அதிகரிக்கும் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் - என்ன செய்ய வேண்டும்?



சிவபாலன் இளங்கோவன் (மனநல மருத்துவர்)

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவீதம் குழந்தைகள். இன்னும் கூட இதில் பெருவாரியான குழந்தைகளுக்கு அடிப்படை ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவை முழுமையாகக் கிடைக்காத சூழலே இருக்கிறது. குழந்தைகளின் முழுமையான உடல் நலத்தையே இன்னும் உறுதி செய்திடாத நிலையில் சமீப காலங்களில் குழந்தைகள் மனரீதியாகவும் நலமற்று இருப்பதை பல்வேறு சம்பவங்களின் வழியே உணர்கிறோம்.
குறிப்பாக சமீபகாலங்களில் அதிகரித்திருக்கும் குழந்தைகளின் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் உண்மையில் கவலையளிப்பதாகவே இருக்கின்றன. உலகம் முழுக்க இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இணையவழி கல்வி, டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாடு, பெற்றோர்களிடத்தில் வெளிப்படைத்தன்மையற்ற நிலை, பள்ளி நிர்வாகங்களின் அலட்சியப்போக்கு போன்றவை இந்த அதிகரித்திருக்கும் பாலியல் குற்றங்களுக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு கோவை தனியார் பள்ளி மாணவி இந்த பாலியல் துன்புறுத்தலினால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் விளைவாக மீண்டும் ஒருமுறை இது விவாதத்திற்கு வந்தது. சென்ற வருடம் சென்னையில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது ஒரு மாணவி இதே குற்றச்சாட்டை வைத்தபோதுதான் நாம் கடைசியாக இதைப் பற்றி விவாதித்தோம்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் வெளியே தெரியும்போது மட்டும் நாம் அதைப்பற்றி உணர்ச்சிகரமாகப் பேசிவிட்டு பிறகு ஓய்ந்து போய்விடுகிறோம். உண்மையில் வெளியே தெரிவதை விட பலமடங்கு வெளியே தெரியாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நடந்த பிறகு அதற்கு என்ன தீர்வு என்று பேசுவதை விட நடக்காமல் தடுப்பது எப்படி என்பதைப் பற்றி நாம் அதிகமாகப் பேச வேண்டும்.  

குழந்தைகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

நமது உடலின் மீது பலவந்தமாக செய்யப்படும் இந்த துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது அதை துணிவுடன் எதிர்க்க வேண்டும். இதற்கு நாம் எந்த வகையிலும் பொறுப்பல்ல.மாறாக, குழந்தை என்றும் கூட பார்க்காமல் மனிதத்தன்மை கிஞ்சித்தும் இல்லாமல் நடந்து கொள்ளும் ஒருவரின் குற்ற மனப்பான்மைதான் அவரை இதைச் செய்யத் தூண்டுகிறதே தவிர இதில் நம்முடைய தவறு என்று ஒன்றும் இல்லை என்பதை உணர வேண்டும்.இப்படிப்பட்ட துன்புறுத்தலை நமக்கு ஒருவர் ஏற்படுத்திவிட்டால் அவர் இப்படிப்பட்ட செயல்களில் மீண்டும் ஈடுபடாமல் அவரைத் தடுத்து, நம்மையும் பிற குழந்தைகளையும் அவரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்க வேண்டும்.  

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் போது அதை உடனடியாக நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அது பெற்றோர்களாக இருக்கலாம் அல்லது வேறு குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம் அல்லது நண்பர்களாகவோ நம் மீது அக்கறை கொண்ட ஆசிரியர்களாகவோ கூட இருக்கலாம். யாரிடமாவது பகிர்ந்து அவரின் வழியே இது மேற்கொண்டு நடக்காமல் இருப்பதற்கு உண்டான முயற்சியை எடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சம்பவம் நடக்கும்போது அதை களங்கமாகவோ, அவமானமாகவோ எண்ணாமல், இதை எதிர்த்து தீவிரமாகப் போராடுவதன் வழியாக தன்னை ஓர் உறுதியான குழந்தையாக உணரலாம், மற்றவர்களையும் அப்படி உணரச் செய்யலாம்.உடலளவில் ஒருவரின் தொடுதலை நீங்கள் அசூசையாக உணர்ந்தாலே அதை யார் செய்திருந்தாலும் அந்த தொடுதல் தவறானதுதான்.

இதில் ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்றெல்லாம் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அப்படி நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அவரிடம் இருந்து விலகி இருங்கள். அவரிடம் எப்போதும் எச்சரிக்கையாகப்பழக வேண்டும். அவர் மீது சந்தேகம் இருக்கிறது என்பதையும் பெற்றோர்களிடம் தெரியப்படுத்துங்கள். நமது யூகம் தவறாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அப்படிப்பட்ட யூகங்கள் தவறாக இருப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவுதான்.

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட பெரும்பாலான ஆய்வுகளில் இருந்து கிடைக்கும் வியப்பூட்டும் செய்தி என்னவென்றால், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது முதலில் குழந்தைகள் அதை பெற்றோர்களிடம் சொல்லத் தயங்குகின்றனர் அல்லது மீறி சொன்னாலும் அதை பெரும்பாலான நேரங்களில் பெற்றோர்கள் அலட்சியம் செய்து விடுகிறார்கள்!

‘அவர் எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா? அவர் ஆசையா கொஞ்சுறதையெல்லாம் நீதான் தப்பா எடுத்துக்கிற’ என சொல்லி குழந்தைகளை நம்ப மறுக்கிறோம். அவர்களின் கவனப்படுத்தலைப் புறக்கணிக்கிறோம்.முதலில் இப்படிப்பட்ட சம்பவங்களை குழந்தைகள் எதிர்கொண்டால் அதை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் மட்டுமே இந்த சம்பவங்களை முதிர்ச்சியுடனும், நிதானத்துடனும், உண்மையான அக்கறையுடனும் கையாள்வார்கள். அதனால் நம்மிடம் குழந்தைகள் பகிர்ந்து கொள்வதற்கான சுதந்திரமான, வெளிப்படையான சூழலை குடும்பத்திற்குள் நாம் உருவாக்க வேண்டும்.

‘நம்மை பெற்றோர்கள் புரிந்து கொள்வார்கள். இதை வைத்து நம்மை மதிப்பிட மாட்டார்கள். நமது வலியை உணர்ந்து கொள்வார்கள்’ என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வரும்போதுதான் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.  பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளின் மீதான இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களே என்கின்றன ஆய்வுகள். அதனால் குழந்தைகள் யார் மீது இப்படிப்பட்ட புகார்களை அளித்தாலும் அவர்களின் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு அதை உண்மை என்றே கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தால் அதை ‘புனிதம்’, ‘களங்கம்’ போன்ற கற்பிதங்களால் அணுகாமல் அதை விபத்தைப் போல எடுத்துக்கொள்ளும் மனநிலையை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.

நம் உடலின் மீதான பிறரின் அத்துமீறல்கள் நமது தவறல்ல என்பதை நாம் முதலில் தீர்க்கமாக நம்ப வேண்டும். அப்போது தான் அந்த நம்பிக்கையை குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும்.

பள்ளிகள், நிர்வாகம், அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?அதிகரிக்கும் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்களும், அத்துமீறல்களும் அரிதானவை கிடையாது. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியவை.

அவற்றை பள்ளியின் அவப்பெயராக எண்ணாமல் அதன் மீது எடுக்கும் காத்திரமான நடவடிக்கைகளின் வழியாக பள்ளியும், நிர்வாகமும் குழந்தைகளின் மீதும் அவர்களின் மனநிலையின் மீதும் உண்மையான அக்கறையுடன் இருப்பதையும்; பாலியல் குற்றங்களையும், அத்துமீறல்களையும் எந்த வித சமரசமும் இல்லாமல் அணுகுவோம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதன் வழியாகவே பள்ளியின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளின் நலனின் மீது உண்மையாக அக்கறையுடன் இருக்கும் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், சமூகநல ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து ஒரு விசாரணைக் குழுவை ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்த வேண்டும். இதன் மீதான நிர்வாகத் தலையீட்டை நீக்கி முற்றிலும் சுதந்திரமான அமைப்பாக இந்தக் குழு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

மாநில அளவில் ஒரு பொது விசாரணைக் குழுவையும், குழந்தைகளின் மனநல பாதுகாப்புக் குழுவையும் ஏற்படுத்த வேண்டும். அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் போக்சோ சட்டம் தொடர்பான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் சட்ட நடவடிக்கைகளை  இன்னும்  இலகுவாக்க வேண்டும். இந்த அரசாங்கம் குழந்தைகளின் நலனின் மீது உண்மையான அக்கறையுடன் இருக்கிறது; அவர்களின் மீதான எந்த குற்றங்களையும் கடுகளவும் பொறுத்துக்கொள்ளாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.அது, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது, எப்படி அந்தக் குழந்தையின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கிறது என்பதை பொறுத்ததே!