97 வயதில் ஆல்பம்!



அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண் இசைக்கலைஞர் ரூத் சிலன்சின்ஸ்கா. இவருடைய முன்னோர்கள் போலந்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய தந்தை ஜோசப் வயலின் இசைக்கலைஞர். மாபெரும் இசை மேதைகள் மொசார்ட், பீத்தோவன் போல சிறு வயதிலேயே இசையைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார் ரூத்.
ஆம்; ரூத்திற்கு மூன்று வயதாக இருந்தபோதே பியானோ கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார் தந்தை ஜோசப். இடைவிடாமல் பியானோ இசைத்துக்கொண்டிருந்த ரூத்தை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்து, இசை குறித்து மேலும் கற்றுக்கொள்ள வழிவகை செய்துதந்தார். அப்போது ரூத்திற்கு வயது நான்குதான்.

ஆறு வயதில் ஜெர்மனியில் உள்ள ஆர்கெஸ்ட்ராவில் பியானோ இசைப்பவராகத் தேர்வானார். இவ்வளவு சிறு வயதில் ஒரு பெண் இசைக்கலைஞராக ஒரு ஆர்கெஸ்ட்ராவில் பணியாற்றியது இதுவே முதல் முறை. ஏழு வயதில் பிரான்ஸில் உள்ள இசைக்குழுவில் முக்கியமான பியானிஸ்ட்டாகிவிட்டார்.

மூன்று வயதில் ஆரம்பித்த ரூத்தின் இசைப்பயணம் 97 வயதிலும் தொடர்கிறது.
ஆம்; சமீபத்தில் தனது 97 வது பிறந்த நாளைக் கொண்டாடிய ரூத், புதிதாக ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆல்பத்தை அமெரிக்காவின் பிரபல இசை நிறுவனமான ‘டெக்கா ரெக்கார்ட்ஸ்’ வெளியிட்டுள்ளது.  

தொகுப்பு: த.சக்திவேல்