LOVE தன் கணவர் விராட் கோலிக்கு அனுஷ்கா சர்மா எழுதியிருக்கும் காதல் கடிதம்...
இந்த 7 ஆண்டுகளில் தன் தந்தை என்னவெல்லாம் கடந்து வந்தார் என்பதை நமது மகள் கற்றுக்கொள்ள வேண்டும்...
இந்திய கிரிக்கெட் அணியின் சமீப கால சர்ச்சை புள்ளியாக இருப்பவர் விராட் கோலி. தில்லியைச் சேர்ந்த 33 வயதாகும் விராட் கோலி நிகழ்கால கிரிக்கெட் வீரர்களில் ஆகச் சிறந்த வீரர்களுள் முக்கியமானவராகத் திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கடந்த டிசம்பரில் ஒரு நாள் அணி கேப்டனிலிருந்து கோலி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார். விராட் கோலி டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக நீடித்தார்.
 இந்த நிலையில் சென்ற வாரம் ஜனவரி 15 அன்று டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து, தான் விலகுவதாக விராட் கோலி அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக கிரிக்கெட் பார்வையாளர்கள் வாதப் பிரதிவாதங்கள் நடத்தி வரும் நிலையில் விராட் கோலியின் காதல் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் எழுதியிருக்கும் குறிப்பு வைரல்ஆகியுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே...
 எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறும்போது நீங்கள்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று கூறியது. அன்று நீங்கள், நான், தோனி மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். தோனி அன்று நகைச்சுவையாக ‘உன் தாடி வேகமாக நரைக்கப் போகிறதே...’ என்று கூறினார். அன்றிலிருந்து நான் கவனித்து வருகிறேன். உங்கள் தாடி மட்டும் நரைக்கவில்லை. உங்களின் வளர்ச்சியைப் பார்த்திருக்கிறேன், உங்களைச் சுற்றியும், உங்களுக்குள்ளும் வளர்ச்சி அபரிமிதமாக இருந்துள்ளது.
 நீங்கள் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட காலத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்களது காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி செய்த சாதனைகளைக் கண்டு வியக்கிறேன். இதையெல்லாம் விட உங்களுக்குள் நீங்கள் சாதித்த வளர்ச்சியைத்தான் நான் பெரிதாக நினைக்கிறேன். 2014ம் ஆண்டு நீங்கள் அனுபவமற்ற, யாரையும் எளிதில் நம்பக்கூடிய இளம் வீரனாக இருந்தீர்கள். நல்ல திட்டங்கள் குறித்து யோசித்துக்கொண்டு இருந்தீர்கள். நேர்மறையான எண்ணங்களே உங்களது வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் என்று நம்பி னீர்கள். அவை நிச்சயம் நடக்கும். ஆனால், அதில் சவால்கள் அதிகம் இருந்தது.
 நீங்கள் களத்துக்கு வெளியே சந்தித்த சவால்கள் ஏராளம். ஆனால், இது வாழ்க்கையல்லவா... நீங்கள் குறைவாக சவால்களை எதிர்பார்த்த இடத்தில் கூட உங்களுக்கு சவால்கள் அதிகமாகவே இருந்திருக்கிறது. உங்களது எண்ணங்களோடு நான் துணை நின்றதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஒரு தலைவனாக முன்னின்று வழிநடத்தினீர்கள். வெற்றிகளில்தான் உத்வேகம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் உணர்த்தினீர்கள். சில நேரங்களில் தோல்வியடையும்போது நீங்கள் கண்ணீருடன் அமர்ந்திருக்கும்போது உங்கள் அருகில் அமர்ந்து உங்கள் வலியை உணர்ந்திருக்கிறேன்.
இன்னும் சிலவற்றை நான் செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன். இதுதான் நீங்கள். இதைத்தான் நீங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் சமரசமற்றவர். நேர்மையானவர். பாசாங்கு உங்களின் எதிரி. அதுதான் என் கண்களுக்கு உங்களைத் தலைவனாகக் காட்டியது. ஏனென்றால் நீங்கள் தூய்மையானவர். உங்களது கலப்படமற்ற நோக்கத்தை எல்லோராலும் உண்மையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சொன்னதைப் போல இந்த கண்கள் வழியே உங்கள் ஆளுமையைக் கண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
நீங்கள் மிகச்சரியானவர் அல்ல. உங்களுக்கும் சறுக்கல்கள் உண்டு. ஆனால், அதை எப்படி சரிசெய்தீர்கள் என்பதே உங்களது தனித்தன்மை. நீங்கள் சரியானதையே செய்கிறீர்கள் அதற்காக கடுமையாக உழைக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் எதற்காகவும் பேராசைப்பட்டது கிடையாது. எனக்குத் தெரியும், இந்த கேப்டன் பதவியும் அப்படித்தான்.
ஏனெனில், ஒருவர் ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் அவர்அத்தோடு தனது எல்லையை சுருக்கிக் கொள்கிறார் என்று அர்த்தம். நீங்கள்தான் என் காதல். நீங்கள் எல்லைகளற்றவர். இந்த 7 ஆண்டுகளில் தன் தந்தை என்னவெல்லாம் கடந்து வந்தார் என்பதை நமது மகள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்... கேப்டனாக விராட் கோலி சாதித்தது என்ன..?
மகேந்திரசிங் தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியபின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை முதல்முறையாக வழி நடத்தினார் விராட் கோலி. ஏறக்குறைய 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வந்தார். இதுவரை விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார். இதில் 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் இந்திய அணி சந்தித்துள்ளது; 11 போட்டிகளை டிரா செய்துள்ளது.
டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலி 5,864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 இரட்டை சதம், 20 சதம், 18 அரைசதம், 7 ஆட்டநாயகன் விருது, 3 தொடர் நாயகன் விருதை கேப்டன் கோலி வென்றுள்ளளார்.
இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள் (20) அடித்தவர் என்ற சாதனையும் கோலிக்கு சொந்தமானதே. டெஸ்ட் அணி கேப்டனாக வெற்றி சதவிகிதத்தை 58.82 ஆக வைத்துள்ளார் விராட் கோலி.இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் (68 போட்டிகள்); அதிக டெஸ்ட் வெற்றிகளைத் தந்தவர் என பல்வேறுசாதனைகளைத் தன்வசப்படுத்தி இருக்கிறார் கோலி. கிரேம் ஸ்மித் (53 வெற்றி), ரிக்கி பாண்டிங் (48 வெற்றி), ஸ்டீவ் வாக் (41 வெற்றி) ஆகியோருக்கு அடுத்து, டெஸ்ட் வரலாற்றில் நான்காவது வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி உள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோலி இருந்தபோது தரவரிசையில் இந்தியா 7வது இடத்தில் இருந்தது. அவர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள இன்றைய நிலையில் இந்தியா தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ளது!டெஸ்ட் கேப்டனாக கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்படவில்லை!
ஜான்சி
|