என்காண்டோ



சினிமா ஒரு மேஜிக் என்று சொல்வார்கள். மேஜிக்கே சினிமாவாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதை அறிய அனிமேஷன் படமான ‘என்காண்டோ’வைப் பாருங்கள்.
‘ஹாட்ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் பார்க்க கிடைக்கிறது. கொலம்பியாவின் மலை அடிவாரத்தில் உள்ளது சொர்க்கம் போன்ற ஓர் இடம். அதற்குப் பெயர்தான் என்காண்டோ. அங்கே உள்ள ஒரு மேஜிக்கல் மாளிகையில் வசித்து வருகிறது ஓர் அதிசயக் குடும்பம்.

அந்தக் குடும்பத்தில் பிறந்த எல்லோருக்குமே மேஜிக்கல் சக்தி கிடைக்கிறது. ஆனால், அந்த அதிசயக் குடும்பத்தில் பிறந்த மீராபெல் என்கிற சிறுமிக்கு மட்டும் மேஜிக்கல் சக்தி கிடைப்பதில்லை.

அதனால் கடுமையான விரக்திக்கும், அவமானத்திற்கும் உள்ளாகிறாள் மீரா. பெரும் ஆபத்தில் என்காண்டோ இருக்கிறது என்பதை அறிகிறாள். சாதாரண சிறுமியான மீரா எப்படி மேஜிக்கல் நகரமான என்காண்டோவைக் காப்பாற்றுகிறாள் என்பதே அசத்தலான திரைக்கதை.

இந்த வருடத்துக்கான சிறந்த அனிமேஷன் படம் என்ற ‘கோல்டன் குளோப்’ விருதை தட்டியிருக்கிறது இந்தப் படம்.குடும்பத்துடன் கண்டுகளிக்க ஓர் அருமையான படத்தைக் கொடுத்திருக்கின்றனர். ஜாரெட் புஷ்ஷும், பைரன் ஹோவர்டும் இணைந்து இப்படத்தை இயக்கியிருக்கின்றனர்.