மலாலாவுக்கு நிக்காஹ்!



பெண் கல்விக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய், தனது திருமணப் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து, ‘‘இன்று எனது வாழ்வின் பொன்னான நாள். ஆஸரும் நானும் வாழ்க்கைத் துணையாக இணையும் வகையில் இன்று திருமணம் செய்து கொண்டோம். பர்மிங்ஹாமில் எங்கள் குடும்பத்தினர் சூழ எளிய முறையில் திருமணம் நடந்தது. உங்களின் ஆசியும் பிரார்த்தனையும் வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து நடக்கப் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி...’’ என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்ததற்காக கடந்த 2012ம் ஆண்டு பள்ளியில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது தாலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார். முகம் உள்ளிட்ட பாகங்களில் படுகாயம் அடைந்த மலாலா, பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் மேலும் தீவிரமாக இயங்கத் தொடங்கிய மலாலா, பிரிட்டனின் பர்மிங்காம் பகுதியில் குடியேறி, பெண் குழந்தைகள் கல்வி, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

மலாலாவின் சேவையைப் பாராட்டி 2014ம் ஆண்டு அவரது 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசின் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் இந்த கவுரவத்தைப் பெற்றவர் மலாலாதான். நோபல் பரிசை வென்றபின் மிக இளம் வயதில் ஐ.நாவின் அமைதிக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டார். பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை முடித்தவர், இப்போது மனித உரிமை செயற்பாட்டாளராக இயங்கி வருகிறார்.

“மக்கள் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. உங்கள் வாழ்வில் ஓர் இணையர் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஏன் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கிறது? அது ஏன் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதாக மட்டும் இருக்கக்கூடாது...’’ என்று ‘வோக்’ (Vogue) இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் திருமண உறவு மீதான தமது நம்பிக்கையின்மையை மலாலா வெளிப்படுத்தியிருந்தது இப்போது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

‘‘ஆனால், இதைப் போன்று எதையும் சொல்லக்கூடாது. நீ நிச்சயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் மிகவும் அழகானது என்று எனது தாயார் கூறியுள்ளார்...’’ என்றும் அந்தப் பேட்டியில் மலாலா குறிப்பிட்டிருந்தார்.மலாலா திருமணம் செய்து கொண்ட ஆஸர் மாலிக் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபியில் பொது மேலாளராக இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு விளம்பரங்களை ஒப்பந்தம் செய்து தரும் ஏஜென்ஸியை நடத்தி வந்திருக்கிறார்.

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் போல பாகிஸ்தானிலும் சூப்பர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முல்தான் அணியை நிர்வகித்த அனுபவம் ஆஸர் மாலிக்கிற்கு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டு வருகிறார் ஆஸர் மாலிக். சில ஆண்டுகளாகவே ஆஸர் மாலிக்கும், மலாலாவும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில் கடந்த வாரம் எளிமையாக இஸ்லாமிய நடைமுறைப்படி இத்திருமணம் - நிக்காஹ் - அரங்கேறியிருக்கிறது.

உலகம் முழுவதிலுமிருந்து இவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. இருவரும் அவரவர் துறையில் தொடர்ந்து பயணித்து முத்திரை பதித்து சாதனை புரியவும், ஊடலும் கூடலுமாக மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நிறைவுடனும் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.  

அன்னம் அரசு