ஸ்கைலேப்
ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? உடனே ‘சோனி லிவ்’வில் வெளியாகியிருக்கும் தெலுங்குப் படமான ‘ஸ்கைலேப்’பை பாருங்கள். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
 தென்னிந்தியாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 1979ம் வருடம் படத்தின் கதை நிகழ்கிறது. அந்த கிராமத்தில் பல பேரிடம் கடன் வாங்கி பிரச்னையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறான் ராமலிங்கம்.
அந்த கிராமத்தில் வாழும் ஜமீன்தாரரின் மகள் கௌரி. நகரத்தில் நிருபராக வேலை செய்து வந்தாள். ஆனால், அந்த வேலைக்கு தகுதியில்லை என்று வேலையிலிருந்து நீக்கப்பட்ட விசயம் தெரியாமல் சொந்த ஊருக்கு வந்திருக்கிறாள். பண ஆசையில் டாக்டர் லைசென்ஸை இழந்தவன் ஆனந்த். அந்த கிராமத்தில் பல வருடங்களாக பூட்டிக்கிடக்கும் பள்ளிக்கூடத்தில் கிளினிக் ஆரம்பிக்க திட்டமிடுகிறான். அவன் திட்டத்துக்கு ராமலிங்கம் உதவிபுரிகிறான்.
கிளினிக் திறக்கும்போது ஒரு செய்தி வருகிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கூடமான ஸ்கைலேப் செயலிழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது அந்த கிராமத்தில்தான் விழப்போகிறது என்பதுதான் செய்தி. ஸ்கைலேப் கிராமத்தில் விழுந்ததா... அந்த செய்தி மக்கள் மத்தியில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது... என்பதே பரபரப்பான நகைச்சுவை திரைக்கதை. கெளரியாக நித்யா மேனனும், ஆனந்தாக சத்யதேவும், ராமலிங்கமாக ராகுல் ராமகிருஷ்ணாவும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் விஸ்வக் கண்டேராவுக்கு இது முதல் படம்.
|