ஜீரோ டூ ஹீரோ படத்தின் இயக்குநர் ஜிம்மி வான்



ஹாங்காங்கிலிருந்து சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கும் படம், ‘ஜீரோ டூ ஹீரோ’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த கண்டோனிஸ் மொழிப்படம். ஹாங்காங் மக்களால் ‘வொண்டர் பாய்’ என்றழைக்கப்படும் சோ வா வாயின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

மஞ்சள்காமாலையுடன் பிறக்கிறான் சோ வா வாய். மஞ்சள் காமாலை சோவின் கேட்கும் திறனைப் பறிப்பதோடு, கை, கால் மூட்டுகளில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதனால் சோவால் எழுந்து நிற்கக் கூட முடியாது. தவிர, ஏழ்மையான குடும்பம் வேறு. அம்மாவின் அன்பும், அரவணைப்பும் எப்படி சோவை ஒரு ஓட்டப்பந்தய வீரனாக மாற்றுகிறது என்பதே இன்ஸ்பிரேஷன் திரைக்கதை.

பாரா ஒலிம்பிக்கில் ஹாங்காங்கிற்காக முதல் தங்கம் வென்ற தடகள வீரர் சோ வா வாயின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்ப்பதைப் போல் படமாக்கியிருப்பது சிறப்பு.
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதையில், பரிசுத்தொகையில் பத்து சதவீதம் கூட பாரா ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த வீரர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.