COFFEE TABLE
ரூ.300 கோடி வசூலில் புஷ்பா!
‘சாமி... சாமி...’, ‘ஊ... சொல்றியா மாமா... ஊ... ஊ... சொல்றியா மாமா...’ என முனகிக் கொண்டிருக்கிறார்கள் பலரும். அந்தளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘புஷ்பா: தி ரைஸ்’!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இந்தப் படம் தெலுங்கில் மட்டுமின்றி உலக அளவில் ரூபாய் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இது, ‘பாகுபலி’ பார்ட் 1, பார்ட் 2, ‘சாஹோ’ ஆகியவற்றுக்கு அடுத்ததாக டோலிவுட்டில் முந்நூறு கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்த நான்காவது படம் என்கிறார்கள்.
 தவிர இந்தி மார்க்கெட்டில் இப்படம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. இப்போது இந்தி மொழியில் ரூ.57 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. அத்துடன் ஒருநாள் வசூலில் ரூ.6 கோடிக்கும் மேல் தொட்டு இன்னொரு சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது. சென்ற வாரம் அமேசான் பிரைமில் வெளியாகி, சமீபத்திய வெளியீட்டில் அதிகம் பார்க்கப்பட்ட படமாகவும் ‘புஷ்பா’ வசீகரிக்கிறது.
 எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்!
ஆக்ஸ்ஃபாம் (Oxfam) என்ற ஒரு உலகத்தரத்திலான தனியார் அமைப்பு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நிலையை புள்ளி விவரப்படி வச்சு செய்கிறது. அண்மையில் இது இந்தியா தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆய்வு, தலையில் ஆணியைச் செருகுவதாகவே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பொருளாதாரச் சிக்கலில் உழன்றுகொண்டிருக்க, 2021ல் மட்டும் இந்தியாவின் 100 கோடிக்கும் அதிகமான சொத்துள்ள பணக்காரர்கள் (பில்லியனர்கள்) 102லிருந்து 142 ஆக உயர்ந்திருப்பதாகச் சொல்கிறது இந்த ஆய்வு.
இதற்கடுத்து இன்னொரு புள்ளி விவரம் இதைவிட பேரிடியைத் தருகிறது. அதாவது, இந்தியாவின் சொத்துக்கள் யாரிடம் அதிகமாக இருக்கிறது என்பது பற்றியது. இந்தியாவில் கடைக்கோடியில் இருக்கும் 40 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்தின் மதிப்பு ரூ.555 கோடி என்றால், அதே அளவு சொத்து வெறும் 98 பேரிடம் இருப்பதாக அதிர்ச்சி காட்டுகிறது. இத்துடன் நிற்காமல், கடந்த இந்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கும், கல்விக்குமாக ஒதுக்கும் நிதியை ஒன்றிய அரசு குறைந்திருப்பதாக குற்றம் சாட்டுகிறது இந்த ஆய்வு.
முதல்இடத்தில் டோலோ 650
இப்போது இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் எல்லோருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸாகவே டோலோ 650 மாத்திரை மாறியிருப்பதாகச் சொல்கிறது தகவல் ஒன்று.
ஆம். பாரசிட்டமால் வரிசையில் இருக்கும் காய்ச்சலை குணப்படுத்தும் டோலோ 650 கடந்த 2020 மார்ச்சிலிருந்து இப்போது வரை 5.7 பில்லியன் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. அதாவது 570 கோடி ரூபாய் வரை விற்பனை. ஓர் ஆண்டு மட்டும் 140 கோடி மாத்திரைகள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த நவம்பர் 2021 வரை 220 கோடி மாத்திரைகளாக உயர்ந்துள்ளது. மொத்தத்தில் 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் இந்தப் பெருந்தொற்று காலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
ஆன்ட்டியை பிரேக் அப் செய்த யூத்!
கலி முற்றிவிட்டது... வேறென்ன சொல்ல! ‘சைய சைய சையா... சையா...’ என ‘உயிரே...’ படத்தில் 90களில் ரயில் மீது கெட்ட ஆட்டம் போட்ட மாளவிகா அரோராவும் இந்தி நடிகர் அர்ஜுன் கபூரும் டேட்டிங்... ரொமான்சிங்... என கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்ததுதான் பாலிவுட்டின் வைரல்.ஓர் ஆணும் பெண்ணும் டேட்டிங் செய்வதோ அல்லது ரொமான்ஸ் செய்வதோ செய்தி அல்ல. ஆனால், மாளவிகா அரோரா + அர்ஜுன் கபூர் விஷயம் சர்வநிச்சயமாக ஹாட் நியூஸ்தான். காரணம், மாளவிகாவுக்கு வயது 49... அர்ஜுன் கபூருக்கு வயது 37.
தவிர 20 ஆண்டுகளுக்கு மேல் திருமண வாழ்க்கை வாழ்ந்து சமீபத்தில்தான் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார் மாளவிகா அரோரா. இவரது கணவர்... மன்னிக்க முன்னாள் கணவர் வேறு யாருமல்ல... சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான்தான். இவை எல்லாம் பாலிவுட் படங்களைப் பார்க்கத் தொடங்கும் சிசுவுக்குக் கூடத் தெரியும். எனவேதான் மாளவிகா + அர்ஜுன் கபூரின் டேட்டிங்... ரொமான்சிங் எல்லாம் சர்வதேச அளவில் பேசு பொருளானது.
ஆனால், சர்ச்சையாகவில்லை. காரணமும் இந்த ஜோடிதான். இருவருமே ‘வயது ஒரு பொருட்டல்ல...’ என பகிரங்கமாக அறிவித்தார்கள். போலவே தங்கள் ரிலேஷன்ஷிப்பையும் மறைத்து கிசுகிசு கேட்டகிரியில் கொண்டு வரவில்லை. பொதுமக்கள் பார்க்கும் விதத்தில்தான் ஊர் சுற்றினார்கள்; தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
யார் கண் பட்டதோ... கடந்த சில மாதங்களாக மாளவிகாவும் அர்ஜுன் கபூரும் சந்திக்கவில்லை. பொது இடங்களில் பார்க்க நேர்ந்தாலும் விலகிச் செல்கிறார்கள். இந்த விலகலால் மாளவிகா அப்செட்டில் இருப்பதாகவும், வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் செய்திகள் கசிகின்றன. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... அர்ஜுன் கபூர் வேறு யாருமல்ல... போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான். அதாவது, மறைந்த நடிகை தேவி, இவருக்கு சித்தி. யெஸ்... அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத் தயாரிப்பாளரின் மகன்தான் அர்ஜுன் கபூர்!
ஜோகோவிச்சிற்கு தடை...
ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸில் விளையாட உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சிற்கு அனுமதி மறுக்கப்பட்டதுதான் கடந்த வார ஓப்பன் டாக் மேட்டர். இருபது முறை ஆண்கள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் செர்பியாவின் நாவோக் ஜோகோவிச். இதில் ஒன்பது முறை ஆஸ்திரேலியா ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். இப்போது வென்றால் 21வது முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்ற உலகின் முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருப்பார். ஆனால், அது நடக்கவில்லை. காரணம், இதுவரை ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பதுதான். இதனால், ஆஸ்திரேலியா அரசு அவருக்கு விசா தர மறுத்தது. உடனே, கோர்ட் படியேறி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அவரின் விசாவை மீண்டும் ரத்து செய்தார். இதை எதிர்த்து மீண்டும் ஜோகோவிச் வழக்குத் தொடர, மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ஆஸ்திரேலிய அரசு எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டு அவரின் விசாவை ரத்து செய்தது. இதனால், கவலைதோய்ந்த முகத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறி சொந்த ஊருக்கே போய்ச் சேர்ந்தார் ஜோகோவிச்.
இந்நிலையில் அடுத்து வரவுள்ள பிரஞ்சு ஓப்பனிலும் தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி செலுத்தாத வீரருக்கு விலக்கு அளிக்கப்படாது என்றும் அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் கட் அண்ட் ரைட்டாகச் சொல்ல, மீண்டும் ஜோகோவிச்சிற்கு சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2020லேயே ஒரு பேட்டியில் தனிப்பட்ட முறையில் தடுப்பூசியை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் ஜோகோவிச்.
சொந்த ஊரில் சிலை!
தமிழகம் அறிந்த பெயர் கர்னல் ஜான் பென்னி குயிக். தென்னகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தன் குடும்பச் சொத்தை விற்று அந்தப் பணத்தில் கட்டி முடித்தவர். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவசாயத்திற்கான நீரையும் பூர்த்தி செய்து வைத்தவர். இதனாலேயே தேனி பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்றும் பென்னிகுயிக்கை கடவுளாக வணங்கி வருகின்றனர்.
1841ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பிறந்த பென்னிகுயிக்கைப் போற்றி அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். இப்போதும்கூட பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னிகுயிக் எனப் பெயர் சூட்டும் வழக்கம் அங்குள்ளது. அப்படிப்பட்டவருக்கு தமிழக அரசு சார்பில் அவரின் சொந்த ஊரான லண்டன் அருகேயுள்ள கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் சிலை அமைக்கப்படும் என அவரின் பிறந்தநாளில் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மட்டுமல்ல: முல்லைப்பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக்கொடுக்காமல் காப்பதற்கு அரசு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளும் என பென்னிகுயிக் பிறந்தநாளில் உறுதி கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.
வைரல் பூனை
ஜப்பானில் ஹச்சிகோ என்ற நாய் வெகு பிரபலம். தன்னுடைய எஜமானர் இறந்துபோனது தெரியாமல் அவருடைய வருகைக்காக ஒன்பது வருடங்களாக ஒரே இடத்தில் காத்திருந்தது ஹச்சிகோ.
இதன் பெருமையை உலகுக்கு உணர்த்தும்விதமாக ஜப்பானில் ஹச்சிகோவிற்கு சிலை வைத்துள்ளனர். ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஹச்சிகோ சிலையின் அருகில் நின்று செல்ஃபி எடுக்கத் தவறுவதில்லை. சமீபத்தில் ஹச்சிகோவிற்கு நிகழ்ந்தது போன்ற ஒரு சம்பவம் செர்பியாவில் அரங்கியேறியுள்ளது.
செர்பியாவைச் சேர்ந்த ஜுகோர்லிக் என்பவர் தன்னுடைய குழந்தையைப் போல ஒரு பூனையை வளர்த்துவந்தார். வேலை நேரம்போக மற்ற எல்லா நேரமும் அந்தப் பூனையுடன்தான் இருப்பார் ஜுகோர்லிக். கடந்த நவம்பர் மாதம் எதிர்பாராதவிதமாக ஜுகோர்லிக் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்த கல்லறைக்கு அருகிலேயே எப்போதும் நடமாடிக்கொண்டிருக்கிறது அந்தப் பூனை.
இப்போது பனிப்பொழிவின் காரணமாக ஜுகோர்லிக்கின் கல்லறை பனியால் சூழந்திருக்கிறது. அதனால் அந்தக் கல்லறையின் மீது அமர்ந்துகொண்டு எங்கேயும் நகராமல் அப்படியே இருக்கிறது அந்தப் பூனை. இந்த நெகிழ்வான காட்சியைப் புகைப்படமெடுத்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தட்டிவிட, வைரலாகிவிட்டது அந்தப் பூனை.
குங்குமம் டீம்
|