இவர்தான் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி!



1992ல் கும்பகோணம் மகாமக நெரிசலில் சிக்கியவர்களை மீட்டவர்...
கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவியவர்...
ஆதரவற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தவர்...
சினிமா ஆசையில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றியவர்...
கொரோனாவில் பலியானவரை அடக்கம் செய்தவர்...  
நிவர் புயலில் சிக்கிய இளைஞருக்கு உயிர் கொடுத்தவர்...

சென்னை கீழ்பாக்கத்தில் கல்லறையில் மயங்கிக் கிடந்த ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிர் காத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிதான் கடந்த வார ட்ரெண்டிங்.
இவரது செயலுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தன. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியதோடு, ‘முறிந்து விழுந்த மரத்தின் கீழ் சுயநினைவின்றி கிடந்த உதயா என்பவரை துணிவுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் அர்ப்பணிப்பிற்கும், அவரது கடமை உணர்விற்கும் மகத்தான பணிக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு, 1992ம் ஆண்டு கும்பகோணம் மகாமகத்தின்போது நெரிசலில்சிக்கி உயிருக்குப் போராடியவர்களை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டதையும், காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்ப கம்பீரமாகவும், கருணை உள்ளத்துடனும் தாங்கள் மேற்கொண்ட பணி காவல் துறையில் உள்ள அனைவருக்கும் பெருமையையும், ஊக்கத்தையும் அளிக்கக் கூடியது என்றும் முதலமைச்சர் பாராட்டினார்.இரும்பு இதயம் கொண்ட காக்கிகளுக்கு மத்தியில் இலகிய மனம் படைத்த ராஜேஸ்வரி இது போன்ற சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். அதே நேரத்தில் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் அதிகாரியாகவும் இருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கே.எச்.சாலை அருகே இரவு ரோந்துப் பணியிலிருந்தார். அப்போது சாலையில் ஒரு மூதாட்டி பதற்றத்துடன் அழுதபடி இங்கும் அங்குமாகத் திரிவதைப் பார்த்துள்ளார். அவரை அழைத்து ‘என்ன பிரச்னை’ என்று கேட்டார். சகுந்தலா என்ற அந்தப் பெண்மணி ‘என் மகள் ஷீலா பிரசவ வலியால் துடிக்கிறாள். தலைப்பிரசவம். பனிக்குடம் உடஞ்சுருச்சு. ஆஸ்பத்திருக்கு கூட்டிட்டு போக வழி தெரியல. உதவிக்கு யாருமே இல்லை’ என்று அழுதிருக்கிறார். ராஜேஸ்வரி உடனே ஆம்புலன்சுக்கு தகவல் சொன்னார்.

ஷீலாவின் வீடு இருந்தது ஆம்புலன்ஸ் வர முடியாத தெரு. உடனடியாக அந்தப் பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றி வந்த ராஜேஸ்வரி ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தார். ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதன் பின் ஷீலாவை ஏற்றி அனுப்பி வைத்தார். அந்த இரவிலேயே ஷீலாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

செங்குன்றத்தில் வசித்தவர் இருபது வயது சுகன்யா. அம்மா புற்றுநோயால் இறக்க, அப்பா தற்கொலை செய்துகொள்ள, தனது தங்கை 17 வயது பிரீத்தியுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். பார்வைக் குறைபாடுள்ள சுகன்யாவிற்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்தை நடத்த பணமின்றி தவித்த சுகன்யா இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியைச் சந்தித்து உதவி கேட்டுள்ளார். ராஜேஸ்வரியும் அவருடன் பணிபுரியும்  சக காவலர்களும், நண்பர்களும் இணைந்து சுகன்யாவிற்கு நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கி, திருமணத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தனர்.

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, பிரபாவதி ஆகியோர் சாலையோரத்தில் வசித்து வந்தனர். சாலையோரங்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து விற்றால்தான் அவர்களுக்கு வருமானம். கொரோனா ஊரடங்கு நாட்களில் பிரபாவதி உடல் நலமின்றி இறந்து போனார்.கொரோனா அச்சம் காரணமாக அவரை அடக்கம் செய்ய யாரும் உதவிக்கு வரவில்லை. சகோதரிகள் இருவரும் சாலை ஓரத்திலேயே வைத்து கண்ணீர் விட்ட நேரத்தில் இந்த விஷயம் ராஜேஸ்வரி கவனத்திற்குப் போனது. அவர் பிரபாவதிக்கு புதுப் புடவை அணிவித்து உடலை ஓட்டேரி மயானத்திற்கு எடுத்துச் செல்ல வைத்து தகனம் செய்தார்.

நிவர் புயலின்போதும் இதே போன்ற ஒரு மீட்புப் பணியை செய்திருக்கிறார் ராஜேஸ்வரி. புயல் தீவிரம் காட்டிய இரவு நேரத்தில் கீழ்பாக்கம் சாமிதாரபுரம் பகுதியில் ஒரு குறுகலான சந்தில் இடியும் நிலையில் உள்ள வீட்டில் வசித்த கணேஷ் என்ற 33 வயது நபர் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீசாருடன் அந்த குறுகலான சந்துக்குள் சென்று கணேஷை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். சில மணி நேரங்களில் அந்த பழமையான வீடு இடிந்து விழுந்தது.

கொரோனா நாட்களில் ராஜேஸ்வரியுடன் பணிபுரியும் போலீசாருடன் இணைந்து ஆதரவற்றோர் பலருக்கு உணவும் மருந்தும் கொடுத்திருக்கிறார்.இதுபோன்று பல சேவைகளைச் செய்து வருபவரிடம், ‘சம்பவம் நடந்த அன்று நீங்களே தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?’ என்ற கேள்வியினை முன் வைத்தோம்.
“அடுத்தவர்களை தொந்தரவு செய்யக் கூடாதே! மண், சேறு, புழு, அதோடு அவரது உடல் துர்நாற்றம்.

அதை எப்படி என் போலீஸை தூக்கச் சொல்ல முடியும்? நான் தூக்கி ஒருமுறை காண்பித்தால் அடுத்த முறை செய்வார்கள் இல்லையா! அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும். அந்த நேரத்தில் அது மட்டும்தான் தோன்றியது...” என்றவர், “எவ்வளவோ வேலைகள் செய்திருக்கிறோம். அதற்கு உடனே யாரும் பாராட்டு தெரிவிக்கவில்லையே! இந்த முதல்வர்தானே பாராட்டி இருக்கிறார். அவர் அழைத்து பாராட்டும்போது அதை விட என்ன பெரிய சந்தோஷம் எங்களுக்கு...” என்கிறார். ‘காவல் துறை என்றாலே மக்களுக்கு ஒரு பயம் இருக்கிறதே?’ என்றதும் ராஜேஸ்வரி புன்னகைத்தார்.

‘‘எங்க போலீஸ் அத்தனை பேருமே மக்களோடு சகோதரனாக, தாய் பிள்ளையாகத்தான் பழகும்படி வைத்திருக்கிறேன். மற்ற ஸ்டேஷன் போல் இல்லாமல் எந்தத் தகவல் வந்தாலும் எங்களுக்குத்தான் முதலில் வரும். கண்ட்ரோல் ரூமுக்கோ, ஆபீஸருக்கோ போகவே போகாது. இங்கு நாங்களும் மக்களும் ஓர் உறவாகத்தான் இருக்கிறோம். அன்று கூட அந்தப் பையன் இறந்துவிட்டார் என்று எனக்குத்தானே போனில் தகவல் வருகிறது!

காவல்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள் முதலில் சொல்வதே ‘மனித நேயத்துடன் நடந்துக்கோங்க’ என்பதுதான். ‘மக்களோடு நல்லுறவாக இருங்க. புகார்தாரர் வந்தால் அவர்களோடு அன்பாக பேசுங்க. தேநீர் கொடுங்க. கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு உதவி செய்ங்க...’ அதுதான் முதலில் சொல்லித் தருவது. அடுத்துதான் நம் வேலை. ஒருவர் தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும்... ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்கிற நோக்கம் காவல்துறையில் கிடையாது. முதலில் திருந்துகிறார்களா என்றுதான் பார்ப்போம். திருந்துவதற்கு வழி வகை செய்வோம். திருந்தவில்லை என்றால் முதல் முறை மன்னிப்போம்... இரண்டாம் முறை கண்டிப்போம்... மூன்றாவது முறைதான் நடவடிக்கையே எடுப்போம்.

காவல் துறை நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். மக்களுக்கு ஓர் உதவி என்றால் உடனே இறங்கி வேலை செய்யுங்கள். என்ன ரிஸ்க்காக இருந்தாலும் பார்க்காதீர்கள். இது காவலர்களுக்கு மட்டுமல்ல,மக்களுக்கும்தான். நிறையப் பேர் செய்துகொண்டிருக்கிறார்கள். வெளிச்சத்துக்கு வரவில்லை.

நான் செய்வது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என்றால் இதை எல்லோரும் செய்ய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றுதான் அர்த்தம். காவல் துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே இந்த சேவைகளைச் செய்து வருகிறேன்; வந்த பிறகும் செய்கிறேன். ஓய்வு பெற்ற பிறகும் தொடர்வேன்...’’ அழுத்தமாகச்சொல்கிறார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

அன்னம் அரசு