ஹீரோயின் ஆன ஸ்ருதி, சமந்தா, நயன்தாரா தோழி!
‘ஏழாம் அறிவு’ மூலம் ஸ்ருதி ஹாசனுக்கு தோழி, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் சமந்தாவின் தோழி, தொடர்ந்து ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா தோழி... இப்படி பல படங்களில் ஹீரோயினுக்கு தோழியாகவே வந்த தான்யா பாலகிருஷ்ணா, ‘கார்பன்’ மூலம் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தவருக்கு ஹாய் சொன்னோம்.
 ‘‘ஹேப்பி நியூ இயர். உண்மையாவே சூப்பர் வருஷம். பல வருஷ வெயிட்டிங் தமிழ்ல ஒரு ஹீரோயின் ரோல் கிடைக்க. அதுவும் பொங்கல் ரிலீஸ். ஐயம் சோ ஹேப்பி...’’ புன்னகைக்கிறார் தான்யா பாலகிருஷ்ணா.தெலுங்கிலே கூட ஹீரோயினா மூணு, நாலு படங்கள் நடிச்சிட்டீங்களே... தமிழ்ல ஏன் இவ்வளவு லேட்?
 அதுதான் எனக்கும் தெரியலை. ஃபிரண்டா நடிச்சா அடுத்து வந்தது எல்லாமே ஃபிரண்ட் ரோல்தான். அப்பறம்தான் தெலுங்கிலே ரொம்ப ரிஸ்க்கான ஒரு படமா ‘செகண்ட் ஹேண்ட்’ அமைஞ்சது. தொடர்ந்து கன்னடம், மலையாள மொழிகள்ல கூட ஹீரோயினா நடிச்சிட்டேன். இந்த வருஷம் தமிழ்ல ‘கார்பன்’ படம் சாத்தியமாகிடுச்சு.
விதார்த் கூட நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்க?
‘கார்பன்’ படத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் விதார்த் சாரை சந்திச்சதே இல்லை. நடிப்பு ராட்சசன் அவர். ஒரு சீன்... நடிச்சிட்டே போகப் போக அவர் அழணும். ஒரே ஷாட்ல ஓகே வாங்கினார். கம்மி வயசுதான் அவருக்கு. இதான்... இப்படித்தான் நடிப்பேன்னு எல்லாம் யோசிக்கவே மாட்டார். நடிக்க வாய்ப்பு இருந்தா எந்த கேரக்டரா இருந்தாலும் ஓகேன்னு நடிப்பார். அவர் நடிக்கறதைப் பார்த்து பயந்து போயி நான் இன்னும் கொஞ்சம் ஹார்ட் ஒர்க் செய்தேன். சேலஞ்சான நடிகர்.
 ஹீரோயின் ஆகிட்டீங்க... நெக்ஸ்ட் என்ன பிளான்?
ஒரு பிளானும் இல்லை. இப்பவும் அதே தான்யா பாலகிருஷ்ணாதான். நடிச்சா ஹீரோயின் என்கிற சீனெல்லாம் கிடையாது. நல்ல கேரக்டர் வந்தா நிச்சயம் நடிப்பேன். ஆனா, இனிமே என் கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குன்னு பார்த்து அந்த கேரக்டர்கள்ல நடிப்பேன்.
 நியூ இயர், பொங்கல் எல்லாம் எப்படிக் கொண்டாடினீங்க?
நியூ இயர்ல செம தூக்கம். முதல் நாள் முழுக்க ஷூட். டயர்ட். பொங்கல் சென்னைலதான். அப்பா, அம்மா கூட ஃபேமிலியா கொண்டாடியாச்சு. ஊரடங்கு, போதுமான கட்டுப்பாடுகள் சூழ கொண்டாடினோம். ஒரே வருத்தம் பொங்கலுக்கு பொங்கல் இருக்கோ இல்லையோ ஃப்ர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ மாஸ் ஓபனிங் இதெல்லாம் இல்லாம ரொம்ப போரிங்கா இருந்துச்சு. ஆனா, எனக்கு என் படம் ரிலீஸ்... அது ஒரு பெரிய ஹேப்பி.
 பிடிச்ச ஹீரோ யார்?
எப்பவுமே சூர்யா சார்தான். பிடிச்ச ஹீரோ, கிரஷ் எல்லாமே அவர்தான்.
என்ன மாதிரி ரோல் கிடைச்சா யோசிக்காம நடிப்பீங்க?
நயன்தாரா மேம், ஐஸ்வர்யா ராஜேஷ்... இவங்க ரெண்டு பேரும் நடிக்கிற எல்லா கேரக்டரும் ரொம்ப தனித்துவமா இருக்கும். அவங்களுக்கு மட்டும் சிறப்பாவே கேரக்டர் டிசைன் செய்வாங்க. அப்படி கேரக்டர்கள்ல நடிக்கணும். அப்பறம் விஜயசாந்தி மேடம் இடம் இன்னமும் காலியா இருக்கு. அந்த மாதிரி ஆக்ஷன், சண்டை, சேஸிங்னு நடிக்கணும்.
உங்க அடுத்தடுத்த படங்கள் பத்தி சொல்லுங்க?
பிரசன்னா சார் கூட ஒரு வெப் சீரீஸ், அப்பறம் தெலுங்கிலே ஒரு வெப் சீரீஸ் முடிஞ்சிடுச்சு. தெலுங்கிலே ஒரு படம் ஷூட்டிங் போயிட்டு இருக்கு. இதெல்லாம் இப்பவே சொன்னா ரொம்ப சீக்கிரம் சொன்ன மாதிரி இருக்கும். மேலும் ஒருசில புராஜெக்ட்கள் பேசிட்டு இருக்கேன். சீக்கிரம் சொல்றேன்.
ஷாலினி நியூட்டன்
|