தமிழ்நாட்டில் சூழல் கழிப்பறையை கொண்டு சேர்த்த மனிதருக்கு பத்மஸ்ரீ!



கடந்த வாரம் தங்கள் துறையில் அளப்பரிய பணி செய்த பலருக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார் குடியரசுத் தலைவர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த ‘ஸ்கோப்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மாராச்சி சுப்புராமனும் ஒருவர். எகோசான் எனப்படும் சூழல் மேம்பாட்டு சுகாதார கழிப்பறையை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்ற மனிதர். மட்டுமல்ல. நீர் சேமிப்பையும், சிக்கனத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். இதனை கருத்தில் கொண்டே அவருக்கு ‘பத்மஸ்ரீ’ வழங்கப்பட்டிருக்கிறது.

திருச்சியை மையமாகக் கொண்டு தன் பணிகளை முன்னெடுத்து வரும் சுப்புராமனிடம் பேசினோம். ‘‘சொந்த ஊர் குளித்தலை அருகே இனுங்கூர் பஞ்சாயத்துல இருக்கிற புதுப்பட்டினு ஒரு குக்கிராமம். அப்பா மாராச்சி விவசாயி. ஐந்தாம் வகுப்பு வரை படிச்சவர். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் நல்லா படிக்கணும்னு ஆசை. பி.எஸ்சி கெமிஸ்ட்ரி முடிச்சேன். கிராமத்தின் முதல் பட்டதாரி நான். பிறகு, கர்நாடகா மாநிலம் தும்கூர்ல பி.எட் படிச்சேன். அங்க என்னுடன் ‘சேவை’ தொண்டு நிறுவனத்தின் கோவிந்தராஜு படிச்சார்.

அவர் ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய விஆர்ஓ எனப்படும் கிராம சீரமைப்பு நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றினார். அதன் கிளை திருச்சியில் இருந்தது. அவர் 1976ல் என்னையும் அதில் இணைத்தார்.
நான் கிராமப்புற மேம்பாட்டு நிர்வாகத்துல சேர்ந்தேன். அங்க பெல்ஜியத்தைச் சேர்ந்த பேராசிரியர் விண்டி பயிற்சி அளித்தார். அதுல தரமான வீடுகளை குறைந்த செலவில் கட்டும் பயிற்சியைத் தந்தாங்க. அந்தப் பயிற்சிதான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கு...’’ என்கிறவர், கழிப்பறை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த தருணம் பற்றி விவரித்தார்.

‘‘விஆர்ஓ தொண்டு நிறுவனம் முதன்முதலா புதுக்கோட்டை மாவட்டம் மதகம் என்கிற கிராமத்துல என்னை பணி செய்ய நியமிச்சாங்க. அங்க அதிகாலையில் காலைக்கடனை முடிக்க ஊரிலுள்ள நண்பர் ஒருவர் ஏரிக்கு அழைத்துச் சென்றார். எல்லாம் முடிச்சிட்டு திரும்புறப்ப அந்த ஏரி நீரை பயன்படுத்திதான் அன்றாட வேலையை செய்றாங்கனு எனக்கு தெரிஞ்சது.

அந்த ஏரியில் மாடுகளை குளிப்பாட்டுறாங்க, பெண்கள் பாத்திரம் கழுவுறாங்க, குடிநீர் எடுக்குறாங்க, காலைக்கடனை முடிச்சு காலை கழுவுறாங்க. இப்படி சகலமும் அந்த ஏரிதான்.
எனக்கு அதிர்ச்சியா இருந்தது. எல்லாமும் ஓர் இடத்துல பண்றாங்களேனு சொல்லி குளிக்க வேறு இடத்துக்கு போலாம்னு அந்த நண்பர்கிட்ட சொன்னேன். அவர், ‘இது கோடை காலம். வேறு ஏரியில் நீரில்ல. இது ஒண்ணுதான். நேற்றிரவு நீங்க இங்க வந்தப்ப குடிச்ச தண்ணீரும் இந்த ஏரியில் எடுத்ததுதான்’னு சொன்னார்.

எனக்கு இன்னும் அதிர்ச்சி. மனசே சரியில்ல. உடனே, நான் தங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்துல பெரியவர் ஒருவர் இருந்தார். அவர்கிட்ட மூணு அடிக்கு மூணு அடி குழி தோண்டி அதைச் சுற்றிலும் பனையோலையை மறைவா கட்டி வைங்கனு சொல்லிட்டு திருச்சிக்கு பஸ் ஏறினேன். அங்க 20 ரூபாய்க்கு ஒரு சிமெண்ட் கோப்பை வாங்கிட்டு வந்தேன். மறுநாள்ல இருந்து அதை பயன்படுத்த ஆரம்பிச்சேன். கழிப்பறை இல்லனா தண்ணீர் மாசடையும்னு அப்ப என் மனசுல பட்டது. அதனால, எங்க போனாலும் கழிப்பறை பத்தியும் அதன் முக்கியத்துவம் பத்தியும் பேச ஆரம்பிச்சேன்.

இதுமட்டும் காரணமல்ல. 1986ல் நான் ‘ஸ்கோப்’ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி பணி செய்திட்டு இருந்தேன். அப்ப திருச்சிக்குப் பக்கத்துல பூனம்பாளையம்னு ஒரு கிராமம். அங்க ஓர் அம்மா விடியற்காலையில் சாலை ஓரத்தில் காலைக்கடனை கழிக்க போய், பால் வேன் மோதி இறந்துபோனாங்க.

அவங்க வீட்டுல ஒரு கழிப்பறை இருந்திருந்தால் அன்னைக்கு அந்த இறப்பு நடந்திருக்காது. அந்நேரம், பால் வேனை எல்லாம் நிறுத்திட்டாங்க. பெரிய போராட்டம் நடந்தது. மோதின பால்வண்டிக்காரன் இடத்துல இல்ல. ஆனா, மற்ற வண்டியை பிடிச்சி வச்சிருக்காங்க. அவங்ககிட்ட பேசி அந்த வண்டியை அங்கிருந்து போகச் செய்தேன்.

பின்னாடி அதே கிராமத்துல நிறைய கழிப்பறைகளைக் கட்டினேன். இதுதவிர, கழிப்பறை இல்லாததால பொதுவெளிக்குப் போய் பாம்பு கடிச்சு நிறைய பேர் இறந்திருக்காங்க. பல குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு போயிருக்கு. இதெல்லாம் என் மனசை ரொம்ப கஷ்டப்படுத்துச்சு. என் ஸ்கோப் நிறுவனம் வழியா 1986ல் இருந்து 1996ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் டெய்லரிங் பயிற்சி, காளான் வளர்ப்புனு நிறைய விஷயங்கள் செய்தேன். பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவினேன்.

ஆனா, அவங்க வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவமனைக்கே செலவாச்சு. காரணம், அசுத்தமான குடிநீராலும், முறையற்ற சுகாதாரத்தாலும் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு செலவழிக்க வேண்டியதாச்சு. இதையெல்லாம் உணர்ந்ததும் முதல்ல ஆரோக்கியமே முக்கியம்னு முடிவெடுத்தேன். என் கவனத்தை சுகாதாரம் பக்கம் திருப்பினேன்.

ஆரம்பத்துல லீச் பிட் டாய்லெட்னு சொல்லப்படுற உறிஞ்சி குழி கழிப்பறைகளை 200 ரூபாய்க்குக் கட்டிக் கொடுத்தேன். குறைந்த செலவில் தரமா கட்டி மக்களின் மனங்களை மாற்றினேன். கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கழிப்பறை அவசியம்னு சொல்லி எளிய கிராமத்து மக்களுக்கு புரிய வைச்சேன். கிராமங்கள்ல மகளிர் மன்றங்கள் துவங்கி அதன்வழியா பல விஷயங்களைக் கொண்டு சேர்த்தேன்.

பிறகு காட்டுக்குளம், தேவர்புரம்னு இரு கிராமங்கள்ல உறிஞ்சி குழி கழிப்பறைகள் கட்டினேன். அதுக்கு முன்னாடி மத்திய கிராமப்புற சுகாதாரத் திட்டம்னு இருந்தது.
இதுல 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்க. ஒரு பிளாக்கிற்கு 50 கழிப்பறைகள் கட்டணும். ஆனா, ஒரு பிளாக்ல 30 பஞ்சாயத்துகள் இருக்கும். அப்ப ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு கழிப்பறையே கட்டமுடியும். அது சரிவராது.

அதனால, ஒரு கிராமத்துக்கு மட்டும் கட்டினால் நல்லதுனு சொல்லி தேவர்புரம் கிராமத்துல நிறைய கட்டினேன். அதை பலர் வந்து பார்வையிட்டாங்க. அது ரொம்ப உற்சாகத்தைத் தந்தது.
பிறகு, காட்டுக்குளம் கிராமத்துல நூறு சதவீதம் எல்லா வீட்டிலும் கழிப்பறைகள் கட்டினேன். அதை மாவட்ட ஆட்சியர் நேர்ல வந்து பார்வையிட்டார். அப்ப அந்தக் கிராமத்து மக்கள் தங்கள் தேவைகளை சொன்னாங்க. அதை ஆட்சியர் செய்து கொடுத்தார்.

இதை பார்த்தவுடனே மற்ற கிராம மக்களும் ஆர்வமாகி தங்கள் கிராமத்துலயும் கழிப்பறை கட்டலாம்னு முன்வந்தாங்க. 2000ம் ஆண்டு வரை உறிஞ்சி குழி கழிப்பறைகள் நிறைய கட்டினேன்.

அப்புறம், 2000த்துல சூழல் மேம்பாட்டு சுகாதார கழிப்பறைக்கு மாறினேன். ஏன்னா, சாதாரண கழிப்பறை கட்டினப்ப பூமியினுள் போகும் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசடையச் செய்தது. அப்புறம், சில கிராமங்கள்ல குடிநீருக்கே பிரச்னை. பொதுவா, சாதாரண கழிப்பறைக்கு 5 முதல் 7 லிட்டர் வரை ஒருவருக்குத் தேவைப்படும்.

அதனால, மாற்றுக் கழிப்பறை அவசியமா இருந்தது.அதனால, அந்த ஆண்டு சென்னையில் நடந்த சானிடேஷன் மீட்டிங்கில் மாற்றுக் கழிப்பறை வேணும்னு மக்கள் கேட்குறாங்கனு சொன்னேன். அப்ப பெல்ஜியத்தைச் சேர்ந்த பால் கால்வெர்ட்னு ஒருத்தர் எகோசான் கழிப்பறை பற்றி சொன்னார்.

அதைத் திருவனந்தபுரத்துல செய்திருப்பதாகவும், கழிவுகள் உரமா பயன்படும்னும் குறிப்பிட்டார். உடனே, ஒரு கழிப்பறையை என் அலுவலகத்திலேயே கட்டி பரிசோதனை செய்தேன். பிறகு, காளியாபாளையம்னு ஒரு கிராமத்துல இந்தக் கழிப்பறையை மக்கள் ஏற்றுக் கொண்டாங்க. அந்த ஊர்ல பதினெட்டு கழிப்பறைகள் கட்டினோம்.

இந்தக் கழிப்பறை பூமிக்கு மேல கட்டப்படுது. இதுல ரெண்டு சேம்பர் கட்டுவோம். ஒண்ணு நிரம்பினதும் அடுத்த சேம்பர் பயன்படுத்தணும். இதுல மலம், சிறுநீர் எல்லாம் தனித்
தனியா பிரிஞ்சிடும். மலத்துல சாம்பலோ, மண்ணோ, மரத்தூளோ போட்டு மூடி வச்சிருவோம். கால்கழுவ மட்டும் தண்ணீர். அந்தத் தண்ணீரும் தனியா சேகரிச்சிடுவோம். தவிர, சிறுநீரையும் சேகரிச்சு அதை விவசாயத்திற்குப் பயன்படுத்துவோம்.

கோவை விவசாய பல்கலைக்கழகமும், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் இதற்கான ஆய்வை செய்து சிறுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியும்னு சொன்னாங்க.

இதையெல்லாம் பார்த்திட்டு ரொம்ப வித்தியாசமா இருக்குனு யுனிசெப் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சப்போர்ட் செய்தாங்க. பிறகு, 2005ல் முசிறியில் ஒரு சமுதாயக் கழிப்பறை கட்டினேன். அது இந்தியாவின் முதல் சூழல் மேம்பாட்டு சுகாதார சமுதாய கழிப்பறையா அமைஞ்சது.

அப்ப அதை அமுதா ஐஏஎஸ்ஸும், சாந்தா ஷீலா நாயர் ஐஏஎஸ்ஸும் வந்து பார்வையிட்டாங்க. அவங்க ‘மலமும், சிறுநீரும் மதிப்புடையதுனு சொல்றீங்க. இதுக்கு மக்கள்கிட்ட காசு வாங்காமல் நாம் காசு கொடுத்தால் என்ன’னு ஐடியா கொடுத்தாங்க. அதனால, முதல்முதலா உலகிலேயே கழிப்பறை பயன்படுத்துறதுக்கு பைசா கொடுத்தோம். ஒருமுறை பயன்படுத்தினால் பத்து பைசானு வழங்கினோம். இப்ப வரை இந்தக் கழிப்பறை ரொம்ப அருமையா செயல்படுது...’’ என்கிறவர் நிதானமாகத் தொடர்ந்தார்.  

‘‘பிறகு கேரளா, ஆந்திரா, பீகார், ராஜஸ்தான்னு பல மாநிலங்களுக்கு போய் இந்த எகோசான் கழிப்பறைகளைக் கட்டினோம். தமிழகத்துல மட்டும் லீச் பிட் கழிப்பறை ஒரு லட்சத்துக்கும் மேல் கட்டியிருக்கேன். இந்த எகோசான் டாய்லெட் 25 ஆயிரம் கட்டியிருப்போம். இதனால, 2005ல் தமிழக அரசு சிறந்த சுகாதார நிறுவனம்னு விருது கொடுத்தாங்க. 2006ல் மத்திய அரசு நிர்மல் கிராம புரஸ்கார் விருது வழங்கினாங்க.

இதுதவிர, 1990ல் குளம், ஏரிகளை தூர்வாரி அதன் கரைகளில் மரங்கள் நட்டேன். என்னுடைய இந்த முயற்சிக்கெல்லாம் இப்பவரை என் மனைவி ராஜேஸ்வரி பக்கபலமாக நிற்கிறாங்க. எனக்கு ஒரு பையனும், பொண்ணும் இருக்காங்க. பொண்ணுக்கு காது கேட்காது. வாய் பேசமுடியாது. அவங்களை அதற்கான பள்ளியில் சேர்த்து படிக்க வைச்சேன். அந்தப் பள்ளியிலும் நிறைய விஷயங்கள் செய்தேன். பையன் கனடாவில் இருக்கிறார்...’’ என்கிற சுப்புராமன், ‘‘என்னுடைய குறிக்கோள் மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தி தண்ணீரை சேமிக்க வைக்கணும் என்பதுதான். ஏன்னா, வருங்காலத்துல தண்ணீர் பெரிய பிரச்னையா உருவெடுக்கப் போவதாகச் சொல்றாங்க.

அதனால, நாம் தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தணும். தேவைக்கேற்ப நீர் எடுக்குறோமே ஒழிய மீண்டும் நிலத்திற்கு நீரை போகச் செய்றதில்ல. இதனாலேயே, தண்ணீர் பற்றாக்குறை அதிகரிச்சிடுச்சு. அதனால, மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீைர சேமிக்க செய்யவும், கழிப்பறை குறித்தும் மக்கள் மத்தியில் இன்னும் நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருக்கு. அதுக்காக என்னாலான பணிகளைத் தொடர்ந்து செய்றேன். ஏன்னா தண்ணீரும், சுகாதாரமும் சரியா இருந்தால் வாழ்க்கை ஆரோக்கியமானதா மாறும்...’’ என்கிறார் பத்மஸ்ரீ மாராச்சி
சுப்புராமன்.

பேராச்சி கண்ணன்