அரண்மனைக் குடும்பம்-2



மார்ட்டின் என்கிற அவன் செல்போனில் ‘‘வர்றதுல சரிபாதி எனக்கு... அதை மறந்துடாதே...’’ என்று சொன்ன நிலையில், போனை கட் செய்து விட்டு செடிகளுக்கு மருந்து அடிப்பது போல தொடர்ந்து ரத்தியையும், கணேசனையும் நோட்டமிடத் தொடங்கினான்,ரத்தியும், தியா படுத்திருக்கும் பெட்டை நோக்கிச் சென்றாள். தியா தூங்கியபடி இருந்தாள். மலர்க்கொத்து ஒன்று தூங்குவது போல் இருந்தது. மெல்ல அருகில் அமர்ந்து தியாவின் தலையை ரத்தி கோதி விட்டாள். அப்போது யாரோ உள்ளே வருவது  போல் இருந்தது. திரும்பிப் பார்த்தாள். வேலைக்காரி பங்கஜம் கையில் காபித்தம்ளருடன் வந்திருந்தாள். ரத்தியும் வாங்கிக் கொண்டாள்.

‘‘குழந்தைக்கு பால் கலக்கி கொண்டு வரட்டுமாம்மா?” பங்கஜம் மெல்ல பேசத் தொடங்கினால்.‘‘இல்ல பங்கஜம்... இவ பால் சாப்ட்டா வாந்தி எடுத்துட்றா...”
‘‘அப்ப பாப்பா உடம்பு இன்னும் குணமாகலையாம்மா?”‘‘ஆமாம் பங்கஜம். எவ்வளவோ டாக்டர்கிட்டே காட்டிட்டோம். மருந்து சாப்ட்டுகிட்டே இருக்கிறவரைதான் நல்லா இருக்கா. மருந்தை நிறுத்தினா இருமலும், ரத்த வாந்தியும் திரும்ப ஆரம்பமாயிடுது... என்ன செய்யறதுன்னே தெரியல... இப்ப கூட ஒரு டாக்டர்கிட்ட இன்னிக்கு காட்டப்போறோம்...’’
‘‘இந்த ஏற்காட்லீங்களா?”

‘‘ஆமா... சேலத்த சேர்ந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஒருத்தருக்கு எங்களப் போலவே இங்க ஒரு பங்களா இருக்காம்! அங்க அவர் வந்து தங்கப் போறாரு. ஈவினிங் அப்பாய்ன்ட்மென்ட் தந்திருக்காரு...”‘‘கவலைப்படாதீங்கம்மா... எல்லாம் நல்லபடியாயிடும்...’’‘‘உன் வார்த்தை பலிக்கட்டும்...” என்றபடியே காபியைக் குடித்தாள் ரத்தி.அப்போது அவள் கையில் தெரிந்த பாம்புப்பச்சை பங்கஜம் கண்ணில் பட்டது. முகத்திலும் ஆச்சரியம் வந்து கூடாரமிட்டது. அதை ரத்தியும் கவனித்தாள்.‘‘என்ன பங்கஜம் அப்படிப் பாக்கறே?”‘‘இல்லம்மா... இந்த பச்சையை நான் இப்பதாம்மா உங்க கைல பாக்கறேன்...”‘‘இது ஒன்பது வயசுல இருந்து என் கைல இருக்கு. இது எங்க குலதெய்வம்...”
‘‘அப்படீங்களா..?’’

‘‘ஆமாம். எங்க சாதில எல்லார் கைலயும் இது இருக்கும். நாங்க வடக்க நாக பரம்பரையைச் சேர்ந்தவங்க...”
‘‘அப்ப இங்க சேர்வராயன் கோயிலாண்ட ஒரு சேட்டோட எஸ்டேட்ல தங்கியிருக்கற சாமியாரும் உங்க ஜாதிதானா?”
‘‘அப்ப சாமியார் கைல இதே மாதிரி பச்சை இருக்கா?”‘‘ஆமாம்மா. அவர் கைலயும் அச்சு அசல் இதே மாதிரி பாம்புப் பச்சைக் குறி இருக்குது. நான் பார்த்தேனே...”
‘‘அப்படியா... யார் அவர்..? பேர் என்ன?”‘‘பேர்லாம் தெரியாதும்மா. அவர் வாயத்திறந்து ரொம்ப பேசறதும் இல்லை. எப்பவும் தியானத்துலதான் இருக்காரு. இங்க நிறைய பேர் அவரைப் போய் கும்பிட்டுட்டு வர்றாங்க. நானும் போய்ட்டு வந்தேன். ஆசீர்வாதம் பண்ணி ஒரு வாழைப்பழ சீப்புல இருந்து ஒரு பழத்தை பிச்சி எடுத்து குடுத்து சாப்பிடச் சொன்னாரு. எனக்கு ஆ ஊன்னா வயித்து வலி வந்துடும். அதுலயும் மாதவிலக்கு சமயத்துல ரொம்பவே கஷ்டப்படுவேன். அவர் தந்த பழத்தை சாப்பிட்டதுல இருந்து வலியே இல்லம்மா!”

‘‘நிஜமாவா சொல்றே?”‘‘சத்யமாம்மா... எனக்கென்னமோ நீங்க கூட நம்ப பாப்பாவ கூட்டிகிட்டு அவரப் போய் பார்த்தா எல்லாம் நல்லபடி நடக்கும்னு தோணுது...”
பங்கஜம் இயல்பாகச் சொன்ன விஷயம் ரத்தி மனதில் ஒரு பெரிய தீயையே மூட்டிவிட்டது. அடுத்த நொடி போனில் பேசியபடி இருந்த கணேசன் முன் சென்று நின்றாள். கையில் பாதி குடித்த நிலையில் காபி தம்ளர் இருந்தது. கணேசனும் ஏறிட்டான்.‘‘என்ன ரத்தி?”
‘‘கொஞ்சம் சேர்வராயன் கோயில் வரை போய்ட்டு வரணும்... வரீங்களா?”
‘‘இப்பவா... எதுக்கு?”

அவனிடம் விளக்கமாய் பங்கஜம் சொன்னதை அப்படியே சொன்னாள் ரத்தி.‘‘ரத்தி... ஐ ஆம் சாரி... இந்த மாதிரி ஒரு வேலைக்காரி பேச்ச கேட்டெல்லாம் முடிவெடுக்காதே! எங்க அந்த பங்கஜம்..? இவங்கள எல்லாம் என் அப்பா, மாமா மாதிரி ஒரு டிஸ்டன்ஸ்ல நிறுத்தினாதான் சரிவரும். கொஞ்சம் இடம் கொடுத்தா குட்டைய குழப்பற மாதிரி எதையாவது பண்ணிட்றாங்க...”கணேசனிடம் கோபம் தண்ணீர் பலூனைப் பிதுக்கினால் போல பீறிட்டது. பார்வை பங்கஜத்தைத் தேடியது.‘‘ஐயோ  வேண்டாங்க... அவ தனக்கு தொிஞ்ச நல்லதைத்தான் சொல்லியிருக்கா... அந்த சாமியார் எங்க நாக பரம்பரையைச் சேர்ந்தவராதான் இருக்கணும். அதனாலதாங்க அவரைப் பார்த்தா எதாவது நல்லது நடக்கும்னு நினைச்சு உங்ககிட்ட கேட்டேன்...’’

‘‘லுக்... நாம டாக்டரை பாக்கறதுல ஒரு அர்த்தம் இருக்கு. இந்த மாதிரி சாமியார்ங்க மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்பகூட ஒருத்தி நான்தான் ஆதிபராசக்தின்னு ஆரம்பிச்சிருக்கா. நினைச்சாேல எரியுது. போய் பேசாம ரெஸ்ட் எடு. ஈவினிங் டாக்டரைப் போய் பார்ப்போம். நான் கொஞ்சம் என் ஃப்ரெண்ட் சந்தோஷோட எஸ்டேட் வரை போய்ட்டு வரேன்...” என்று சொல்லி முடித்தவன் அதே வேகத்தில் வெளியேறி காரில் ஏறிக்கொண்டு புறப்பட்டான்.

அவன் பேசியதை எல்லாம் கேட்டபடி இருந்த பங்கஜம் வெலவலத்துப் போயிருந்தாள். அவன் போய் முடிக்கவும் ரத்தி அருகில் வந்தவளாய் மலங்க மலங்கப் பார்த்தாள்.
‘‘என்ன பங்கஜம்... அவர் பேசினத கேட்டு  பயந்துட்டியா?”‘‘ஆமாம்மா... நீங்க மத்தவங்க மாதிரி இல்லேங்கறதாலதான் உங்ககிட்ட நான் மனம்விட்டு பேசறேன். இனி பேசமாட்டேம்மா...”
‘‘பைத்தியம்... அவரைப் பத்தி எனக்கு தெரியும். தப்பா சில சாமியார்கள் இருக்கிறதால யாரை நம்பறதுன்னு எனக்கே குழப்பமாதான் இருக்கு.

ஆனா, அவரும் இந்த நாகப் பச்சை குத்தியிருக்கார்னு சொன்ன விஷயம்தான் என்னை யோசிக்க வெச்சது. எங்க நாக பரம்பரைல கல்யாணமே பண்ணிக்காம சன்யாசியாயிட்றவங்க பலர் உண்டு. சிலர் அகோரிகளாவும் மாறியிருக்காங்க. இவங்க பெரும்பாலும் ஹரித்வார், காசி பக்கம் போய் அங்கேயே இருந்துருவாங்க. இவர் மட்டும் எதனால ஏற்காட்டுக்கு வந்து தங்கிருக்கார்னு தெரியல எனக்கு...”‘‘கரெக்ட்டும்மா... இவரகூட அந்த எஸ்டேட் சேட் காசியில இருந்துதான் கூட்டிகிட்டு வந்திருக்காருன்னாங்க...”‘‘அப்ப அவர் நிச்சயம் எங்க நாக பரம்பரையைச் சேர்ந்தவராதான் இருக்கணும்... ஆமா இங்க எதுக்கு வந்துருக்காருன்னு தொியுமா?”

‘‘அது தெரியாது மா... ஆனா, அந்த எஸ்டேட்ல ஒரு புத்து கோயில் இருக்குது. அது அவங்களுக்கு சொந்தமான கோயில்னு மட்டும்  தெரியும்...”பங்கஜம் சொல்லச் சொல்ல ரத்தியின் விழிகள் பெரிதாய் விரிந்தன. மனதுக்குள் அவள் ஏதோ கூட்டிக் கணக்கு போடுவது போலத் தோன்றியது. அவர்கள் இருவர் பேச்சையும் கூட அந்த மார்ட்டின் என்பவன் கேட்பது தெரியாதபடி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் முதுகில் பூச்சி மருந்து கேன் ஹோல்ட் செய்யப்பட்டிருந்தது. வலது கை ஸ்ப்ரேயரை அழுத்திக் கொண்டிருக்க... இடது கையால் ஜன்னல் கதவை மெல்ல தள்ளித் திறந்து காதைக் கொடுத்திருந்தான்.

பங்கஜம் சொன்ன செய்திகள் அவனுக்கும் புதிது. ஆனால், சேட் எஸ்டேட்டில் ஒரு சாமியார் தங்கியிருக்கிறார் என்பது மட்டும் தெரியும்.ரத்தியிடமும் ஒரு வேகமான முடிவு.‘‘பங்கஜம்... அந்த எஸ்டேட் இங்க இருந்து எவ்வளவு தூரம்?” என்று பங்கஜத்திடம் கேட்டாள்.‘‘ஒரு மூணு கிலோமீட்டர் இருக்கும்மா...”‘‘ஆட்டோ... டாக்சின்னு ஏதாவது கிடைக்குமா?”‘‘கன்னையன் ஆட்டோ இருக்கும்மா... அவன் சேட் எஸ்டேட்டுக்கு சவாரி விட்டே செம்மநத்தம்கற கிராமத்துல ஒரு இடம் வாங்கிட்டான்னா பாத்துக்குங்களேன்...”
‘‘சரி... இப்ப நாம போனா அந்த சாமியார பாக்க முடியுமா?”

‘‘தாராளமா... மணி இப்ப பதினொண்ணுகிட்ட ஆகுது. மௌனமா வாழை மரத்தடியில உக்காந்திருப்பாரு. போய் பார்த்து கும்புடு போட்டா வாழைப்பழம் தருவாரு. அவ்ளோதான்...’’
‘‘அப்ப கிளம்பு... இப்பவே போய்ட்டு வந்துடுவோம்...”‘‘அம்மா... அய்யாவுக்கு தெரியாம...”‘‘அவரை நான் சமாளிச்சிக்கறேன்...”‘‘என் வேலை போயிடப் போகுதும்மா...”‘‘நான் பாத்துக்கறேன்... கவலப்படாதே...”‘‘சரிங்கம்மா... வேலை போனா கூட பரவால்லம்மா... பாப்பாக்கு குணமானா போதும்... புறப்படுங்க...”பங்கஜம் தயாராகிட, ரத்தி தியாவை ஒரு ஷாலுடன் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு புறப்பட்டாள். எதிரில் நாச்சிமுத்து காய்கறிக்கூடையோடு வந்தான். இருவரும் புறப்பட்டதைப் பார்த்து பார்வையாலேயே எங்கே என்று கேட்டான்.

‘‘சேட் எஸ்டேட் வரை போய் அந்த சாமியாரை பாத்துட்டு வந்துட்றோம்...”
‘‘கார் இல்லையே... எதுல போவீங்க?”
‘‘கன்னையன் ஆட்டோவுல...”‘‘அய்ய... முதலாளிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்...”
‘‘நாச்சிமுத்து... நீ அதைப்பத்தி கவலைப்படாதே... அவர் சந்தோஷ் எஸ்டேட் வரை போயிருக்கார். மதியம் லஞ்ச்சுக்குதான் வருவார். அதுக்குள்ள நாங்க வந்துடுவோம்...’’
அவனுக்கான பதிலை சொல்லிக்கொண்டே வெளியே காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி நடந்தாள் ரத்தி. வெளியே நடக்கும்போதே பங்கஜம், ரத்தியிடம் இருந்து குழந்தையை, தான் வாங்கி தோளில் போட்டுக் கொண்டாள். நாச்சி முத்து முகம் கலங்கிப்போனது. அப்படியே பக்கவாட்டில் இருந்து எதுவும் தெரியாதவன் போல பூச்சி மருந்துடன் வந்து நின்றான் மார்ட்டின்.
‘‘என்ன நாச்சிமுத்து... எங்க போறாங்க?” என்றும் வேண்டினான்.

‘‘உனக்கு எதுக்கு அதெல்லாம்... நீ போய் உன் தோட்ட வேலைய பார். பலாமரத்துல பிஞ்சு விட்ருக்குது... அதை அறுத்துக் கொடுன்னு சொன்னேன்ல... செஞ்சியா?”
என்று மார்ட்டினிடம் தாட்டியமாய் பேசினான். மார்ட்டின் லேசாய் முறைத்துக் கொண்டே அப்படியே பின்புறம் சென்றவன் திரும்பவும் தன்னை அங்கே பணியில் வைத்திருக்கும் சதீஷிடம் போனில் தொடர்பு கொள்ளத் தொடங்கினான்.

‘‘என்ன மார்ட்டின்?”
‘‘சதீஷ்... முதலாளி பொண்டாட்டியும் குழந்தையும் வேலைக்காரியோட சேட் எஸ்டேட்ல தங்கியிருக்கிற சாமியாரைப் பாக்க கிளம்பிட்டாங்க...”

‘‘கணேசன் சார் அப்ப போகலையா?”‘‘இல்ல... அவர் கார்ல சந்தோஷ்ங்கறவர் எஸ்டேட்டுக்கு போயிட்டாரு…”

‘‘ஆஹா... இது அருமையான சந்தர்ப்பமாச்சே?”‘‘அதான் போன் பண்ணேன். ஆட்டோலதான் போறாங்க. நான் நம்ப பேரிக்கா லோட் லாரியை எடுத்துட்டு போய் பிரேக் பிடிக்கலேன்னு சொல்லி ஆட்டோ மேல மோதி உருட்டி விட்றவா..?”‘‘முடியுமா உன்னால?”‘‘இப்போதைக்கு அதான் ஒரே வாய்ப்பு. விட்டுட்டா வேற மாதிரிதான் யோசிக்கணும்...”
‘‘அப்ப என்ன கேள்வி..? கவுத்துடு..!”‘‘ஆக்சிடென்ட்... கேஸ்னு போலீசை கவனிச்சி சுலபமா வெளிய வந்துடலாம். ஆனா, போலீசை நீதான் கவனிச்சுக்கணும். ஓ.கே.வா?”

‘‘அதை எல்லாம் நான் பாத்துக்கறேன். ஏற்காடு போலீஸ்ல எல்லாரும் நம்பாளுங்கதான். ஆனா, நீ கொஞ்சம் நம்பற மாதிரி ஹிட் பண்ணிடு. உனக்கும் காயம் படணும். அப்பதான் நாம சந்தேகத்துக்கு இடமில்லாதபடி மீள முடியும்...”‘‘அது என் பாடு. நீ மட்டும் என் பங்கை மறந்துடாதே. என் பங்கு எனக்கு பச்ச நோட்டா... ஐநூறு ரூவா தாளாதான் வேணும். நானும் இந்த ஏற்காட்ல இருந்துகிட்டு குளிர்ல லோல்பட விரும்பல. சிங்கப்பூர் இல்லாட்டி மலேசியான்னு போயிடலாம்னு இருக்கேன்...”
‘‘அப்ப கிளம்பு... பேசினது போதும்...”

‘‘கவலப்படாதே... சாமியாரைப் பார்த்துட்டு திரும்பும்போதுதான் நான் உருட்டப்போறேன். அங்க எப்படியும் கொஞ்ச நேரமாகும். அதுக்குள்ள நான் லாரிய எடுத்துகிட்டு போய் ரோட்டோரமா நின்னுடுவேன். என்னைய தாண்டித்தான் போவாங்க. அப்புறம் இருக்கு கச்சேரி...’’மார்ட்டின் பேசிவிட்டு போனை பேண்ட் பாக்கெட்டில் போட்டு விட்டு, டிராக்டர் ஷெட்டில் பூச்சி மருந்து கேனை  இறக்கி வைத்தவன் குரங்கு குல்லாயை எடுத்து மாட்டிக்கொண்டு பேரிக்காய் லோடு லாரி இருக்குமிடம் நோக்கி ஓடத் தொடங்கினான்.  

ஆட்டோ போட்ட சப்தத்தை மீறிக்கொண்டு ஊதக்காற்று கன்னக்கதுப்புகளில் சிலீரிட்டது. காது மடல்களிலும் விறைப்பு. ரத்தி ஷாலைக்கொண்டு அருகில் அமர்ந்திருந்த பங்கஜம் மடியில் கிடந்த தியா உடம்பை இழுத்து மூடியபடியே இருந்தாள்.புறத்தில் பசுமையான தோட்டங்களின் நழுவல். எஸ்டேட்டுக்கு செல்லும் தார்ச்சாலை கருநாகம் ஒன்று வளைந்து நெளிந்து செல்வது போல் கிடந்திட, அதன்மேல் மஞ்சள் வண்ண ஆட்டோ டபடபவென சப்தமிட்டபடி புகை உமிழ்வோடு ஓடி சேட் எஸ்டேட்டின் முகப்பு ஆர்ச்சைக் கடந்து நுழைந்தது.

முன்னாேல் சில ஆட்டோக்கள் அங்கங்கே இருக்கும் மரத்தடிகளில் நின்றபடி இருக்க, அதில் வந்தவர்கள் வரிசை கட்டி நின்றபடி இருந்தனர்.

சேட் பங்களாவின் முகப்பில், இடப்புறமாய் வளர்ந்திருக்கும் ஒரு குலை தள்ளிய செவ்வாழை மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார் அந்த சாமியார்! ஷீரடி பாபாவின் தோற்றத்தில் வெள்ளை அங்கி அணிந்தபடி இருந்த அவர் முகத்தில் ஒரு அசாத்திய சாந்தம். தலையையும் பாபா போலவே துணியால் மூடிக் கட்டியிருந்தார். அவர் அருகே ஒரு பைஜாமா குர்தா தரித்த இளைஞன் நின்றுகொண்டு வருவோர் கொண்டு வரும் பூவையும், பழங்களையும் அருகில் இருக்கும் ஒரு கூடைக்குள் போட்டபடி இருந்தான்.

அவனே வாழைத்தார் ஒன்றில் இருந்து வாழைப்பழத்தை உரித்து அந்த சாமியார் கையில் தரவும் அவர் அதை தன் நெற்றி மேல் வைத்து ஏதோ மந்திரம் போல் முணுமுணுத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் தந்தபடி இருந்தார். மெல்ல நகர்ந்த ரத்தியும் குழந்தையோடு அவர் முன் சென்று நிற்கவும் நிதானமாய் ஏறிட்டவர் அதிர்ந்தவர் போல முகத்தில் அதிர்வைக் காட்டத் தொடங்கினார்.

- தொடரும்  

‘இந்து சமயத்தில் பாம்புகள் தெய்வ சம்பந்தம் கடந்து தனித்தும், அரசமரத்தடிகளிலும், புற்றுகள் முன்னாலும் வணங்கப்படுவதையும் திரு.அசோகமித்ரன் கவனித்தார். அதை அவர் ஒரு ஆச்சரியமாக மட்டுமின்றி அதிசயமாகக்கூட உணர்ந்தார்.இந்த உலகில் எத்தனையோ ஆயிரம் உயிர்கள். அவைகளில் பாம்புகள் ஒளிந்து வாழ்பவை.

அச்சமளிப்பவை! அப்படி இருக்க இந்த பாம்பு இனம் மட்டும் எப்படி தெய்வத் தொடர்புடையதானது? இதை வணங்குமளவிற்கு இது எந்தவகையில் மனிதனைவிட மேலான அல்லது இணையான ஓர் உயிரினமாக ஆனது?இக்கேள்விகளுக்கு விடைகளை அவர் இந்து புராணங்களிலும், சில சித்தர் பெருமக்களிடமும் தேடத் தொடங்கினார்,அப்படி அவர் தேடியபோது கிடைத்ததுதான் ஆதிச்சநல்லூர் தாழிகள் பற்றிய செய்திகள்!’

- இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி