உஷார்... இலவச ஒமைக்ரான் தொற்று பரிசோதனை என்ற பெயரில் உங்கள் பேங்க் பேலன்ஸ் திருடப்படுகிறது!



இலவச ஒமைக்ரான் தொற்று பரிசோதனை என்ற பெயரில் சைபர் குற்றங்கள் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுதான் இந்த வார ஹாட் நியூஸ்.
இந்தியாவில் மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதன்மூலம் சைபர் குற்றங்கள் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சக இணையம் மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

“சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றுவதற்கு புதிய புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இப்போதெல்லாம் ஒமைக்ரான் தொடர்பான சைபர் கிரைம்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. அதிவேகமாக பரவி வரும் ஒமைக்ரானை மையமாகக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.தனியார் மற்றும் அரசு சுகாதார நிறுவனங்கள் போல் போலியாக இணையதளம் உருவாக்கி இ-மெயில் மூலமாக சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை தொடர்பு கொள்கின்றனர்.
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் லிங்க்கில் ‘அரசாங்கத்தால் விதிக்கப்படும் ஒமைக்ரான் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க, ஒமைக்ரான் தொற்றை கண்டறிய பிசிஆர் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்’ என்று விளம்பரம் வெளியிட்டு, ‘மக்கள் ஒமைக்ரான் பிசிஆர் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று கவருகின்றனர்.

இதை நம்பி லிங்க்கை க்ளிக் செய்து உள்ளே நுழைபவர்களின் வங்கி விவரங்கள், தனிநபர் விவரங்கள் உள்ளிட்டவைகளைப் பெற்றுக்கொண்டு இணைய மோசடிகள் நடைபெறுகின்றன. அதனால் மக்கள் தங்களுக்கு வரும் அனைத்து இணையதளங்களின் லிங்க்குகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பிறகு உள்ளே செல்ல வேண்டும்...” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “இணைய குற்றங்களில் ஒருவர் மீது மட்டும் பழி போட்டு கடந்து செல்ல முடியாது...” என்கிறார் சைபர் நிபுணர் வினோத்குமார் ஆறுமுகம்.

“‘இணைய குற்றங்கள் பற்றி உங்களுக்கு விழிப்பு கொடுத்து விட்டோம், நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று அரசு கை நழுவ முடியாது. அதேபோல் ‘எங்களுக்கு இது பொறுப்பு கிடையாது. எல்லாமே அரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று மக்களும் கை நழுவ முடியாது. இது ஒரு சமூகப் பிரச்னை. இணைய குற்றங்களால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றால், முதலில் புகார் அளிக்க முன்வர வேண்டும். அந்தப் புகாரை முறையாக விசாரித்து உரிய நபர்களை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதற்கான தண்டனை கிடைக்கும் போதுதான் அடுத்தடுத்து குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். இதற்கான தொடக்கப் புள்ளியாக இணைய குற்றத்திற்கான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்.

இதில் என்ன சிக்கல் என்றால், இணையம் அதிவேகமாக வளர்ந்து மக்களின் கைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, இணையத்தின் வேகத்திற்கு தன்னால் ஈடு கொடுக்க முடியாமல் எந்தவிதமான கொள்கை முடிவுகளும் எடுக்காமல் தேங்கி நிற்கிறது. இந்திய அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எல்லாம் எடுத்திருந்தாலும், அது அவுட் டேட்டடாக இருக்கிறது. ஆனால், குற்றம் செய்பவர்கள் அப் டேட்டடாக இருக்கிறார்கள்.  

இன்று ரிப்போர்ட் செய்யப்பட்ட சைபர் குற்றங்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. உண்மையில் ரிப்போர்ட் செய்யப்படாததுதான் பெரிய குற்றங்களாக இருக்கிறது என்பதுதான் உண்மை...” என்கிற வினோத் ஆறுமுகம், இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க தொடர் விழிப்புணர்வு அவசியம் என்கிறார். “மக்கள் எந்தளவு புதிய தொழில் நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டே போகிறார்களோ, அந்தளவு தொழில் நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வையும் சேர்த்துக்கொண்டே போக வேண்டும். ஆனால், ‘மேனுவலை’ப் படிக்காமலேயே பயன்படுத்தும் நடைமுறையில்தான் நாம் இருக்கிறோம் என்பது பெரும் சோகம்.

சைபர் குற்றங்கள் பெரிதோ, சிறியதோ அதை ரிப்போர்ட் செய்வதற்கு முதலில் முன்வர வேண்டும். எல்லாமே App-களாக மாறி வருகிறது. அந்த App கொண்டே சைபர் குற்றங்கள் பதிவு செய்வதை அரசு அதிகாரபூர்வமாக கொண்டு வர வேண்டும். ஏனெனில் இணையத்தில் புகார் தெரிவிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.   இதற்கடுத்து anti-technology. ஒரு டிவைஸ் வாங்கினால் பாதுகாப்பு தொழில் நுட்பமும் சேர்ந்துதான் வாங்க வேண்டும். தொடர் தொழில் நுட்பங்கள் வாங்குவதும் பாதுகாப்பானது.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் உளவியல் ரீதியாக மக்களுக்கு இன்று தேவைகள் அதிகமாகிவிட்டது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொண்டு நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாக மாறியுள்ளனர். இதனால் அது கொடுக்கக் கூடிய விளம்பரங்களில் மூழ்குகின்றனர். தேவையின் அளவும் அதிகமாகிறது. அதற்கான பணமும் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை எப்படியாவது சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதேபோல் சில சலுகைகள், தள்ளுபடிகளை விரும்புகிற மனநிலையை மக்களிடத்தில் இணையம் உருவாக்கிவிட்டது. இந்தக் காரணிகளை இணைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இதுதான் சைபர் குற்றத்திற்கான ஹூக் பாயிண்ட்டாகவும் அமைகிறது. ‘Easy Money’ என ஆசைப்பட்டு போகாமல் இருந்தாலே பல சைபர் குற்றங்கள் குறையும்...” என்கிறார் சைபர் நிபுணர் வினோத் ஆறுமுகம்.

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

இந்தியாவில் இணைய குற்றங்கள் (சைபர் கிரைம்) தொடர்பாக 2020ம் ஆண்டில் 50,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.8 % கூடுதல் என்பதும் தேசிய குற்றப் பதிவுத் துறை (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.இவற்றில் 578 வழக்குகள், சமூக ஊடகங்களில் போலியான செய்திகளை வெளியிட்டது தொடர்பானவை. 972 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையவழியில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் தொடர்பானவை.

போலியான சுயவிவரப் பதிவு தொடர்பாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணையவழியில் தகவல் திருட்டு தொடர்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2020ல் பதிவு செய்யப்பட்ட இணைய குற்ற வழக்குகளில், குற்றத்துக்கான நோக்கத்தைப் பொறுத்தவரை 60.2% மோசடி திட்டத்துடன் நடைபெற்றுள்ளன. அதாவது, 50,035 வழக்குகளில் 30,142 வழக்குகள் மோசடி திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்.

இதற்கு அடுத்தபடியாக, 6.6% (3,293 வழக்குகள்) பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்குகள். மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக 4.9% (2,440) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்சிஆர்பி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.உலக அரங்கில் இணையத்தை அதிகமானவா்கள் பயன்படுத்தும் நாடுகள் வரிசையில் சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணைய வசதியுடன் கூடிய கைப்பேசிகள் 1996ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருவதால், நம் நாட்டில் இப்போது 90% போ் கைப்பேசி வழியே இணையத்தைப் பயன்படுத்துகின்றனா். மீதமுள்ள 10% போ் மேசைக் கணினி, மடிக்கணினி மூலம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனா்.

138 கோடி மக்கள்தொகை உடைய நம் நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவோா் 84.6 கோடிப் போ். இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டில் 134.3 கோடியாக உயா்ந்துவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் இணையத்தைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை வேகமாக உயா்ந்து வருகிறது.இணைய வசதியுடன் கூடிய கணினி அல்லது கைப்பேசியை நாம் பயன்படுத்தும்போது நம்முடைய இரண்டு கண்கள் கணினி அல்லது கைப்பேசியைப் பாா்க்கும். அதே சமயம், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கண்கள் இணையத்தில் நாம் எதைப் பாா்க்கிறோம் என்பதைக் கண்காணித்துக் கொண்டிருக்கும்!

இந்தியாவில் 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் முறையே 2.08 லட்சம், 3.95 லட்சம், 11.6 லட்சம் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரம் இந்தியா எதிா்கொண்டுவரும் சைபா் குற்றங்களின் வளா்ச்சி வேகத்தை வெளிப்படுத்துகிறது. உலக அரங்கில் அதிகரித்துவரும் இணைய வழி வர்த்தகத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணைய வழி வா்த்தகத்தின் வளா்ச்சிக்கு இணையாக, சைபர் தாக்குதல்களும் இந்தியாவில் அதிகரித்துள்ளன என்றும், 2019ம் ஆண்டில் இந்தியா எதிா்கொண்ட சைபா் தாக்குதல்களின் விளைவாக ரூ.1,25,000 கோடி பொருளாதார இழப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், வரும் ஆண்டுகளில் இத்தகைய பொருளாதார இழப்பு கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்றும் பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா்.

சைபா் குற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஒருபுறம் இருக்க, பெண்களும் சிறுமிகளும் சைபா் குற்றங்களால் பெரும் துன்பத்தை எதிா்கொள்கின்றனர். சில நேரங்களில் அவா்களின் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைக்கும் காரணியாகவும் சைபர் குற்றங்கள் அமைந்துவிடுகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நாடுகளில் நடத்திய ஆய்வில் 60% பெண்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் சைபா் குற்றங்களுக்குப் பலியாகின்றனா் என்றும், 39% பெண்கள் முகநூல் வாயிலாக சைபா் குற்றங்களுக்கு இரையாகின்றனா் என்றும், சைபா் குற்றங்களை எதிா்கொள்ளும் பெண்களில் 20% போ் இணையப் பயன்பாட்டினை முற்றிலுமாகத் தவிா்த்து விடுகின்றனா் என்றும் தெரிய வந்துள்ளது.

2020ம் ஆண்டில் இணையம் வழியாக சிறுமிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 58% சிறுமிகள் சைபா் குற்றங்களால் பாலியல் கொடுமையை எதிா்கொண்டதாகவும் 50% சிறுமிகள் சாலைகளில் பயணிக்கும் பொழுது ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைக் காட்டிலும் அதிகமான துன்புறுத்தலை சைபா் குற்றங்களால் எதிா்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனா்.

தேசிய பெண்கள் ஆணையத்திடம் 2020ம் ஆண்டில் கொடுக்கப்பட்ட சைபா் குற்றங்கள் தொடா்பான புகாா்கள், 2019ம் ஆண்டில் கொடுக்கப்பட்ட புகாா்களின் எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இது இந்திய பெண்கள் எதிா்கொண்டு வரும் சைபா் குற்றங்களின் தாக்கத்தை உணா்த்துகிறது. தமிழ்நாட்டில் 2018 - 2019 - 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் முறையே 295 - 385 - 782 சைபா் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் தண்டனையில் முடிவடைந்த சைபா் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை முறையே 11, 6, 7 ஆகும்.

அன்னம் அரசு