சிறுகதை-மல்லீ...
‘‘அம்மா பூ கொண்டாந்திருக்கேன்...’’ என்று சத்தம் கேட்டாலே அது கனகுவாகத்தான் இருக்கும். சத்தம் கொடுத்த கையோடு முன் அறையில் சௌகரியமாய் உட்கார்ந்துகொள்வாள். கனகு என் மனைவியின் ஆஸ்தான பூக்காரி. எப்பவோ கணவன் பிரிந்து போயிருந்தாலும், அசராத குணமும், குரலும்.
 பெரிய பொட்டுடன் நேர்த்தியான முகம். ‘வீட்டம்மா வெளில போயிருக்கு, இன்னிக்கு பூ வேண்டா’மென்று நான் சொன்னாலும் விடமாட்டாள். “அம்மா விளக்குக்கு வைக்கவாவது நூறு பூ வாங்குவாங்க... அப்புறம் உங்கள சண்டை பிடிக்கப் போகுது...” என பிடிவாதமாய் சத்தியாக்கிரகம் செய்வாள். சில நாள் அவளே விளக்கு மாடத்தில் வைத்துவிட்டுப் போய்விடுவாள்.  கனகு எனக்கு கல்யாணம் ஆன வருடத்திலிருந்து பூ போட வந்துகொண்டிருக்கிறாள். ‘‘உங்க அறுபதாம் கல்யாணத்துக்கு நான்தான் பூ காண்ட்ராக்டு...” என்று உரிமை கொண்டாடுவாள். ‘‘பத்தாம் நெம்பர் வீட்டுல வேலை செஞ்சிட்டிருந்தால்ல கவுரி... அவள நேத்து போலீஸுல பிடிச்சிட்டுப் போய் அடி நிமித்திட்டாங்கம்மா. அவதான் களவாடியிருக்காளாம். இந்தக் காலத்துல உழைச்சுத் திங்கிறதே நிக்கமாட்டேங்குது... இதுல களவாடினா வெளங்குமா...’’ ஊர் சேதிக்கெல்லாம் என் மனைவிக்கு கனகுதான் பி.பி.சி.
‘‘எனக்கு அந்த கௌரி யாருன்னே தெரியாது. இவளுக்கு யார்கிட்டயாவது சொல்லணும். என்கிட்ட சொல்லறா... சொல்லிட்டுப் போகட்டுமே... பாவம்... நல்ல பூக்காரம்மா. நீங்க எதுக்கு நாங்க பேசறதையெல்லாம் ஒட்டுக் கேக்கறீங்க?’’ என மனைவியும் கனகுவை விட்டே கொடுக்கமாட்டார்.‘‘சித்ரா பௌர்ணமி, விளக்க சுத்தி நல்ல பூவு வைங்கம்மா... வீடு நல்ல லெக்ஷ்மி கடாட்சமாய் இருக்கும்...’’ கனகுவுக்கு சென்டிமென்ட் ஜாஸ்தி.
‘‘இன்னிக்கு ஜாதி மல்லி ஏலம் எடுத்தேம்மா... மொத போணியே நம்மூட்டுக்குத்தான். கூட நூறு வாங்கிக்கோங்க. உங்க கை ராசி. எம் பொண்ணுக்கும் உங்கள மாதிரி நல்ல நீளமான முடிம்மா... ஆனா, பூ வைடின்னு சொன்னா கேட்டாத்தானே... எல்லாருக்குமா நீளமா முடி வாய்க்குது? நிறைய பூ வைம்மா... வீட்டுக்கும் புருஷன் ஆயுசுக்கும் நல்லதும்மா...’’ அவளுடைய சென்டிமென்டுக்கு எல்லாம் மனைவி ஈசியாய் மடிவார்.
‘‘நீங்க ஏன் ராகினிகிட்ட மாம்பழத்துக்கு பேரம் பேசி தொண்டத் தண்ணிய வுடுறீங்க... என்னாண்ட சொல்லுங்க... நான் வாங்கித்தரேன்...’’ சிலசமயம் கூடுதல் வியாபாரமும் நடக்கும்.
‘‘கண்டிப்பா கமிஷன் இருக்கும்...’’ என்று நான் சொன்னாலும் ‘‘இருக்கட்டுமே... நமக்கு எப்படியும் இந்த விலைக்கு கிடைக்காது. அவளும் பொழச்சிக்கட்டுமே. அவளுக்கும் ஒரு பொண்ணு இருக்குங்க. எல்லாமே வயத்துக்குத்தானே?’’ என்ற பதில் கிடைக்கும்.
‘‘மல்லீ வந்திருக்கு...’’ என்று ஒரு நாள் வயதுப் பெண் வந்த போது எனக்கு அது கனகுவின் பெண் என்று தெரியவில்லை.‘‘இங்க வழக்கமா ஒரு அம்மா பூ போடுவாங்க... அம்மா அவங்க கிட்டதான் வாங்குவாங்கம்மா...’’ என்று சொன்னவுடன் அவளுக்கு முகத்தில் ஏகப் பெருமை.‘‘அண்ணா அது எங்கம்மா தான்ணா... அம்மாவுக்கு காய்ச்சல்... அதான் நான் வந்திருக்கேன்...’’‘‘ப்ள்ஸ் டூ படிக்கிறன்னாங்களே உங்க அம்மா... நல்லா படிக்கிறியா..? நல்லா படிச்சு வேலைக்கு போகணும்... என்ன?’’ என் மனைவிக்கு அவளைத் தெரிந்திருந்தது. நான் அவள் பெயர் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால், ‘மல்லீ’ என்று ராகம் போட்டு விற்பதால் அவளை ‘மல்லீ’ என்றே அழைப்பேன்.
‘‘ஏண்ணா... அண்ணிக்கு கூட கொஞ்சம் பூ வாங்கி வைங்கண்ணா... நேத்து அம்மன் கோயிலாண்ட பார்த்தேன் ப்ளூ சாரியில... அண்ணீ சூப்பராய் இருந்தது...’’ கனகுவின் வியாபார உத்தி அப்பிடியே இவளிடமும் இருக்கும். சென்டிமென்ட் உள்பட. ஒருமுறை எங்கள் வீட்டு நிலைவாசலில் ஒரு துண்டு மல்லிகை மாட்டியிருந்தது.
‘‘நாந்தாண்ணா வைச்சேன்... நிலைவாசல்ல பூ வைச்சா வீட்டுல சந்தோஷம் பெருகும்ன்னு சொல்லுவாங்க... அதான் வைச்சேன்...’’‘‘மல்லீ... நீ பூ விக்க வேண்டியவளே இல்ல... நல்லா படிச்சு கார்ப்பரேட்ல வேலை பார்க்க வேண்டியவ... நல்ல மார்க்கெட்டிங் டெக்னிக்லாம் தெரிஞ்சு வைச்சிருக்க...’’ என்று நான் சொன்னபோது அவள் முகம் பிரகாசமாயிருந்தது.அதற்கப்புறம் கொஞ்ச நாளில் கனகு அம்மன் கோயில் பக்கம் ஒரு சின்ன கடை போட்டுவிட்டாள்.
‘‘சுகர் வந்திருச்சிம்மா... அலைய முடியலை. அதான் கைல இருக்கிறதையெல்லாம் போட்டு கடைய ஏலம் எடுத்திருக்கேன்... உனக்கு வேணா மகள வீட்டுல வந்து குடுக்கச் சொல்லட்டுமா..?’’
‘‘இல்ல... பரவாயில்ல... படிக்கிற பொண்ணு... நானே வந்து வாங்கிக்கறேன்... டெய்லி இத சாக்கா வைச்சாவது அம்மன் கோயிலுக்கும் வருவேன்...’’ என் மனைவிக்கும் கனகுவின் தொடர்பை விடப் பிடிக்கவில்லை. இரண்டே வாரம்தான். கனகு மீண்டும் வீட்டிற்கே பூ போட வந்தாள்.
‘‘என்னத்த சொல்றது... என் தலையெழுத்து... அந்த நீலவேணி நான் அவ கடைய ஏலமெடுத்தேன்னு ஆள வைச்சு தகராறு பண்றாம்மா... குடிச்சிப்புட்டு வீட்டுப் பக்கமும் வந்துட்டாங்க. வயசுப் புள்ளைய வைச்சிக்கிட்டு, நமக்கு ஆள் இருக்கா அம்பு இருக்கா... அதான் கடைய விட்டுக்கொடுத்திட்டேன்... இப்போ குத்தகை காசுக்கு அலைஞ்சிகிட்டு இருக்கேன்... எனக்கு இது தேவையா... அந்த அம்மன் பார்த்துட்டுதானே இருக்கு... வழி விடும்...’’எல்லாம் கொஞ்ச நாள்தான். அதற்கப்புறம் மீண்டும் கனகுவை வீட்டுப் பக்கம் காணவே இல்லை. என் மனைவிக்கு பூ வாங்குவதைவிட அவளைப்பற்றியே கவலையாய் இருந்தது. ‘‘ஏங்க கொஞ்சம் விசாரிங்க... அவகிட்ட காசுக்கு அவங்க ஏதாவது தகராறு பண்ணியிருப்பாங்க...’’ என்று கொஞ்ச நாள் நச்சரித்துக் கொண்டிருந்தார்.
‘‘எங்க போய் விசாரிப்பேன்? டோன்ட் வொர்ரி... அவளுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது...’’ என்று நான் சொன்னாலும் எனக்கும் அதே சந்தேகம் இருந்தது.
‘‘கனகு வீடு பூட்டியிருக்கு. அவ வீட்டைக் காலி பண்ணிட்டாளாம். பக்கத்து வீட்டு சுலோச்சனாம்மா வீட்டு வேலைக்காரி சொன்னாங்க...’’ என்று என் மனைவி சொன்னபோது பூக்கடையில் கூட இவ்வளவு பாலிடிக்ஸா என்று வருத்தமாய் இருந்தது.‘‘கவலப்படாத... நல்லாத்தான் இருப்பா... எத்தனை தரம் நமக்கே பூ கொடுத்து நல்ல வார்த்தை சொல்லியிருக்கா... அந்த நல்ல மனசுக்கே ஒரு குறை வராது...’’ என்று சமாதானம் மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. அதற்கப்புறம் சில மாதங்கள் கனகுவை மறக்கவில்லை என்றாலும் அவளைப்பற்றி நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. என் மனைவி மனதே இல்லாமல் அம்மன் கோயில் கடை தவிர்த்து மற்ற கடைகளில் பூ வாங்கிக் கொள்ள ஆரம்பித்தார்.
ப்ளஸ் டூவில் அந்த முறையும் மாணவிகளே அதிக மதிப்பெண் எடுத்தார்கள் என்று பேப்பரில் படித்த போது எனக்கு மல்லீயின் ஞாபகம் தீற்றலாய் வந்தது.பின்னொரு நாளில் அந்த குத்தகை முரட்டு மீசையை சேகர் மெடிக்கல்ஸில் பார்த்தேன். கனகு பற்றி சும்மா கேட்பது மாதிரி விசாரித்தபோது ‘‘அதெல்லாம் அன்னிக்கே ஃபைசல் பண்ணியாச்சு சார்... அதெல்லாம் கனகு செம உஷார் பார்ட்டி சார். அவ காசு எனக்கெதுக்கு சார்... நான் வெளங்க வேண்டாமா?
மேட்டர் வேற சார். அவ பொண்ணு பூ போடற வூட்டுல காதல் பண்ணி இழுத்துக்கிட்டு ஓடிப்போயிரிச்சி. அப்புறம் அவங்க போலீஸ்ல கேஸ் கொடுத்து... அதான் கனகு வீட்டைக் காலி பண்ணிடிச்சாம். போன மாசம் ஜோடிய கண்டுபிடிச்சி... அவங்க பையன சுலுவா பிரிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இப்போ கனகும் அந்தப் புள்ளையும் எம்ஜியார் நகர்ல வீடெடுத்திருக்கிறதா பசங்க சொன்னாங்க...” எனக்கு கனகுவைப் பற்றி ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது. அதற்குமேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன்.
அப்புறம் எம்ஜியார் நகர் கடக்கும்போது ஞாபகம் வரும் போதெல்லாம் கனகு எங்கேயாவது தட்டுப் படுகிறாளா என்று பூக்கடைகளில் பார்ப்பேன்.ஒரு நாள் அயோத்யா மண்டபம் அருகில் வெஸ்ட் மாம்பலத்தின் ஒரு சந்தின் திருப்பத்தில், முற்றிலும் எதிர்பார்க்காத தருணத்தில் மல்லீயை சந்திக்க நேர்ந்தது. ட்ராபிக் நகர காத்திருந்த போது ‘‘மல்லீ...’’ என்று தெரிந்த குரல் கேட்க தலை அனிச்சையாய்த் திரும்பியது.ஒரு குட்டி ஒண்டுக் குடித்தனத்தில் வாசலில் டேபிளில் மல்லிகையும் கனகாம்பரமும் அடுக்கி மல்லீ விற்றுக்கொண்டிருந்தாள். கனகு ஒரு பெட்டியை வீட்டிற்குள் நகர்த்திக் கொண்டிருந்தாள்.
நான் பார்த்த மல்லீயா இது என்று எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தலை மொட்டையடித்து முடி வளரவே விடாமல் ஒட்ட கிராப் செய்யப்பட்டிருந்தது. மூக்குத்தி குத்தியிருந்தாள். அந்த சந்தர்ப்பத்தில் ஒதுங்கி இருக்கும் அவர்களைச் சந்தித்து நோகடிக்க விரும்பவில்லை.ட்ராபிக் சரியாகி கிளம்பும் போதுதான் கவனித்தேன்... அவர்கள் வீட்டு நிலைவாசலில் பூ மாட்டியிருந்தது.
அரூபன்
|