சிறுகதை-தந்தை சொல்



“அந்தாளை எங்கப்பன்னு சொல்றதுக்கே மனசு வரலை...” என்றாள் மங்கையர்க்கரசி. மும்பையில் தனது மாதுங்கா அடுக்ககத்தின் மொட்டை மாடியில் நடந்தபடியே, ஸிட்னியில் பணிபுரியும் அவளது கல்லூரி சீனியர் அஸ்வினி மஞ்ச்ரேகரிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தாள்.
“தஸா மன்னூ நகோஸ் க...” என்று மராத்தியில் ஆரம்பித்த சிநேகிதி உடனே தமிழுக்குத் தாவினாள் “அப்படியெல்லாம் சொல்லாதடி... என்ன இருந்தாலும் அவர்தான் நீ பிறக்கறதுக்கு மூலகாரணமா இருந்தவர்...”“உனக்குத் தெரியாது அஷ்வினி... சின்ன வயசுலேருந்து நான் ஆசைப்பட்ட எதையுமே செய்ய விடலை அந்த ஹிட்லர்... நிறைய கட்டுப்பாடு.

நெயில் பாலிஷ் போடாதே... டெனிம் பேன்ட் கூடாது... ஹேர் கட் பண்ணிக்காதே... ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்டுக்கு தடை... சே... ரொம்ப எரிச்சலாயிருக்கு...”“நிறைய வீட்டுல அப்படித்தான்...”“எனக்கு மெக்ஸிகன் ஃபுட், கொரியன் நூடுல்ஸ் இதெல்லாம் ரொம்ப இஷ்டம். ஆனா, சாப்பிடக்கூடாது... உடம்புக்கு கெடுதல்னு உபதேசம் பண்ண ஆரம்பிச்சிடுவாரு. எந்தவொரு விஷயத்துலயும் என் விருப்பப்படி இருக்க முடியலை...”“சரி... இப்ப என்ன... மேற்படிப்புக்கு இங்க வரப்போறியா..?” என்றாள் அஸ்வினி.

“ஆமா... இந்த சாக்குல ஆஸ்த்ரேலியா வந்துட்டு அங்கயே இருந்துடப் போறேன். இந்த வீடே பிடிக்கலை...” வானத்தில் பறந்து சென்ற க்வான்டாஸ் விமானத்தைப் பார்த்தவாறே நடந்து சுவரருகிலிருந்த பூந்தொட்டியில் காலை இடறிக் கொண்டாள்.“முதல்ல என்ன கோர்ஸ்னு முடிவு செய்துட்டு யூனிவர்ஸிட்டிக்கு அப்ளை பண்ணுடி... அப்பறம்... ‘ஐயெல்டிஎஸ்’ பரீட்சை எழுதி பாஸானாதான் ஸ்டூடண்ட் விஸா கிடைக்கும். இதுக்கெல்லாம் பணம் யார் தருவா... டாடிதானே..?”

“தேவையில்ல. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எங்கம்மா பேங்க்ல பெரிய தொகையா எம் பேர்ல டெபாஸிட் பண்ணியிருக்காங்க. இப்ப மேஜராயிட்டதால, நானே எடுத்து செலவு செஞ்சுப்பேன்...”
“படிச்சு முடிச்சதும் ரெண்டு வருஷம் ஆஸ்திரேலியாவுல இருக்கலாம். அதுக்கப்பறம் ‘பிஆர்’ கிடைச்சா இங்கயே தங்கிடலாம்...”“அப்படின்னா..?”“‘பெர்மனென்ட் ரெஸிடென்ஸி’. இந்த நாட்டுல குடியேறுறவங்களுக்கு நிரந்தரமா வேலை பார்க்கறதுக்கான அனுமதி...’’“அங்க பேயிங் கெஸ்ட் வீடுங்க ஏதாச்சும் கிடைக்குமா..?”“என் கஸின் மிருணாள் குல்கர்னியும் இந்த ஃப்ளாட்லதான் இருக்கா. இப்போதைக்கு நீ எங்களோட தங்கிக்கோ. அப்பறம் பார்க்கலாம்...”“கூப் தன்யவாத் அஷ்வினி...” என்று அவளது தாய்மொழியில் நன்றி சொன்னாள் மங்கையர்க்கரசி. “உன்னை மாதிரி ஃப்ரெண்ட்ஸை நம்பிதான் வீட்டை விட்டே வரேன்...”‘மந்திரமாவது நீறு’ என்றபடியே நமச்சிவாயம் கப்பரையிலிருந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டார். புறநானூறு புத்தகத்தைப் பிரித்து, ‘மகட்பாற்காஞ்சி’யை வாசிக்கத் தொடங்கினார்.

மங்கையர்க்கரசி பலமுறை ஒத்திகைக்குப் பிறகு தகப்பனிடம் வந்து “நான் மேல படிக்கறதுக்கு அப்ராட் போறேன்...” என்றாள், வெறுப்புடன்.“என்னடா அந்தேரிக்கு போற மாதிரி சர்வசாதாரணமா சொல்றே..?” என்று அதிர்ச்சியடைந்தார். புதல்வியைப் பிரிய மனமில்லை. “மேற்படிப்பை இந்தியாவுலயே பண்ணுடா. காஷ்மீர்லேருந்து கன்னியாகுமரி வரை எவ்வளவோ பல்கலைக்கழங்கள்...”“இதுக்கும் தடங்கல் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தேன். உங்கப்பா கிராமத்துல பிறந்து வசதிவாய்ப்பு இல்லேன்னு மெட்ராஸ்க்கு வரலியா..? அங்க பிறந்த நீங்க மும்பையில வேலை பார்க்கலியா..? அதே மாதிரி என்னோட ஃப்யூச்சருக்காக நான் ஆஸ்திரேலியா போறேன்...”

“ஏற்கெனவே சொல்லியிருக்கேனே... என்னுடைய தமிழாசிரியருக்கு ரொம்ப கடன்பட்டிருக்கேன்... அவருடைய பம்பாய்  கல்லூரிக்கு என்னை விரிவுரையாளரா போகச்சொன்னார். ஆசானோட வார்த்தையை தட்ட விரும்பலே. அதனால வந்தேன்... எங்களுக்கு ஒரே பொண்ணு... நீயும் அயல்நாட்டுக்குப் போயிட்டா...”
“எப்படியும் நாலஞ்சு வருஷத்துல கல்யாணம் பண்ணி அனுப்பிடுவீங்கல்ல..? இப்பவே மேரேஜ் ஆயிடுச்சின்னு நினைச்சுக்குங்க. கொஞ்ச நாளாவது சுதந்திரமா இருக்கேன்... ஃபாரினுக்கு போய் என்னிஷ்டப்படி வாழணும்...”

“உன் விருப்பத்துக்கு மாறா என்னடா பண்ணிட்டேன்..?”

“என்ன பண்ணலை..? சாம்பிளுக்கு ஒண்ணு சொல்லட்டுமா... நான் எங்க படிக்கணும்கறதையும் நீங்கதான் முடிவு பண்ணீங்க... கோ-எட் வேணாம்னு சொல்லி, ‘மலாட்’ல இருக்கற காலேஜ்ல சேர்த்து விட்டீங்க... இங்கருந்து இருவது கிலோமீட்டர். மும்பை எலக்ட்ரிக் ட்ரெய்ன் கூட்டத்துல தினமும் போகறது எவ்ளோ கொடுமையான விஷயம்... ‘சொந்தமா வண்டி வாங்கி குடுங்க’ன்னு கேட்டேன். அதையும் செய்யலை. இந்த மாதிரி நிறைய இருக்கு...”“எல்லாமே உன் நல்லதுக்குத்தானே..? பாம்பே பிடிக்கலேன்னா வெளியூர்ல தங்கிப் படிக்கலாமே..?”

“வெளிநாட்டுக்கே போயிடறேன்...” என்று உரக்கக் கத்திவிட்டு கதவை வேகமாக மூடிச்சென்றாள். நிலநடுக்கம் வந்தது போல அதிர்ந்து போனார் நமச்சிவாயம்.சிறுவயதில் தன்னிடம் ‘வலிமிகா இடங்கள்’ கற்றுக் கொண்ட மங்கையின் இந்தப் பேச்சு அவருக்கு வலி மிகுந்தவையாக இருந்தன. பெண்ணிடம் கனிவையும் கண்டிப்பையும் சமமாகத்தானே காட்டினோம் என்று யோசிக்கத் தொடங்கினார்.

புறநானூறு புத்தகத்தை மூடி வைக்கும்போது, ‘வணக்கம் மும்பை’ இதழின் கத்தரிக்கப்பட்ட தாள் கீழே விழுந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஸயான் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘பொங்கல் விழா’ பற்றிய செய்தி அதில் வந்திருந்தது. அதை ஆங்காங்கே படித்துப் பார்த்தார்.தமிழர் திருநாளையொட்டி சிறப்புப் பட்டிமன்றம்... தலைப்பு ‘தகப்பனிடம் அதிகப் பாசத்துடன் இருப்பது மகனா? மகளா?’ இரு அணியினரும் காரசார விவாதம்... நடுவரான முனைவர் நமச்சிவாயம், ‘மகளே’ என்று தீர்ப்பு வழங்கினார்...  

அன்றைய முடிவு தவறோ என்று இப்போது சிந்தித்தார். மனமாற்றத்திற்காக சமீபத்திய திரைப்பாடலை ஒலிக்கச் செய்தார். ‘கண்ணான கண்ணே...’ என்ற சித்ராமின் குரல் அவரை நெகிழ வைத்தது. வருத்தத்துடன் கண்ணீர்த் துளிகளை வேட்டி நுனியால் ஒற்றியெடுத்தார்.‘நண்பர்கள்’ ஆங்கிலத் தொடரைப் பார்த்து ஓயாமல் சிரித்துக் கொண்டிருந்தவளின் அறைக்கதவைத் தட்டிய தாயார் “மங்கா... எவ்வளவு நேரமா கூப்பிடறது... கதவைத் திறடி...” என்றாள்.

“என்னம்மா...” என்று ஹெட் ஃபோனைக் கழற்றியபடி வெளிப்பட்டாள் மங்கையர்க்கரசி.“போன வாரம் நான் காட்கோபர் போயிருந்தப்போ அப்பாகிட்ட வாக்குவாதம் பண்ணியா... இன்னிக்கி திரும்பி வந்தவுடனே சொல்லி ரொம்ப கவலைப்பட்டார். ஒனக்கு என்னடி குறை வெச்சிருக்கோம்...”“சின்ன வயசுலேருந்து நான் கேட்டது எதுவுமே கிடைக்கலை...” என்று ஏக்கமாய் ஆரம்பித்தாள் “எனக்கு பூனை வளர்க்கணும்னு ஆசை.

 அதோட மிருதுவான சருமம், பயந்த சுபாவம்... எல்லாம் ரொம்பப் பிடிக்கும். ஆனா, இஷ்டப்பட்டதை செய்யக் கூடாதே... ‘அது வீடெல்லாம் அசிங்கம் பண்ணிடுமாம். முடி உதிர்ந்தா நமக்கு வியாதி வருமாம். குறுக்க ஓடினா சகுனத்தடையாம்...’ இதெல்லாம் உங்க புருஷனோட கண்டுபிடிப்பு. இவரு மட்டும் கவியரங்கத்துல பாரதியாரை கோட் பண்ணுவாரு... ‘வெள்ளை நிறத்தொரு பூனை... எங்கள் வீட்டில் வளருது கண்டீர்...’ பாரதி வளர்க்கலாம்... பொண்ணு வளர்க்கக் கூடாதா..?”

“இது ஒரு விஷயமா மங்கா..? உம்பேர்ல உயிரையே வெச்சுருக்கார் மனுஷன்...’’“அது அன்பு இல்லம்மா... அடக்குமுறை, ஆதிக்கம்...” என்று படபடத்தாள். “பதினெட்டு வயசு முடிஞ்சவுடனேயே ரத்த தானம் பண்ணணும்னு ஆசையா காத்துட்டிருந்தேன். நானாவதி ஆஸ்பிட்டல்ல கூட சொல்லி வெச்சுட்டேன். இந்த சர்வாதிகாரி அதையும் செய்ய விடலை. அன்னிக்கி பிறந்த நாள்... அர்ச்சனை பண்ணணும்னு செம்பூர் முருகன் கோயிலுக்கு கூட்டிட்டு போனாரு... அங்கயே ரொம்ப லேட்டாயிடுச்சி. ப்ளட் டொனேட் பண்ண முடியலை...’’
“நாங்க ஒனக்கு எதுவுமே பண்ணாத மாதிரி பேசறே...”“எப்பவும் வெஸ்டர்ன் மியூஸிக் கேட்டுட்டே இருக்கேன்னு ஒரு கம்ப்ளெய்ண்ட்.

இவரு காலையில சஷ்டி கவசம்... திருவாசகம்னு அலற விடலையா..? நான் எதாவது சொல்றேனா? அப்பறம் ராணுவ முகாம் மாதிரி ‘இதைச் செய்’ ‘அதைச் செய்யாதே’னு கட்டளை... ‘கிண்டிலை டீப்பாய் மேல வெக்காதே...’  ‘ஸ்லிப்பரை ஷூரேக் உள்ளே விடு...’ எல்லா ஐட்டமும் அந்தந்த இடத்துல அப்படியே இருந்தா அது மியூஸியம்...” என்றாள் கோபமாக. “இந்த நச்சரிப்பு ஆசாமியோட இனிமேல இருக்க முடியாது. மேற்படிப்புக்கு நான் ஆஸ்த்ரேலியா போறேன்...”“என்னடி சொல்றே..?” என்று அம்மாவும் அதிர்ச்சிக்குள்ளானாள்.

‘கணபதி பப்பா மோர்யா’ கோஷம் வானைப் பிளந்தது. மும்பையில் விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பிள்ளையார் பொம்மைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரபிக்கடலில் கரைக்கப்படும்.பால கங்காதர திலக் படத்தட்டிகளுடன் சிவசேனா தொண்டர்கள் மேரிகோல்ட் பூமாலை, காவி ஜரிகை பரிவட்டங்கள் சகிதம் ‘அபங்’ இசைத்தபடி நடனமாடிக் கொண்டிருந்தனர்.

மங்கையர்க்கரசி கருமஞ்சள் நிற ஆட்டோவில் பாந்த்ராவிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திற்குச் சென்று கொண்டிருந்தாள். அரோரா டாக்கீஸ் அருகில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. BEST பேருந்தின் பின்னால் ஊர்ந்தது வண்டி.

அவளது கைபேசி சிணுங்கியது. மேற்படிப்புக்காக மெல்போர்ன் சென்றிருக்கும் பள்ளிக்கூட சிநேகிதி ஸ்ருதி பாட்டீல் அழைத்தாள். “ஹாய் அரசி... எப்படியிருக்கே..? எப்போ ஆஸ்ட்ரேலியா வரப்போறே..?”    

“ஹலோ ப்ரோ... கேன்பெர்ரா யூனிவர்சிட்டியில அட்மிஷன் கிடைச்சிருக்கு. இப்ப விஸா இன்டர்வ்யூவுக்கு போயிட்டிருக்கேன்... என்னோட ‘ஸோ கால்ட் ஃபாதர் மார்ச் மாசம் தவறாம சென்னைக்கு போவாரு... கம்பன் விழாவோ... கொம்பன் விழாவோ... ஏதோவொரு ஃபங்ஷன்ல பேச கூப்பிடுவாங்க. அந்தாளு இல்லாத சமயத்துல வீட்டை விட்டு கிளம்பலாம்னு
இருக்கேன்...’’“தூ தஸாகா மட்டேஸ் க...” என்றவள் தானாகவே மொழிபெயர்த்தாள் “ஏன்டி அப்படி சொல்றே..?”

“உன்கிட்டதான் நிறைய புலம்பியிருக்கேனே அவரைப்பத்தி... என்னோட ஆசைகள் எல்லாத்துக்கும் தடங்கல் பண்ணியிருக்காரு. ஞாபகமிருக்கா... நாம எட்டாவது படிக்கறச்சே வாங்கடே ஸ்டேடியத்துல மேட்ச் நடந்தது. பசங்க ஸ்கூலை கட்டடிச்சுட்டு கிரிக்கெட் பார்க்க போனாங்க...”“தெரியும். ரஞ்சனா தேஷ்முக், ப்ரனிதி ஷிண்டே, வெங்கடேஷ் அப்யங்கர்... நானும்தான்...”

“எனக்கு உங்களோட வந்து என்ஜாய் பண்ணணும்னு ஆசை. அதுக்கும் என்னை போக விடலை. ‘பயங்கர கூட்டமா இருக்கும்’, ‘இந்தியா தோத்துட்டா கலாட்டா நடக்கும்’னு ஏதோ சாக்கு சொல்லிட்டாரு. இந்த மாதிரி நிறைவேறாத ஆசைகள் நிறைய புதைஞ்சிருக்கு...”“புலம்பாதே அரசி... இங்கதான் வரப்போறியே... அடுத்த வருஷம் ‘ட்வென்டி ட்வென்டி’ மேட்ச்சுக்கு உன்னை அடிலெய்ட் கூட்டிட்டு போறேன்...’’“தேங்க்யூ ப்ரோ...”

“நான் இந்தளவுக்கு தமிழ்ல பேசறதுக்கு காரணமே உங்கப்பாதான்... உங்க வீட்டுக்கு வரும்போதெல்லாம் எனக்கும் மராட்டி பசங்களுக்கும் டமில் சொல்லிக் கொடுத்திருக்காரு...”
“எப்பவாவது பார்க்கற ஒனக்கு அவர் நல்லவரா தெரியலாம்... என்னைப் பொறுத்தவரை வில்லன்தான்...”லால் பகதூர் சாலையோரக் கடையில் பலர் வடாபாவ், ஸேவ் பூரி தின்றுகொண்டும், பான்பராக் போட்டு சுவரில் துப்பிக் கொண்டும் இருந்தனர்.

மீண்டும் வாகன நெரிசல். அடுத்த மாதம் வரவிருக்கும் மகாராஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பரப்புரை. மேடையில் தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பாஜகவை வசைபாடிக் கொண்டிருந்தார்.ஸ்ருதி, “சரி... அரசி... ஃப்ளைட் டிக்கெட் வாங்கிட்டு சொல்லு. ஏர்போர்ட் வந்து பிக்அப் பண்ணிக்கறேன்...” என்றாள்.

“ஓக்கே ப்ரோ... எம்பஸி வரப்போகுது. அப்பறமா பேசறேன்...” மிட்டீ நதிப் பாலத்தைக் கடந்து ஆஸ்த்ரேலியன் கான்ஸலேட் ஜென்ரலை அடைந்தாள்.சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. பயணிகள் பதற்றமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ஒலி பெருக்கிகளில் இடைவிடாத அறிவிப்புகள்.

இரண்டாவது டெர்மினல் வரவேற்பு மையத்தின் வரிசையில் காத்திருந்த மங்கையர்க்கரசி கைப்பையை பரிசோதித்துக் கொண்டாள். பல்கலைக்கழகத்தின் அனுமதிக் கடிதம், பற்று அட்டை, பாஸ்போர்ட், அந்நியச் செலாவணி முகவரிடம் மாற்றிய ஆஸ்த்ரேலிய டாலர்கள்... பத்திரமாக இருந்தன. கைபேசியில் விமான நிறுவனத்திடமிருந்து வந்த குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் வாசிக்கப்படாமல் இருந்தன.வீட்டிலிருந்து கிளம்பும் போது அம்மா கவலைப்பட்டது நினைவிற்கு வந்தது.“ரெண்டே வருஷம்தான்... கோர்ஸ் முடிச்சுட்டு வந்துடுவேன்...” என்று பொய் சொன்னாள்.

“அப்பா ஊர்ல இல்லாத சமயத்துல நீ பிடிவாதமா வெளிநாட்டுக்கு கிளம்பிப் போறது கொஞ்சம் கூட நல்லாயில்லைடி...’’ என்றாள் தாயார் பதற்றத்துடன். “செல்லுல கூப்ட்டாலும் போனை எடுக்க மாட்டேங்கறார்... இலக்கியக் கூட்டத்துல பேசிட்டு இருக்காரோ என்னமோ...”“நான் ஏற்கெனவே அப்ராட் போறேன்னு சொல்லியாச்சும்மா...” என்று சமாளித்தாள்.

“நீ பேசினதை நாங்க சீரியஸா எடுத்துக்கலை மங்கா... ரகசியமா இவ்வளவு ஏற்பாடுகள் பண்ணியிருக்கே... ட்ராலி எல்லாம் எப்ப வாங்கினே... எதுவுமே தெரியாது. திடுதிப்புன்னு இன்னைக்கு ஆஸ்திரேலியா போறேங்கறே...’’“உங்க வீட்டுக்காரர் இருந்தா என்னை போகவே விடமாட்டாரு... அதனாலதான் அவர் மெட்ராஸ் போகற சமயமா பார்த்து டிக்கெட் புக் பண்ணேன்...”

“ஏண்டி இப்படியெல்லாம் செய்யறே..? அவர் உனக்கென்ன கெடுதல் பண்ணார்... கிளம்பும் போது போன்லயாவது அப்பாகிட்ட சொல்லிட்டு போடி...” என்று படபடத்தாள். கணவரை மீண்டும் லேண்ட்லைனில் தொடர்பு கொள்ள முயன்றாள்.

“நீங்களே சொல்லிடுங்கம்மா. நான் வாட்ஸப் பண்ணிடறேன். ‘கேப்’ வந்துடுச்சி. கிளம்பறேன்...’’“போயிட்டு வரேன்னு சொல்லுடி...’’ என்று புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். அதற்குள் மீட்டர் டாக்ஸி கிளம்பி விட, வண்டியிலிருந்து தலையை நீட்டிய மங்கையர்க்கரசி கையசைத்தாள்.

வீட்டுக் கசப்பை மறப்பதற்காக, சமீபத்தில் எடுத்துக் கொண்ட சுயபடங்களை இன்ஸ்டாகிராமில் பார்க்கலானாள்.கடந்த வாரங்களில் தோழமைளுடன் மும்பை முழுக்கச் சுற்றித் திரிந்தது... நாரிமன் பாய்ண்ட் உணவகத்தில் பார்ட்டி கொடுத்தது... ஜூஹு கடற்கரை நீரில் கால் நனைத்தது... எலிஃபென்டா கேவ்ஸுக்கு படகில் சென்றது... பயமறியா இளங்கன்று போல, நாட்டு நடப்பு பற்றிய கவலையின்றி நட்பு வட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்திருந்தாள்.

ஏர்வேஸ் கவுன்டரிலிருந்த மின்னணு கடிகாரம் 17:03:20 என்று சிவப்பாக நேரம் தெரிவித்தது. அது அன்றைய தேதிக்கும் பொருத்தமாக இருந்தது. குறைந்தபட்ச உடையும் அதிகபட்ச உதட்டுச்சாயமும் அணிந்திருந்த விமான நிறுவனப் பெண்ணிடம் தனது பயணச்சீட்டைக் காண்பித்து “போர்டிங் பாஸ்...” என்று ஆரம்பித்தாள்.

அவள் சிரமப்பட்டு “செல்வி மங்கையர்க்கரசி நமச்சிவாயம்...” என்பதை உச்சரித்து, “மாலை வணக்கம் அம்மணி. உங்கள் அலைபேசிக்கு செய்தி வந்திருக்குமே... ஆஸ்த்ரேலிய அரசாங்கம் வெளிநாட்டு விமானங்களை தரையிறங்க அனுமதிக்காததனால், இன்றிலிருந்து அந்நாட்டுக்கான சேவைகளை காலவரையின்றி ரத்து செய்துள்ளோம்...” என்றாள் தூய ஆங்கிலத்தில்.

“என்ன காரணம்..?” என்று அதிர்ந்தாள் மங்கை.அந்த யுவதி கண்களில் வியப்புடன், முகக்கவசம் அணிந்தபடியே பதிலளித்தாள் “கோவிட் பெருந்தொற்றுதான்...”  

- சித்ரூபன்