நாய்களுக்கு தனி சேனல்!



கடந்த வாரம் இங்கிலாந்தில் நாய்களுக்கு என்று பிரத்யேகமாக ‘டாக் டிவி’ என்ற தொலைக்காட்சி சேனல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் மன ரீதியாக பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்தப் பிரச்னைகள் அதன் இயல்பிலிருந்து மனதைச் சிதைக்கின்றன. அதனால் நாய்களுக்கும்  காட்சி ரீதியான பொழுதுபோக்கு அம்சங்கள் தேவை. இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் வைத்து, மூன்று வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ‘டாக் டிவி’யை உருவாக்கியிருக்கின்றனர் நிபுணர்கள்.

நாயின் உணர்ந்துகொள்ளும் திறனுக்கு உகந்தவாறு வண்ணங்கள், ஒலிச்சேர்க்கைகள், கேமரா கோணங்கள் இருக்கும். அத்துடன் பார்த்தவுடனே நாயை ஈர்க்கும். நாயின் மனநிலைக்கு ஏற்றவாறும், தன்னை அது ஆசுவாசப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன. தவிர, வளர்ப்புப் பிராணிகளைப் பற்றி மனிதர்கள் புரிந்துகொள்வதற்கான நிகழ்வுகளும் இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும். இப்போது சில வீடுகளுக்குப் பயிற்சி ஒளிபரப்பு மட்டுமே நடக்கிறது. கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இங்கிலாந்து முழுவதும் ‘டாக் டிவி’ டிஆர்பியை அள்ளும்.

த.சக்திவேல்