உடைகளில் ஜொலிக்கும் தஞ்சை ஓவியத்தின் தங்கம்!
உடைகளில் எம்பிராய்டரி வேலைப்பாடுகள், கல் வேலைப்பாடுகள், நூல் வேலைகள், ஏன் ஜமிக்கி, பாசி வேலைப்பாடுகள் கூட பார்த்திருப்போம். தஞ்சை ஓவியங்களில் மின்னும் தங்கமே இடம்பெற்றுப் பார்த்திருக்கிறோமா? அப்படியான டிசைனிங்கில்தான் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் டிசைனர் அர்சிதா நாராயணம்.‘‘ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இந்த தஞ்சாவூர் ஓவியங்கள் மேல அதீத ஈடுபாடு உண்டு. ஒரு டிசைனரா இந்த கிளாசிக் ஓவியங்களை அடிப்படையா வெச்சு எப்படி ஃபேஷன் டிசைனிங் செய்யறதுன்னு பல நாள் யோசனைதான் இப்போ உடைகளா மாறியிருக்கு.
 தஞ்சாவூர் ஓவியங்களுடைய ஸ்பெஷலே அந்த ஜொலிக்கும் தங்கத்தாலான ஃபாயில்கள்தான். அந்த ஃபாயில்கள் 8 செ.மி + 8 செ.மீ துண்டே குறைஞ்சது ரூ.200ல் ஆரம்பிச்சு தரம் பொருத்து ரூ.1000 வரையிலும் கூட போகும். அந்த தங்க ஃபாயில்களை உடைகள்ல கொண்டு வந்து டிசைன் செய்யணும்னு யோசிச்சு உருவாக்கினதுதான் இந்த உடைகள்...’’ என்னும் அர்சிதா அனார்கலி, லெஹெங்கா, சேலைகள், துப்பட்டா, ஆண்களின் தோத்தி, அங்கவஸ்திரம்... இப்படி அனைத்திலும் தங்க நிறம் ஜொலிக்க உருவாக்கியிருக்கிறார்.

‘‘ஆக்ச்சுவலி இந்த கிரவுன் செலிபிரேஷன் ஃபேஷன் ஷோ முழுக்கவே வைரம்தான் கான்செப்ட். அப்ப அதை மேட்ச் செய்யணும்னா நிச்சயம் உடைகள்லயும் அந்த அளவுக்கு மதிப்பான டிசைன்கள் இருக்கணும்.
 அப்படி யோசிச்சப்ப நான் ஏற்கனவே திட்டமிட்டு செய்திட்டு இருந்த இந்த தஞ்சாவூர் பெயின்டிங் தீம் ரொம்பவே உதவிச்சு. அதாவது உடைகள்ல வர்ற டிசைன்கள்ல எங்கே எல்லாம் தங்க நிற ஜரிகை சேர்க்க முடியுமோ அங்க எல்லாம் தங்க ஃபாயில்கள் பதிச்சேன். மேலும் உடைகளுடைய டிசைன்களும் கூட எப்போதுமான வேலைகளை விட அதிகமான தங்க நிற ஃபாயில்கள் சேர்த்து டிசைன் செய்தேன். 
தஞ்சாவூர் பெயின்டிங்ல அந்த தங்க நிறம்தானே பளிச்சென தெரியும்..?’’ என்னும் அர்சிதா, டிசைன்களுக்கும் தஞ்சாவூர் பெயின்டிங்கில் வரையப்படும் ஓவியங்களையே டிசைன்களாக மாற்றியிருக்கிறார்.  ‘‘பொதுவா தஞ்சாவூர் பெயின்டிங்னாலே கடவுள்கள், அரண்மனை, அதிகம் போனால் பூக்கள், பறவைகள் இருக்கும். அதையே நான் ஓவியங்களா காட்டன், மற்றும் சில்க் மெட்டீரியல்கள்ல கொண்டு வந்தேன். தஞ்சாவூர் ஓவியங்கள் அடிப்படையான உடைகளா... அப்ப விலை அதிகமா இருக்குமேன்னு யோசிக்கறாங்க. நிச்சயம் கிடையாது. ஒரு லெஹெங்கா ரூ.15,000ல் கூட டிசைன் செய்யலாம். இன்னைக்கு திருமண லெஹெங்காக்களே ரூ.20,000ல் தொடங்கி ரூ. 2,00,000 வரையிலும் கூட வாங்குறாங்க.  அடுத்து ஒரு நல்ல அனார்கலி ரூ.2000 தொடங்கி வாங்கலாம். கூடவே அந்த தங்க ஃபாயில்கள் எவ்வளவு வேணும், எவ்வளவு இருந்தா எனக்குப் போதும்னு நினைக்கிறாங்களோ அதைப் பொருத்து ரூ.4000 வரை வாங்கலாம்...’’ என்னும் அர்சிதா நாராயணம், இந்த உடைகள் அத்தனையும் நம் பாரம்பரிய இந்திய கலாசார உடைகளாகத் தெரிவதால் உடன் தங்கம், வைரம் அல்லது தங்க நிற ஃபேன்சி நகைகள் பயன்படுத்தலாம் என்கிறார்.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ. வின்சென்ட் பால்
|