சண்டிகர் கரே ஆஷிக்கி
ஒரு வித்தியாசமான காதல் கதையாக மிளிர்கிறது ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த இந்திப்படம். சண்டிகரில் நண்பர்களுடன் சேர்ந்து ஜிம் நடத்தி வருகிறான் மனு. பாடி பில்டரான மனுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனுடைய சகோதரிகள் மனுவைத் திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.
 இந்நிலையில் அவனுடைய ஜிம்மிற்கு ஜும்பா டான்ஸ் சொல்லிக்கொடுக்க மான்வி வருகிறாள். மான்வியின் வருகையால் நிறைய பேர் ஜும்பா டான்ஸ் கற்றுக்கொள்ள ஜிம்மில் சேர்கின்றனர். மனுவிற்கும் மான்வி மேல் காதல் மலர்கிறது. இருவரும் நெருக்கமாக சுற்றித் திரிகின்றனர். திருமணம் செய்துகொள்ளலாமா என்று மான்வியிடம் கேட்கிறான் மனு. அப்போது, “நான் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை...” என்று மான்வி சொல்ல, நிலைகுலைந்து போகிறான் மனு.
இதற்குப் பிறகு நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே திரைக்கதை. இப்படியான ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டதற்காகவே இப்படத்தைப் பாராட்டலாம். யாருக்கிடையில் ஏற்பட்டாலும் அது காதல்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் இப்படம், மூன்றாம் பாலினத்தவரின் நிலையைக் கனிவுடன் சித்தரிக்கிறது. மனுவாக ஆயுஷ்மான் குரானாவும், மான்வியாக வாணி கபூரும் கலக்கியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் அபிஷேக் கபூர்.
தொகுப்பு: த.சக்திவேல்
|