Coffee Table!



ஒரு தந்தையின் கதை!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளியாகி யிருக்கும் திரைப்படம் ‘கிங் ரிச்சர்ட்’. புகழ்பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ், செரினா வில்லியம்ஸின் தந்தையே ரிச்சர்ட். தனது இரு மகள்களையும் டென்னிஸ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ரெய்னால்டோ மார்க்கஸ் கிரீன்.

இதில் வில் ஸ்மித், ரிச்சர்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ரிச்சர்ட் வில்லியம்ஸ் தனது மகள்களுக்கான பாதையை எவ்வாறு வடிவமைத்தார்... அவர்களை டென்னிஸ் உலகில் சிறந்தவர்களாக விளங்கச் செய்ய எவ்வாறு உழைத்தார்... அவரின் குடும்பம் எதிர்கொண்ட சில இனவெறி சம்பவங்கள்... உள்ளிட்டவற்றை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
கடந்த வாரம் இதன் பிரீமியர் ஷோவை வில் ஸ்மித்துடன் சேர்ந்து வீனஸும், செரீனாவும் கண்டுகளித்தனர். மட்டுமல்ல, இந்த படத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகவும் இருவரும் செயல்பட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

சமையல் புத்தகம் எழுதிய பொருளாதார நிபுணர்!

2019ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி. இவர் சமையலிலும் புலி என்பதை அண்மையில் நிரூபித்திருக்கிறார். ‘குக்கிங் டு சேவ் யுவர் லைஃப்’ எனும் அவர் எழுதிய சமையல் குறிப்புப் புத்தகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் சக்கைப்போடு போடுகிறது.

அபிஜித் தினமும் சமைக்கக்கூடியவர். சமையல் பொருட்களையும் அவரே கடையில் போய் வாங்கி வருகிறார். இந்திய, மேற்கத்திய மற்றும் கீழை நாடுகளின் உணவுகளை எப்படி ஒருவர் எளிமையாகச் செய்யலாம் என்று இந்தப் புத்தகத்தில் மெனு விவரம் கொடுக்கிறார் அபிஜித்!

மினி டிராவல் பவர் பாக்ஸ்

செல்போன், ஏர்பாட், ஸ்மார்ட் வாட்ச் என கேட்ஜெட்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்காகவே முதல்தரமான காப்பர் ஒயர்களைக் கொண்டு இந்த மினி டிராவல் பவர் ஸ்ட்ரிப் க்யூபை உருவாக்கியுள்ளனர். இதில், நான்கு பவர் ஸ்ட்ரிப்கள், மூன்று USB க்யூப்கள் உள்ளன. ஒரே நேரத்தில் பல சாதனங்களை பயன்படுத்தும்படி வடிவமைத்துள்ளனர். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாக நீண்ட ரயில் பயணங்களுக்கும், குறைவான வசதிகள் உள்ள இடங்களில் தங்கும்போதும் உதவியாக இருக்கும். மட்டுமல்ல. ரயில் பயணங்கள் மற்றும் எமர்ஜென்ஸி வேலைகளில் உங்கள் பேக்கில் வைத்து எடுத்துச் செல்வதும் எளிது. இதில், பவர் ஸ்ட்ரிப் 750 டிகிரி செல்சியஸ் ஃபயர் ப்ரூஃப் கொண்டது. இதனால், தீ விபத்து குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. நழுவாமல் இருக்க உறுதியான ரப்பர் ஸ்ட்ராப்பும் பொருத்தியுள்ளனர். விலை: 1200/-

பலே ஆஸ்திரேலியா!

முதல்முறையாக ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. 2007ல் தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை 14 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி தன்வசப்படுத்தியிருக்கிறது. இதுவரை ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் 11 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, எட்டு முறை சாம்பியன் பட்டத்தையும், மூன்று முறை தோல்வியையும் சந்தித்திருக்கிறது.

குங்குமம் டீம்