கணவர் வைத்துவிட்டு சென்றது ரூ.7 ஆயிரம் கோடிக்குமேல் கடன்...
ஒன்றேகால் வருடத்தில் அதை வெறும் ரூ.1,731 கோடியாகக் குறைத்திருக்கிறார் மனைவி!
சபாஷ் இல்லத்தரசி
கடந்த 2019ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த வணிக உலகமும் உறைந்துபோன ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அது, காபி டே குழுமத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்த்தாவின் தற்கொலை. ஒரு மாலைப் பொழுதில் மங்களூருக்கு அருகில் உள்ள உல்லாலின் எல்லையில் பெரும் சுழிப்போடு பிரவாகிக்கும் நேத்ராவதி ஆற்றின் பாலத்தின் மேல் சென்று கொண்டிருக்கிறது சித்தார்த்தாவின் கார்.
 பாலத்தின் ஒரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, ‘ஒரு நடை போய் வருகிறேன்’ என்று எதுவும் சொல்லாமல் இறங்கிச் செல்கிறார் சித்தார்த்தா. ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் சித்தார்த்தா திரும்பாததால் அங்குமிங்கும் தேடிப் பார்த்துவிட்டு, பதற்றமாய் வீட்டுக்குத் தகவல் சொல்கிறார் வாகன ஓட்டி.  அப்படிப் போன சித்தார்த்தா போனவர்தான்.டைப் செய்து வைக்கப்பட்ட அவரின் கடிதம் மட்டும் கிடைத்தது. ‘தன்னுடைய தவறான நிர்வாக முடிவுகளால் காபி டே குழுமத்தை வெற்றிகரமான தொழில் நிறுவனமாக மாற்றும் முயற்சியில் தோற்றுவிட்டேன்’ என்றும், ‘தன்னுடைய பங்குதாரர்கள் மற்றும் கடன்காரர்கள் தொல்லை கழுத்தை நெரிப்பதாலும் வருமானவரித் துறையினர் அழுத்தம் அதிகமாய் இருப்பதாலும் தன்னால் இனி வாழஇயலாது’ என்றும் மன்னிப்பு கேட்டபடி விடைபெற்றிருந்தார் சித்தார்த்தா.
 காபி டே என்ற சாம்ராஜ்யம் சரிந்தேவிட்டது. ஆனால், அது ஏதோ ஒரு தனி மனிதனின் வீழ்ச்சியா என்ன? எவ்வளவு பெரிய குழுமம். அதை நம்பி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருந்தன. அத்தனைபேர் வாழ்வும் சித்தார்த்தா ஒருவரின் மரணத்தால் கேள்விக்குறியானது.இந்தியா முழுதும் இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள், 165 இந்திய நகரங்களில் கிளைபரப்பியிருக்கும் 572 கஃபேக்கள், முப்பத்தி ஆறாயிரத்து முந்நூற்று இருபத்தாறு காபி வெண்டிங் மெஷின்கள் என பிரமாண்டமாய் வியாபித்திருந்த தொழில் சாம்ராஜ்யம் ஒரே இரவில் இருளில் மூழ்கியது.
இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது என்ற நிலையில்தான் அதே ஆண்டின் டிசம்பர் மாதம் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே காபி டே குழுமத்தின் புதிய சி.இ.ஓ என்று அறிவிக்கப்பட்டார். உண்மையில் மாளவிகா அந்தப் பதவிக்கு வந்தபோது யாருக்குமே பெரிய நம்பிக்கை இல்லை. சித்தார்த்தா போன்ற பெரும் திறமையாளரே சறுக்கிப்போன ஒரு தொழில்... அந்த இடத்தில் ஒரு பெண்... அதுவும் ஒரு முதல்வரின் மகளாக சொகுசான வாழ்க்கை வாழ்ந்த மேல்தட்டு வர்க்கத்துக்காரர்... இவரால் என்ன செய்துவிட இயலும் என்றுதான் பலரும் நினைத்திருக்கக்கூடும். ஆனால், மாளவிகா எடுத்ததோ புதிய விசுவரூபம்.
நாம் நிறைய வெற்றிப் பயணங்களின் கதைகளைப் படித்திருப்போம். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். மாளவிகாவின் வெற்றிப் பயணத்தின் கதையும்கூட வித்தியாசமானதுதான். நம்பவே இயலாத ஏற்ற இறக்கங்கள் கொண்டது. மாளவிகாவின் தந்தை கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா. பெங்களூருவிலேயே படித்த மாளவிகா, பெங்களூரு பல்கலைக் கழகத்திலேயே பொறியியல் பட்டப்படிப்பையும் முடித்தார்.
படிப்பு முடிந்தவுடன் திருமணம் என்ற இந்தியப் பெண்களின் தலையெழுத்துக்கு மாளவிகாவும் தப்பவில்லை. காபி டே குழுமத்தின் உரிமையாளர் சித்தார்த்தாவுடன் 1991ம் ஆண்டில் திருமணமானது. இருவரின் இல்வாழ்க்கைக்கும் அன்புப் பரிசாக ஈசான், அமர்த்தியா என இரு குழந்தைகள்.பரபரப்பான அரசியல் தலைவரின் மகளாகவும் பிற்பாடு பிஸியான தொழில் அதிபரின் மனைவியாகவும் இருந்த காலத்தில் மாளவிகாவின் வாழ்வில் எந்த சலனமும் இல்லை. அமைதியான தெளிந்த நீரோட்டம் போலத்தான் ஒரே சீராகச் சென்றுகொண்டிருந்தது. ஆனால், சித்தார்த்தாவின் மரணம் அவரின் வாழ்வைப் புரட்டிப்போட்டது.
குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் முழுகிக்கொண்டிருக்கும் கப்பலான காபி டே என்ற பெரும் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு மாளவிகாவுக்கு வந்தது.மாளவிகா பொறுப்பேற்ற போது காபி டே நிறுவனத்துக்கு ஒன்றல்ல இரண்டல்ல ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் கடனிருந்தது.
பதவியேற்ற தினத்திலேயே தன்னுடைய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார் மாளவிகா. தான், காபி டே நிறுவனத்தை மீட்டெடுக்க விரும்புவதாகவும், அதற்காக சில துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டியது உள்ளதென்றும், ஊழியர்கள் முழு மனதோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதே போல் பங்குதாரர்களிடமும் நிறுவனத்தின் மீட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இது ஏதோ வாய்ச்சொல்லுக்காக, சம்பிரதாயத்துக்காக எழுதப்பட்ட கடிதம் அல்ல என்பதை தன்னுடைய அடுத்தடுத்த செயல்பாடுகளால் நிரூபித்தார் மாளவிகா.
மறைந்த தன்னுடைய கணவர் சித்தார்த்தாவுக்குச் சொந்தமான இரண்டாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை கைமாற்றினார். நிறுவனத்தின் பெரும் கடன் சுமையைக் குறைக்க மேலும் சில சொத்துக்களை விற்கவேண்டி இருந்தது. விரைவில் அவை விற்கப்பட்டு கடன் சுமை குறைக்கப்படும் என்று தைரியமாக அறிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் இந்நிறுவனம் தங்களது ஆண்டறிக்கையை சமர்ப்பித்தபோது ஒட்டுமொத்த வணிக உலகமும் அதிர்ந்தது.
ஏழாயிரம் கோடிக்கு மேல் இருந்த கடன் ஒன்றே கால் வருடத்தில் வெறும் ஆயிரத்து எழுநூற்று முப்பத்தொரு கோடியாகக் குறைந்திருந்தது. அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு அளவுக்குக் கடன் குறைந்திருந்தது. இது நிஜமாகவே இமாலய சாதனை. ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்று கேட்டவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறார் மாளவிகா.
சொத்துக்களை விற்று கடனை அடைப்பது ஒரு விஷயமா என்று ஒருவர் கேட்கலாம். ஆனால், கழுத்தை அழுத்தும் கடன் சுமையில் இருந்து விடுபடுவதே மிகப் பெரிய சொத்து என்பதை தொழில் அறிந்தவர்கள் புரிவார்கள்.
இப்போது தட்டுத்தடுமாறி திசைமாறிப்போயிருந்த காபி டே என்ற கப்பல் மூழ்குவதிலிருந்து காப்பற்றப்பட்டிருப்பதோடு சரியான பாதைக்கும் செலுத்தப்பட்டிருக்கிறது. காபி டே செல்ல வேண்டிய தூரம் அதிகமாய் இருக்கலாம். இன்னமுமே கூட காபிடேவுக்கு கடன் இருக்கிறதுதான். ஆனால், அது முன்பைப் போல் சமாளிக்க இயலாத அளவுக்குப் பெரிதல்ல. காபி டே மாளவிகாவின் நிர்வாகத்தில் கம்பீரமாய் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
‘‘ஏற்கெனவே பெரும் அழுத்தத்தில் இருக்கும் எங்கள் நிறுவனத்துக்கு இந்த கொரோனா ஒரு கடுமையான கூடுதல் சவாலாய் இருக்கிறது. ஆனால், இதனையும் சமாளிப்போம். எங்கள் ஊழியர்கள்தான் எங்கள் பலம் நாங்கள் மீண்டு வருவோம்...’’ என தன்னம்பிக்கை மிளிரச் சொல்கிறார் மாளவிகா. காபி டே மணக்கட்டும்.
இளங்கோ கிருஷ்ணன்
|