யூடியூபின் கியூட் பேபி!



‘கியூட் லுக், துறுதுறு பேச்சு, பெரிய பெரிய கண்கள்’... என குட்டிப் பாப்பா ஜனனிக்கு இணையத்தில் அவ்வளவு ரசிகர்கள் கூட்டம். யூடியூபில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள்... ஒவ்வொரு வீடியோவும் அப்லோட் செய்த சில மணி நேரங்களில் லட்சங்களைத் தொடுகின்றன... என நீள்கிறது ஜனனியின் கிராஃப்.

‘அம்மூமூமூமூ...’‘அப்பாபாபாபா...’ - என வீடியோ பாணியில் அப்பாவும் மகளும் ஒருவருக்கொருவர் கொஞ்சிக்கொள்ள ஜனனி நமக்கு ஹாய் சொன்னார். ‘‘என் பேரு ஜனனி. நா எல்கேஜி, E செக்‌ஷன்ல படிக்கிறேன். உங்குக்கு (உங்களுக்கு) தெரிமா... எனக்கு 100 + 100 ஃபாயோர் (ஃபாளோயர்கள்) இருக்காங்க...’’ மழலை மணம் மாறாமல் கண்கள் விரிய நம்மைப் பார்க்கிறார் ஜனனி.

‘ஸ்கூலுக்கு போகலையா...’ என்றால், ‘‘ஆன்லைன்ல மொபைல்லதான் படிக்கிறேன். வெளிய போகக் கூடாது. கொரோனா வரும். வெளிய போம்போதும் மாஸ்க் போட்டுக்கணும்...’’ என நமக்கும் கண்டிப்பான அறிவுரைகள் சொல்கிறார் ஜனினி பேபி. ‘‘டாடி எனக்கு சைக்கிள் வேணும்...’’ என்னும் செல்ல மகளின் கட்டளைக்கு செவி சாய்த்து ‘‘அப்பறம் வாங்கித் தரேன் ஜனனிம்மா... சரியா...’’ என அனுமதி பெற்று நம்மிடம் பேசத் தொடங்கினார் ஜனனியின் அப்பா கார்த்திக்.

‘‘எங்களுக்கு சொந்த ஊர் சென்னைதான். முன்னாடி கே.கே.நகர். இப்ப போரூர்ல இருக்கோம். நான் இன்ஜினியரிங் படிச்சிட்டு ஒரு பிரைவேட் கம்பெனில வேலை செய்யறேன். கல்யாணத்துக்கு முன்னாடி டிக்டாக்ல வீடியோஸ் போட்டுட்டு இருந்தேன். அப்பறம் திருமணம், தொடர்ந்து ஒரு பையன் பிறந்தான். சாய் சரண். இப்ப 3வது படிக்கிறான். அப்பறம் ஜனனி பாப்பா பிறந்தா...’’ என்னும் கார்த்திக்கை தொடர்ந்தார் அவரது மனைவி பாரதி.

‘‘எனக்கு கும்பகோணம் சொந்த ஊர். கல்யாணத்துக்கு அப்பறம் சென்னை. ஹவுஸ்ஒயிஃப். ரெண்டு பசங்க. நேரம் சரியா இருக்கு. அதுவும் ஜனனி பின்னாடி ஓடவே கரெக்டா இருக்கு.
ரெண்டு பசங்களும் செம பாஸிட்டிவ்வான பேபீஸ். இது வரை ஜனனி சேனல்ல 900க்கும் மேல வீடியோஸ் போட்டிருக்கோம். எதுவும் பிளான் பண்றதில்ல. மியூசிக், கேமரா ஆங்கிள்னு எந்த திட்டமும் கிடையாது. சும்மா மொபைல்ல ஷூட் பண்ணுவோம். அதை அப்படியே அப்லோட் செய்திடுவோம்.

அவளுக்கு இவ்ளோ ரசிகர்கள்... ஃபாளோயர்ஸ் இருக்கறதைக் கூட நாங்க ரொம்ப சொல்லிக்கறதில்லை. காரணம், இந்த பிரபலம் என்கிற அடையாளத்துக்கு அவ மயங்கிடக் கூடாது. குழந்தை குழந்தையாதான் இருக்கணும்னு முடிவா இருக்கோம்...’’ என்ற பாரதியை ஆமோதித்தவராக தொடர்ந்தார் கார்த்திக். ‘‘ஜனனிக்கு ரெண்டு வயசு இருக்கிறப்ப மொபைலை ரொம்ப ஆர்வமா பார்க்க ஆரம்பிச்சா. அப்படியே அவ கூட இருக்கிற மொமெண்ட், அவ செய்யற கியூட் செய்கை எல்லாம் பதிவு செய்தோம். அதுதான் கன்டென்ட்.

எங்களுக்கு பாப்பா வீடியோவை வெச்சு பணம் பண்ணணும், கமர்சியலா சம்பாதிக்கணும் என்கிற எண்ணம்லாம் இல்ல. புராடக்ட் புரொமோஷனுக்காக யாராவது கேட்டா கூட சம்மதிக்கறதில்லை. ஏன்னா இப்ப ஜனனிக்கு இந்த வீடியோ பிடிச்சிருக்கு... எதிர்காலத்திலே வேண்டாம்பா இதெல்லாம்னு சொல்லிட்டா என்ன செய்ய..? அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதில் தெளிவா இருக்கோம்...’’ அழுத்தமாக கார்த்திக் சொல்ல ஜனனி இடைபுகுந்தார்.

‘‘எனக்கு ஆன்லைன் கிளாஸ்ல ஒரு ஃபிரண்ட் இருக்கான். என் அப்பா பேரு கார்த்திக். அவன் பேரு கார்த்திகேயன். அப்புறம் எனக்கு அனுன்னு ஒரு ஃபிரண்ட் இருக்காங்க. என் பாட்டி, சித்தப்பாலாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...’’ என ஜனனி சொல்ல, ‘‘அனு எங்க ஏரியால காலேஜ் படிக்கற பொண்ணு...’’ என பாரதி சிரித்தார்!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: கணேஷ்குமார்