சென்னை வெள்ளம்... இனி என்ன செய்ய வேண்டும்?



சொல்கிறார் இந்தியா, ஹாங்காங், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பணியாற்றிய மு.இராமனாதன்

கடந்த அக்டோபர் 26ம் தேதிதான் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அடுத்த ஒருவாரத்திலேயே கனமழை சென்னையைப் புரட்டிப் போட்டுவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்தாலே சென்னைவாசிகள் பயப்படும்படி ஆகிவிடுகிறது. மழையால் வீட்டிற்குள் தண்ணீர் வந்திடுமோ என்கிற பயம் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகே கூடியிருக்கிறது.

இந்த ஆண்டும் 20 செமீக்கு மேல் மழைப் பொழிவு பெரும்பாலான இடங்களில் பெய்திருக்கிறது. இதனால், தெருக்களிலும், சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்வை குலைத்திருக்கிறது. இந்நிலை இனி மாற என்ன செய்ய வேண்டும்?

எழுத்தாளரும், பொறியாளருமான மு.இராமனாதனிடம் பேசினோம். ஹாங்காங்கிலும், பிரிட்டனிலும் சார்ட்டட் பொறியாளராக பதிவு பெற்ற இவர், இந்தியா, ஹாங்காங், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பணியாற்றியவர்.
அவரின் அனுபவம் வழியே சென்னையின் வெள்ளப் பிரச்னைக்கு சில தீர்வை முன்வைக்கிறார்.
‘‘பொதுவா, மழையினால் வெள்ளம் வரும்போதுதான் எல்லோரும் ஆக்கிரமிப்புகள் பற்றி பேசுறோம். ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்குனு பொங்குறோம். இது ஏதோ இருபது, முப்பது ஆண்டுகள்ல நடந்தமாதிரி ஆதங்கப்படுறோம்.

ஆனால், நகரத்தின் நீர்நிலைகளை, நீர்ப்பரப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பது நீண்டகாலமா நடந்திட்டு இருக்கு. இப்ப ஆறுனு சொன்னா அதுக்கு கரை இருக்கும். அதைத்தாண்டி வெள்ளச் சமவெளினு ஒரு பகுதி உண்டு. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால் இந்த வெள்ளச்சமவெளி பாதுகாக்கும். அதனால், அதுவரை எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமல் வைக்கணும்.

ஆனா, இப்ப வெள்ளச் சமவெளிகளும், ஆற்றங்கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. அப்புறம், ஆற்றின் நீரோடும் பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் அகலமும் குறைஞ்சு போச்சு.

சென்னையைப் பொறுத்தவரை மேடு, பள்ளங்கள் இல்லாத சமவெளியான பகுதி. இயற்கையிலேயே வெள்ளம் வருவதற்கு எந்த சாத்தியமும் இல்லாத ஒரு நகரம். கொசஸ்தலை, கூவம், அடையாறுனு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மூன்று ஆறுகள் ஓடுது. இதுபோக ஆங்கிலேயர்கள் பக்கிங்ஹாம் கால்வாயை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உருவாக்கியிருக்காங்க. அடுத்து, நான்கு பிரதான ஏரிகள் இருக்கு. இதற்கு வரத்து வாய்க்கால்களும் இருக்கு.

இவற்றையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்தாச்சு. இவை ஒழுங்கா இருந்திருந்தால் இப்ப இருக்கிற வெள்ளப் பிரச்னை வந்திருக்காது. இந்த ஆக்கிரமிப்புகள் எப்படி நடந்ததுனு பார்க்கணும். இப்ப வருவாய் ஆவணத்துல ஆறுகள், ஓடைகள், குளங்கள், ஏரிகளைச் சுற்றிலும் புறம்போக்கு நிலங்கள் இருக்கும். இந்த புறம்போக்கு நிலங்கள்ல இப்ப கட்டடங்கள் கட்டியிருக்காங்க. அதற்கெல்லாம் பட்டா இருக்கு. யார் கொடுத்தானு தெரியல.

பொதுவா ஆக்கிரமிப்புனா எல்லோரும் குடிசைப் பகுதியையே கை காட்டுறோம். ஆனா, அவங்க மட்டும்தான் ஆக்கிரமிப்பாளர்களா? இல்ல. பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுக் கட்டடங்கள் எல்லாமே ஆக்கிரமிப்பு நிலங்கள்லதான் இருக்கு. அப்ப நாம் என்ன செய்யணும்னா வருவாய்த் துறையிடம் இப்போதுள்ள ஆவணத்தை எடுத்து எதெல்லாம் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டுள்ளதோ அதை எந்தத் தயவு தாட்சயண்யமும் இல்லாமல் அகற்றணும்.

இப்ப தி.நகர்ல ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 2018ல் இருந்து பல கோடி ரூபாய் செலவழிச்சிருக்காங்க. ஆனா, வெள்ளம் நிற்குது. என்ன காரணம்? அங்குள்ள கால்வாய்களை குப்பைகள் அடைத்துக் கொண்டிருக்கு. இதைவிட முக்கியமா தி.நகர்ல அமைக்கப்பட்ட புதிய கால்வாய்கள், அல்லது சீரமைக்கப்பட்ட கால்வாய்களை மாம்பலம் கால்வாயுடன் இணைக்கிறாங்க.

இந்த மாம்பலம் கால்வாய் பெரிய கால்வாய். ஆனா, இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது அதிலிருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகளையும், கான்கிரீட் இடிபாடுகளையும் இந்தக் கால்வாயில் வந்து கொட்டியதா சொல்றாங்க.

முதல்ல, போடப்பட்ட வடிகால்கள் போதுமானதா இல்ல. ரெண்டாவது, இருக்கிற வடிகால்கள் பிரதான கால்வாயுடன் இணைக்கப்படல. அடுத்து, பிரதான கால்வாயும் குப்பைகள் சேர்ந்து மோசமா இருக்கு. அப்புறம், பிரதான கால்வாய்கள் ஆற்றுடன் இணைக்கப்படல. அப்ப தண்ணீர் தேங்கத்தானே செய்யும்?

நான் இருபது ஆண்டு காலம் ஹாங்காங்ல பணியாற்றினேன். அங்க மழைநீர் தேங்காமல் இருக்க 1989ல் வடிகால் பணிகளை பெரியளவில் முன்னெடுத்தாங்க. இதுக்காக டிரெயினேஜ் சர்வீஸஸ் டிபார்ட்மெண்ட்னு ஒரு வடிகால் சேவைகள் துறையை உருவாக்கி, நகரத்திற்கான வடிகாலை டிசைன் பண்ணினாங்க.

அதாவது, ஐம்பது ஆண்டுகள்ல வரக்கூடிய வெள்ளத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான வடிகால்களைத் தெருக்களில் அமைச்சாங்க. பிறகு, இந்தக் கால்வாய்களை பிரதான கால்வாயுடன் இணைச்சாங்க. இந்த பிரதான கால்வாயை பெரிசா கட்டினாங்க. அதாவது, இந்த பிரதான கால்வாயினை அடுத்த இருநூறு ஆண்டுகள்ல அதிகபட்சமா பெய்யக்கூடிய மழை வெள்ளத்தைத் தாங்கும் திறன் கொண்டதா வடிவமைச்சாங்க.

சென்னை மாதிரி ஹாங்காங் சமதளமான பூமியில்ல. மேடு பள்ளமும், மலைப்பாங்கும் உள்ள பகுதி. அதனால, அவங்களால நிறைய இடங்கள்ல கால்வாயை கீழ கொண்டு போக முடியல. எந்தெந்த இடத்தில் எல்லாம் கால்வாயை கீழ கொண்டு போக முடியலயோ அந்த இடத்துல கால்வாயை நிறுத்தினாங்க.

இதை இன்டர்செப்ஷன்னு சொல்வாங்க. அதாவது, நீரை அங்கேயே நிறுத்தி அதை பிரதான கால்வாயுடன் இணைக்காமல், தனியாக சுரங்கப்பாதையை அமைத்து அதன்வழியே நேரடியா கடலுக்குக் கொண்டு போனாங்க. அந்த சிஸ்டம் இப்பவரை அங்க சிறப்பா செயல்பட்டுட்டு வருது.

இதைபோல நமக்கும் ஒரு தீர்வு வேணும். முதல்ல நம்ம பிரச்னைக்கு ஒரு எஞ்சினியரிங் தீர்வை கண்டுபிடிக்கணும். அதை நிபுணர்கள்கிட்ட விடணும். அவங்க கொடுக்கிற பரிந்துரைகளில் சிறந்ததை எடுத்துச் செயல்படுத்தணும். இப்ப தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைச்சிருக்காங்க. இது நல்ல நடவடிக்கை.

சென்னையில் சுமார் 6 ஆயிரம் கிமீ சாலைகள் இருப்பதா சொல்றாங்க. ஆனா, அதுல பாதிக்குப் பாதி கூட மழைநீர் வடிகால் இல்ல. அதனால, முதல்ல எல்லா பகுதியிலும் வடிகால்கள் அமைக்கணும். சில இடங்கள்ல இப்ப இருக்கும் வடிகால்கள் போதுமானதா இருக்காது. அல்லது தரம் இல்லாமல் இருக்கும். அதையெல்லாம் சரி செய்யணும். அப்புறம், 16 பிரதான கால்வாய்கள், மூன்று ஆறுகள், ஒரு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் பாதைகளை சரி செய்யணும்.

சென்னையின் வடிகால்களை மாநகராட்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், சிஎம்டிஏனு பல துறைகள் பராமரிக்கிறதா சொல்றாங்க. சாலைகளைப் போடும்போது நெடுஞ்சாலைத்துறையே சில வடிகால்களைக் கட்டுறாங்க. சில வடிகால்கள் பொதுப்பணித்துறையிடம் இருக்கு. அப்புறம், குடிநீர் வடிகால் வாரியம் இந்த வடிகாலுக்காகவே தொடங்கப்பட்ட அமைப்பு. அடுத்து, சிஎம்டிஏ இருக்கு. ஆக, இவ்வளவு பேர்களுக்கு பொறுப்புகள் இருக்கு.

ஆனா, இவ்வளவு பேர்களுக்கு பொறுப்பு இருந்தா கடைசியா அது யாருக்கும் பொறுப்பில்லைன்னு ஆகிடும். இதனாலதான் ஹாங்காங்ல வடிகால் சேவைகள் துறைனு ஒரு தனி அமைப்பை உருவாக்கினாங்க. அவங்கதான் ஐம்பது ஆண்டுகள் மழையை கணக்கிட்டு முடிவு பண்ணினாங்க. அதுமாதிரி ஒரு தனித்துறை இங்கேயும் தேவை. அதுல இருக்கிற நிபுணர்கள் அடுத்த ஓர் ஆண்டுல என்ன செய்ய முடியும்... அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகள்ல என்ன செய்யணும்னு ஒரு ப்ளூபிரிண்ட் தயார் பண்ணி அதை பின்பற்றணும்.

முதல்ல எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியுமோ அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்தணும். அப்புறம் ஏரிகள், குளங்களை தூர்வாரணும்.

ரெண்டாவது, இந்த நகரத்திற்கான வடிகால் சிஸ்டத்தை டிசைன் பண்ணி அதற்கேற்ப மழைநீர் வடிகால் கால்வாய்களை அமைக்கணும். மூன்றாவதா, இந்த மழைநீர் வடிகால்களை பிரதான கால்வாயுடனும், ஆறுகளுடனும் இணைக்கணும்.

இந்த மூன்றையும் செய்தால் தண்ணீர் தேங்காமல் மழைக்காலங்களில் சாலைகள் சிறப்பானதாக மாறும். நீர்ப்பிடிப்பு பகுதியும் அதிகரிக்கும். நிலத்தடி நீரும் உயரும்.
இது உடனடியா நடக்கிற காரியம் இல்லதான். ஹாங்காங்ல கட்டுமானப் பணிகள் முடிக்க ஐந்து ஆண்டுகள் வரை ஆச்சு.

இப்பவரை அதை பராமரிச்சிட்டு இருக்காங்க.
அதனால, இப்போதிலிருந்து அதற்கான பணிகளைத் தொடங்கணும். இறுதியா, இதற்கு மக்களும் ஒத்துழைப்பு நல்கணும். ஏன்னா, மழைநீர் வடிகாலில் வருகிற நீரில் முதல்ல கழிவுநீர் கலக்குது. ரெண்டாவது குப்பைகளைப் போடுறாங்க. எல்லா மழைக்காலத்திற்கு முன்னாடியும் வடிகால் குழாய்ல இருக்கிற குப்பைகளை அள்ள வேண்டியிருக்கு. இதை மக்கள்தான் சரிசெய்யணும்...’’ என்கிறார் மு.இராமனாதன்.

பேராச்சி கண்ணன்