ஒரு கோடி மதிப்புள்ள சொத்துகளை ரிக்‌ஷா ஓட்டுநருக்கு எழுதிவைத்த பாட்டி!



சமூக வலைத்தளங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வரும் வைரல் நிகழ்வு இது. ஒடிசாவின் கட்டாக் நகரிலுள்ள சுடாகட் எனும் இடம். அங்கே பல வருடங்களாக வசித்து வருகிறார் மீனாட்டி பட்நாயக். அந்தக் காலத்திலேயே வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இவர். மீனாட்டியின் கணவர் ஒரு எஞ்சினியர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த வருடம் ஜூலை மாதம் இறந்துவிட்டார். கணவரை இழந்த துக்கத்தில் இருந்த மீனாட்டிக்கு இன்னொரு பலத்த இழப்பு.

ஆம்; இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவரது ஒரே மகளான கமல் மாரடைப்பால் இறந்துவிட்டார். கமலின் வயது 30. அடுத்தடுத்த இரண்டு இழப்புகளைச் சந்தித்த மீனாட்டி தனிமையில் விடப்பட்டார். அவருக்கு உறவினர்கள் இருந்தும் யாருமே அருகில் இல்லை. தவிர, மீனாட்டி ஒரு இதய நோயாளியும் கூட. இந்நிலையில் தனது மூன்று அடுக்கு மாடி வீடு, நகைகள் என ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை ரிக்‌ஷா ஓட்டுநர் புத்த சமாலுக்கு எழுதி வைத்திருக்கிறார் மீனாட்டி.

யார் இந்த புத்த சமால்?

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மீனாட்டியின் குடும்பத்துக்கு ரிக்‌ஷா ஓட்டியிருக்கிறார் சமால். மீனாட்டியின் மகளை  பள்ளி, கல்லூரிக்கு அழைத்துச் சென்று, வீட்டுக்கு திரும்பக்கொண்டு வந்துவிட்டது சமால்தான். மீனாட்டி எப்போது அழைத்தாலும் உடனே வந்து நிற்பார் சமால். மீனாட்டி உடல் நிலை சரியில்லாதபோது உறவினர் யாருமே வரவில்லை. சமாலும், அவரது குடும்பத்தினரும்தான் அருகிலிருந்து மீனாட்டியைக் கவனித்துக்கொண்டனர். இத்தனைக்கும் சமால் எதையும் எதிர்பார்க்கவில்லை.

இக்கட்டான சூழலிலும், எல்லா நேரங்களிலும் தனக்குத் துணையாக இருந்த சமாலின் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார் மீனாட்டி. உடனே அவர்களைத் தன்னுடைய வீட்டில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்து, தனது முழுச்சொத்தையும் சமாலின் பெயரில் எழுதிக் கொடுத்துவிட்டார் மீனாட்டி.

த.சக்திவேல்