மட்டி



‘களிமண் சாலையில் நடக்கும் நான்கு சக்கர வாகனப் பந்தயத்தை அடிப்படையாக வைத்த முதல் இந்தியப் படம்’ என்ற அடைமொழியுடன் வெளியான மலையாளப் படம், ‘மட்டி’.
‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. கல்லூரியில் ஒன்றாக படிக்கும் கார்த்திக்கும், டோனியும் பரம எதிரிகள். களிமண் சாலையில் நடக்கும் ஜீப் பந்தயத்தில் டோனியைத் துவம்சம் செய்து வாகை சூடுகிறான் கார்த்திக். அத்துடன் டோனியின் காலை உடைத்துவிடுகிறான்.

வருடங்கள் ஓடுகின்றன. காட்டில் சட்டத்துக்குப் புறம்பாக  மரங்களை வெட்டும் முத்துவுடன் மோதுகிறான் கார்த்திக். இத்தனைக்கும் கார்த்திக்கின் அண்ணன்தான் முத்து. நாளுக்கு நாள் அண்ணன் - தம்பிக்கிடையேயான பகை வளர்ந்துகொண்டே போகிறது. இந்நிலையில் பழைய பகையைத் தீர்ப்பதற்காக கார்த்திக்கைத் தேடி டோனி வந்துவிடுகிறான்.

என்னதான் பகை இருந்தாலும் தம்பி கார்த்திக்குக்குப் பிரச்னை என்று வரும்போது  அண்ணன் முத்து தம்பியுடன் நிற்க, சூடுபிடிக்கும் திரைக்கதை கிளைமேக்ஸில்தான் இளைப்பாறுகிறது.
களிமண் சாலையில் நடக்கும் ஜீப் பந்தயம் அசாதாரணம். ஆக்‌ஷன் மற்றும் அட்வெஞ்ச்சர் விரும்பிகளுக்கு செம விருந்து. பெரும்பாலும் புதுமுகங்களாக இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்திப்போகின்றனர். படத்தின் இயக்குநர் பிரகபால்.