசி போக்குகின்றன.

வெகு காலத்திற்கும் முன்பே ‘பிரியாணி’ சுவையை மதுரை மக்கள் உணர்ந்திருந்தனர். 1970க்குப் பிந்தைய நாட்களில் இந்நகருக்குள் நுழைந்த ‘பரோட்டா’வும், 1980களில் உச்சத்து வரவேற்பில் இருந்த ‘முட்டை போண்டா’வும் இப்போதும் இவ்வூரில் அடையாளம் பேசுகின்றன.

பழங்காலத்தில் ‘ஆங்கிலோ இண்டியன்ஸ்’ வசித்த ரயில்வே காலனி, எஸ்எஸ் காலனி பகுதிகளில் விதவிதமாக விற்பனையில் இருந்த பிஸ்கெட்டும், கேக்குகளும் இப்போது பரந்து விரிந்து நகர்ப்புறத்து பல்வேறு கடைகளிலும் ருசிக்க முடிகிறது.

தரையில் சம்மணமிட்டு அமர்ந்து வாழை இலையில் பரிமாறியதும், பின்னாளில் தரையில் அமர்ந்தபடி, முன்புறம் சிறிய ஸ்டூல் போட்டு அதன்மீது தட்டு வைத்து உண்டதும், இப்போது டேபிள், சேர் போட்டு பரிமாறிய உணவையும் கடந்து, உணவகங்களில் மட்டுமல்லாது, தெருவோரங்களிலும் நின்றபடியே சாப்பிடுகிற ‘பஃபே’ சிஸ்டத்திற்கும் மதுரை நகரம் வந்திருக்கிறது.

எத்தனையோ காலமாற்றங்களைக் கடந்து, இப்போதும் மதுரையின் ரோட்டோரக் கடைகளில் வேறுபட்ட சுவைகளுடன் இந்நகரத்து பெருமையை விதவித உணவுகளே அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இதன் உச்சமாக திரும்பும் திசையெங்கும் மதுரையில் ‘வடை’ கடைகள் பெருகிக் கிடக்கின்றன.வறியோருக்கான வயிற்றுப்பசியைப் போக்குவதோடு, வசதியுடையோரின் நாகரீக உணவிலும் ‘வடை’ தனி இடம் பிடித்திருக்கிறது. ‘வடை சுடும் நிலவுப்பாட்டி’, ‘பாட்டியிடம் வடை திருடிய காகம்...’ இப்படி பழங்கதைகளில் இடம்பிடித்த வடைக்கான வரலாறு பழமையானது என்கின்றனர். பழங்குறிப்புகளாலும் இது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை அறிய முடிகிறது.

ஆன்மிகத்திலும் அனுமனுக்கு ‘வடை மாலை’ சாற்றுதல் இருக்கிறது. திருப்பதியின் பிரசாதத்தில் இப்போது லட்டு இருக்கிறது. 1460களில் அங்கே ‘வடை’தான் பிரசாதம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஸ்டால் உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை கோயில்களிலும் கோயில் பிரசாத ஸ்டால் பட்டியலில் ‘வடை’ முக்கிய இடம்பிடித்திருக்கிறது.

உளுந்து மாவில் தட்டிப்போட்டு, ஓரங்களும் விரைவாக வேகும் விதமாகவே உளுந்து வடைக்கு நடுவில் நம்மவர்கள் ஓட்டை இட்டனர். மென்மைத் தன்மைக்குரிய இந்த ‘மெது’ வடை முதல், கடலைப் பருப்பிலான ‘ஆமை ஓடு’ கடுமையுடனான ‘மசால் வடை’ எனும் பருப்பு வடையான ‘ஆம வடை’ வரை, ஏகப்பட்ட வடைகள் இவ்வூரில் ராஜ்ஜியம் நடத்துகின்றன.

மதுரை உணவகங்களில் உளுந்து வடையை தயிருக்குள் ஊற வைத்து ‘தயிர் வடை’யாக, சாம்பாருக்குள் மூழ்கடித்து ‘சாம்பார் வடை’யாகவும் மேலே கொஞ்சம் ‘காரா பூந்தி’ தூவித் தருவது பேரழகு. இன்னும் உடல் நலம் காக்கும் விதத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ரோடு, மகால் பகுதி, முனிச்சாலை உள்ளிட்ட இடங்களில் இட்லிப்பொடி தூவிய சளி விரட்டும் குட்டி பூரியை நினைவுறுத்தும் ‘முள்முருங்கை வடை’ விற்கப்படுகின்றது.

நகரம் முழுக்க உடல் வலிமை கூட்டும் ‘கீரை போண்டா வடை’, ‘கருப்பு உளுந்து வடை’, சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் ‘வாழைப்பூ வடை’ என வகை வகையாய் ‘நலம்’ சேர்க்கும் வடைகள் கடிக்கலாம்.நகருக்குள் தினம் 2 ஆயிரத்திற்கும் அதிக வடைகள் விற்கும் ஏகப்பட்ட இடங்கள் இருக்கிறதென்றால் வாயடைத்துப் போவீர்கள்! அந்தளவிற்கு மதுரைக்காரர்கள் வடைப்பிரியர்கள். உயர்தர, நடுத்தர ஹோட்டல்களில் மட்டுமல்லாது, ரோட்டோரக் கடைகளிலும், மூலைக்கு மூலை தள்ளுவண்டிகளிலும் சுவை, சுகாதாரம், விலை குறைவுடனும் வடை ‘மெல்ல முடிகிற ஊரா
கவே’ மதுரை இருக்கிறது.

இனிப்புடன், காரம் உண்டு டீ அருந்தும் பழக்கம் இவ்வூரில் பலருக்கும் இருக்கிறது. ‘அப்பமோ’, ‘தேங்காய், பருப்பு போலியோ’, ‘சீயமோ’, ‘கேசரியோ’... இனிப்பில் தொடங்கி, தேங்காய்ச் சட்னியோடு, சாம்பாரும் ஊற்றித்தரும் ‘உளுந்துவடை’, ‘மசால்வடை’, ‘காரவடை’, ‘வெங்காயவடை’, ‘மைசூர் போண்டா என்ற பட்டணம் பக்கோடா’, ‘கிழங்கு போண்டா’, ‘சமோசா’ என ‘காரத்தில்’ காலை உணவையே ரோட்டோரத்தில் முடிக்கிற ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

வாழைக்காய் பஜ்ஜியே அதிகம் பார்த்த நிலையில், இங்கே ‘கத்தரி’, ‘உருளை’, ‘வெங்காயம்’ என்பதோடு ‘அப்பள’த்திலும் பஜ்ஜி செய்து சுவையில் அசத்துகின்றனர்.வடைகளுக்கு பல கடைகளிலும் வித்தியாசமாக ‘ஆனியன் தக்காளி குருமா’ பரிமாறுவது இவ்வூரில்தான் அதிகம். இன்னும், தக்காளி மல்லி கலவைச் சட்னி, புதினா, மிளகாய் சட்னி என விதவித சட்னி பார்க்கலாம். ஓரிரு இடங்களில் ஒற்றை வடைக்கு நான்கைந்து விதத்தில் சட்னி, சாம்பார் பரிமாற்றம் இருக்கும்.

மதுரையின் மேலமாசி வீதி - வடக்குமாசி வீதி சந்திப்பில் இருக்கும் பெயரில் இனிப்பு கொண்டிருக்கிற ‘பாம்பே ஸ்வீட்ஸ்’, ‘கார வடைகள்’ விற்பனையில் கலக்கி வருகின்றன.
மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்டில் இருக்கும் இரு வடை கடைகளில் எப்போதுமே தட்டில் ‘சூடு’ பறக்கிறது.

சைஸ் பெரிதான இந்த வடைகளை ஒன்றிரண்டு சாப்பிட்டாலே பசி பறந்து போகும். மதுரை பழைய ராஜ்மகால் கடையிலிருந்து அம்மன் சன்னதிக்கு திரும்பும் சந்திப்பு, பெரியார் பஸ் ஸ்டாண்ட் கேபிஎஸ் ஓட்டல் வாசல், கிராஸ் ரோடு, செல்லூர் மெயின் ரோடு செல்வம் கடை உள்ளிட்ட கடைகள், மாட்டுத்தாவணி உள்ளிட்ட நகரின் பிடிஆர் கடைகள்... இப்படி திரும்பும் திசையெங்கும் வடைக்கடைகள் வாழ்கின்றன.

இத்தோடு யானைக்கல் ஆசீர்வாதம் கடை, பீபீகுளம் மீனாட்சி ஜங்ஷன் முதல் கூடல்நகர் பாலம், அண்ணாநகர், ஐயர் பங்களா, காளவாசல், தெற்குவாசல், பழங்காநத்தம், கோரிப்பாளையம், கிருஷ்ணாபுரம் காலனி, வில்லாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏகப்பட்ட கடைகள், வண்டிகளில் விற்கும் வடைகள்... இப்படி நகருக்குள் எங்கு நோக்கினாலும் ‘வடை மணக்கும்’ தெருக்கள் இருக்கின்றன. நகரைக் கடந்து புறநகர்ப் பகுதிகளிலும் ‘வடை கடை’களே வியாபித்துக் கிடக்கின்றன.  

இந்த ஊரில் வடை சுடும் பாட்டிகளிடம் எந்த காகமும் வடை திருடுவதில்லை. காரணம், சுடும் முதல் வடையை காக்கைக்கு வைத்துவிட்டே வியாபாரம் தொடர்கிற பண்பாடும் பார்க்க முடிகிறது. எண்ணெய்ச்சட்டியில் இருந்து கரண்டியில் எடுத்து கண்ணாடிப் பெட்டிக்குள் கொட்டக் கொட்ட இலைத்தட்டில் மாற்றி வைத்து, சட்னி, சாம்பார் கொட்டி பரிமாறும் இந்த சூடு பறக்கும் வடையைப் பிட்டு வாய்க்குள் போட்டு, அதீத ருசியால் லேசான கண்ணயர்வில்... நிச்சயம் சொர்க்க சுகத்தை ஒவ்வொருவர் உள்மனதும் உணர்வது நிச்சயம்.
அப்புறமென்ன... மதுரைக்கு வடை சாப்பிட கிளம்பலாம் வாங்க!

செய்தி: செ.அபுதாகிர்

படங்கள்: மீ.நிவேதன்