கடலூரில் ஒரு பட்‌சிராஜன்!



சமீப நாட்களில் அடிக்கடி பத்திரிகைகளில் இடம்பெறும் ஒரு பெயர், கண்ணன் வைத்தியநாதன். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிறந்த இவர், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைகள் மதிப்புமிக்க பத்திரிகைகளில் வெளியாகி வனவிலங்குகள், பறவைகள் பற்றிய புரிதலை மக்களிடம் அதிகரித்திருக்கிறது.

ஊட்டி மசினகுடியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு உயிரியலாளராகப் (wildlife biologist) பணிபுரிகிறார். இவரது பயணம் சென்னை பழவேற்காட்டிலிருந்து ஆரம்பித்தது. அங்கே பெலிகன் (pelican) எனும் கூழைக்கடா பற்றிய ஆய்வில் ஈடுபட்ட கண்ணன், பிறகு புலி, கழுகு, தேனீ, மீன், வனப்பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, பறவைகள் சரணாலயம் என்று தனது ஆய்வை விரிவுபடுத்தினார்.

இவர் ஒரு புகைப்படக்கலைஞராகவும் இருப்பதால், அவரின் காட்டுப்பயணங்களில் க்ளிக்காகும் விலங்குகளும், பறவைகளும் நம்மை பரவசப்படுத்துகிறது. ‘‘பள்ளிக்கல்வி முடிந்ததும் கெமிஸ்ட்ரி படிக்க ஆசைப்பட்டேன்.
ஆனால், மயிலாடுதுறையில் இருக்கும் ஏ.வி.சி கல்லூரியில் விலங்கியல்தான் கிடைத்தது. பி.எஸ்சி விலங்கியல் படிக்கும்போது, விலங்கியல் மீது பெரிய மதிப்பு வந்தது. அதனால் நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து எம்.எஸ்சிக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட வைல்ட்லைஃப் பயோலஜி, அதாவது விலங்கியல் உயிரியல் படிப்பில் சேர்ந்தோம்.

இந்தப் படிப்பு முடிந்ததும் மும்பையில் இருக்கும் ‘பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’ எனும் இயற்கை அறிவியல் கழகத்தில் ஆய்வுக்கான நிதி கிடைக்க, அதில் சேர்ந்தேன். அங்கே கேரளாவைச் சேர்ந்த இயற்கை அறிவியலாளரான ரஞ்சித் மனக்காடின் அறிமுகம் கிடைத்தது. அவரது வழிகாட்டுதலில்தான் பழவேற்காடு கூழைக்கடா தொடர்பான ஆய்வை மேற்கொண்டேன்...’’ என்கிற கண்ணன், கூழைக்கடா தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்தார். ‘‘பெலிகன் எனும் கூழைக்கடாவில் 8 வகைகள் உண்டு. அதில் ஒரு வகைதான் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் அதிகமாக உள்ளது. இதை ஆங்கிலத்தில் ஸ்பாட் பில்ட் பெலிகன் (spot-billed pelican) என்பார்கள். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்தியாவிலும், அசாமிலும் அதிகமாக காணக்கிடைக்கின்றன.

ஒரு கூழைக்கடாவின் எடை 8 முதல் 10 கிலோ வரை இருக்கும். ஒரு நாளைக்கு 2 முதல் 4 கிலோ மீன் வரைக்கும் சாப்பிடும். இவை மற்ற கூழைக்கடாவிலிருந்தும், பறவைகளிலிருந்தும் மாறுபட்ட ஒரு பறவை...’’ என்கிற கண்ணன் கூழைக்கடாவின் தனித்துவத்தை விவரித்தார். ‘‘பழவேற்காடு போன்ற இந்தியப் பகுதிகளில் வாழும் கூழைக்கடாக்கள் வாழிடங்களுக்கு ஏற்ப தங்களது இயல்பை மாற்றிக்கொள்ளக்கூடியது. இப்படி தங்களைத் தகவமைத்துக்கொள்வது அதன் இரத்தத்தில் ஊறிய ஒன்று.

உதாரணமாக, 2000ல்தான் முதன்முதலாக பழவேற்காட்டில் ஆய்வு செய்தேன். அப்போது தென்னகத்தில் சுமார் 5 ஆயிரம் கூழைக்கடாக்கள் மட்டுமே இருப்பதாக கேள்விப்பட்டேன். மூன்றே வருடங்களில் இந்த எண்ணிக்கையை 10 ஆயிரத்துக்கு அதிகரித்தோம். ஆம்; அதன் வாழிடங்களில் நாம் சிறு கூடுகளை அமைத்துவிட்டால் போதும், இந்த கூழைக்கடாக்கள் இனப்பெருக்கம் செய்துவிடும். இதுதான் இந்த வகையினத்தை அழியவிடாமல் பாதுகாக்கிறது.

ஆனாலும் பழவேற்காடு போன்ற பகுதிகளில் நடக்கும் அதிகமான மீன்பிடித்தல், பிரதேசத்தை சேதப்படுத்தல் போன்றவை இதன் வாழிடத்தை அழிக்கலாம். அனைத்துக்கும் கூடு அமைத்துக் கொடுப்பது கடினம். இயற்கையான சூழல்களில் இருக்கும்போதுதான் விலங்குகள், பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்.

பலமான மனிதன்கூட விலங்குகளுடனும், பறவைகளுடனும் போட்டிபோடுவது கொடுமையாக உள்ளது. அத்துடன் பழவேற்காட்டில் வளர்ச்சி எனும் பெயரில் காட்டுப்பள்ளி துறைமுகம் போன்றவை கேடுகளை விளைவிக்கக்கூடியவை. வளர்ச்சி வேண்டும்தான். ஆனால், இயற்கையைச் சிதைக்காமல் வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும் அல்லது இயற்கைக்கு மாற்று என்ன என்றாவது யோசிக்க வேண்டும். துறைமுகம் ஏற்பட்டால் கப்பல் போக்குவரத்து அதிகரித்து ஆயில் கசிவு ஏற்படும்.

இது பழவேற்காட்டில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு அழிவைக் கொண்டு வரும். பழவேற்காடு என்பது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏரி. மன்னர் காலம் மற்றும் காலனிய காலத்தில் எல்லாம் இந்தப் பகுதி ஓர் இயற்கை துறைமுகமாகத்தான் இருந்தது. ஆனால், நவீன வசதிகளுடன் ஓர் இயற்கையான துறைமுகத்தை செயற்கையாக மாற்றம் செய்தால் அங்கே வசிக்கும் பறவைகளைக் காப்பாற்ற முடியாது...’’ என்கிற கண்ணன், இந்தியாவின் பறவையினம், விலங்குகள் மற்றும் அதுதொடர்பான பாதுகாப்பு குறித்தும் விளக்கினார்.

‘‘உலகளவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவையினங்கள் உண்டு. அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 3,000 இனங்கள் உள்ளன. ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும்.

உதாரணமாக, உணவு விஷயத்தை பார்த்தோமானால் சில பறவைகள் நீரின் மேற்பரப்பில் உணவைக் கவ்வும், சிலது நீரின் நடுப்பகுதியில் சென்று இரை தேடும், சிலது நீரின் அடி வரை நீந்திச்சென்று இரை பிடிக்கும், சிலது கரையோரம் ஓடிச்சென்று உணவு சேகரிக்கும்.

இப்படி ஒவ்வொரு பறவை இனங்களுக்கும் விதவிதமான பழக்கங்கள் உண்டு. அதேபோல விலங்குகள் வாழும் இடங்களிலும் கூட நாம் வீடு, நிறுவனங்களைக் கட்டுகிறோம். அதனால்தான் மிருகங்கள் நாம் வாழும் பகுதிக்குள் வருகின்றன. எல்லா விலங்குகளையும், பறவைகளையும் அழித்துவிட்டு மனிதன் வாழமுடியுமா என்பது சந்தேகமே.
ஒரு புலியைப் பார்க்கும் அதிசயம் சிலருக்குத்தான் கிடைக்கும். நானும் ஒரு நாள் விடியற்காலையில், முதுமலைக்காட்டில் ஒரு புலியைப் பார்த்தேன்; புகைப்படமும் எடுத்தேன். அந்த இயற்கை நிகழ்வை ஒருவரால் மறக்கமுடியுமா!

அதுபோல புலியை இன்று பார்த்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எல்லாம் போகமுடியாது. எல்லாம் தற்செயலாகத்தான் நிகழும். ஆகவே, ஒரு காட்டுப்பயணமென்பது எல்லையில்லா பயணமாக இருக்கவேண்டும். காட்டில் எதிர்பார்த்தது எல்லாம் நிகழ்வது இல்லை...’’ என்று முடித்த கண்ணனின் கனவு ஆசிரியர் பணி. தான். இறப்பதற்குள் விலங்குகள், பறவைகள் தொடர்பான அறிவை 10 மாணவர்களுக்காவது போதித்துவிட வேண்டும் என்பது அவரது நோக்கம்.  

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: கண்ணன் வைத்தியநாதன்