நீங்க நல்லவரா... கெட்டவரா..? இயக்குநர் மிஷ்கின் Open talk



2014ல் வெளியான ‘பிசாசு’ படத்தின் வெற்றியை இண்டஸ்ட்ரி அறியும். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு டப்பிங், கன்னட ரீமேக், இந்தி ரீமேக் என அந்த வருடத்தின் மாபெரும் ஹிட் படமாக அப்படம் அமைந்தது. ‘‘இப்ப ‘பிசாசு 2’. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இதோ டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப் போறோம்...’’ தனது டிரேட் மார்க் கறுப்பு கண்ணாடியை சரிசெய்தபடியே புன்னகைக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

மிஷ்கினும் புத்தகங்களும்... இதைப் பற்றி சொல்லுங்க..?

ஒரு கட்டத்துக்கு மேலதான் நான் சினிமாவில் சம்பாதிக்கிறதே புத்தகங்கள் வாங்கிப் படிக்கதான்னு எனக்கு புரிஞ்சது. தினமும் ஒரு ரெண்டு மணி நேரமாவது என்ன புத்தகம் வந்திருக்கு... எந்த புத்தகம் படிக்கணும்னு நேரம் ஒதுக்கி அதிகமான புத்தகங்களை படிக்கிறேன்.
புத்தகங்கள் காஸ்ட்லியான விஷயம்தான். என்னால் நினைச்ச புத்தகத்தை வாங்க முடியுதுன்னா அதற்கு சினிமாதான் காரணம். ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்ல படிக்காத புத்தகங்களை செலக்ட் செய்து எப்போதுமே போட்டு வச்சுப்பேன். வாழ்க்கைக்கு மிகப்பெரிய அர்த்தம் கொடுத்ததே புத்தகம்தான். புத்தகங்கள் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது.

‘பிசாசு 2’க்கு ஏன் இவ்வளவு நாள் எடுத்துக்கிட்டீங்க?

ஆக்ச்சுவலி ‘பிசாசு’ படத்தை மறந்துட்டேன். நடுவுல ஏகப்பட்ட படங்கள் கொடுத்திட்டு இருந்தேன். இந்த நிலைல ஒருநாள் தயாரிப்பாளர் ‘ஏன் ‘பிசாசு 2’ செய்யக்கூடாது’னு கேட்டார். அப்பதான் ஒய் நாட்னு தோணுச்சு.இந்த செகண்ட் பார்ட்ல ஏதாவது புதுசா செய்யணும்னு நினைச்சு எழுதியிருக்கேன். எல்லாக் கதையும் எழுதினபிறகு ஒரு மனத்திருப்தி கிடைக்காது. ஆனா, ‘பிசாசு 2’ எழுதி முடித்தபிறகு ஆத்மார்த்தமா உணர்ந்தேன். ரொம்ப ஆழமா வேலை செய்திருக்கேன்னு எனக்கே ஒரு நிம்மதி கிடைச்சது. இன்னொரு களத்தில் என்னை நானே உந்தித் தள்ளி இருக்கேன்.

எப்பவும் உங்க படங்கள்ல புது மேக்கிங் இருக்கும்... இந்தப் படத்துல எப்படி..?

அன்னமார்பிக் லென்ஸ் பயன்படுத்தி இருக்கேன். படம் முழுக்க இரண்டு கேமரா. ‘பிசாசு 1’ல சிஜிக்கு வேலையே கிடையாது. வெறுமனே அந்தக் கயிறுகளை அழிக்க மட்டுமே சின்ன  பகுதில பயன்படுத்தினேன். ஆனா, ‘பிசாசு 2’ல சிஜில ஒரு கேரக்டரே உருவாக்கியிருக்கேன். மிகப்பெரிய மியூசிக் ட்ரீட் இந்த படம் கொடுக்கும். ரெண்டு கேமராமேன்; அதுல லைட்டிங்குக்கு மட்டும் இன்னொரு கேமராமேன்.

ஆண்ட்ரியா..?

நான் சந்தித்த பெண்கள்ல ஆண்ட்ரியா ஒரு ராட்சஷி. மூணு ஆண்களுடைய வலிமையை ஆண்ட்ரியா என்கிற ஒரு பெண்கிட்ட பார்க்கலாம். ஒவ்வொருத்தருக்கும் டேக் அதிகம் வாங்க... வாங்க எனர்ஜி குறையும். ஆனா, ஆண்ட்ரியாவுக்கு எத்தனை டேக் எடுத்தாலும் எனர்ஜி கூடிக்கிட்டே போகும்!

இதுக்கு முன்னாடி ‘துப்பறிவாளன்’ல வில்லன்கள் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணாதான் நடிச்சிட்டுப் போனார். அப்ப பெரிய அளவில் ஆண்ட்ரியா கூட பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கல.

ஆனா, இந்தப் படத்துல மொத்தமாக 60 நாட்கள் பணிபுரிஞ்சார். ஆண்ட்ரியா யார்னு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சது. ரொம்ப பெருமையா சொல்வேன். இந்த கேரக்டரை ஆண்ட்ரியாவைத் தவிர்த்து வேறு யாரும் செய்யவே முடியாது. நிறைய படைப்பு சார்ந்த சண்டைகள் எல்லாம் போட்டுக்குவோம்.

மற்ற நடிகர், நடிகைகள்..?

சந்தோஷ் பிரதாப் நடிச்ச படங்களை பெரிதா பார்த்ததில்ல. ஒருமுறை பேசிட்டு இருக்கும்போது அசிஸ்டெண்ட் டைரக்டர்கள்தான் சந்தோஷ் பிரதாப் பெயரை சொன்னாங்க. நல்ல அழகான பையன். நல்ல நடிகர். பேச்சில் அவ்வளவு கவனம் இருக்கும். நாகரீகமா பேசினார். கிட்டத்தட்ட படத்தில் கதாநாயகன் போல் சந்தோஷ் வர்றார். அடுத்து பூர்ணா. அற்புதமான நடிகை. உண்மையை சொன்னா, சரியான களம் கிடைக்காம பூர்ணா நடிப்பு பெரிய அளவில் எடுபடாமல் இருக்கு. இன்னும் பத்து படங்கள் கூட பூர்ணா கூட செய்வேன். அவங்க ஒரு முக்கியமான கேரக்டர் செய்திருக்காங்க. இவங்க தவிர அஜ்மல் ரொம்ப நாளைக்கப்புறம் என்கூட வேலை செய்திருக்கிறார். ஒரு முக்கியமான கேமியோ ரோல்.

விஜய் சேதுபதி இந்த படத்துக்குள் எப்படி வந்தார்..?  

பத்து வருடங்களா ரெண்டு பேரும் பேசாமயே இருந்து திடீரென பேசத் துவங்கினோம். இந்தக் கதை சொன்னேன். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது விஜய்சேதுபதியே கூப்பிட்டார். ‘அண்ணே... எங்க இருக்கீங்க? உங்கள பார்க்கணும். நான் ஒரு நாலஞ்சு நாட்கள் உங்க கூட இருக்கணும்’னு சொன்னார்.
ஏற்கனவே இருந்த கேரக்டர்ல விஜய் சேதுபதி வரவும் மேலும் சில ஸ்பெஷல் விஷயங்களைச் சேர்த்து அவர் போர்ஷனை அதிகப்படுத்தினேன். ரொம்ப பெரிய நடிகர், சினிமாவை ரொம்பவே நேசிக்கக் கூடிய ஒரு நல்ல மனிதர்.

‘பிசாசு’ல பேயை நல்லவிதமாக காண்பிச்சீங்க... ‘பிசாசு 2’ல எப்படி?

இப்ப அதை சொன்னா கதையையே சொல்வது போல் ஆகிடும். ஆனா, ஒண்ணு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பிசாசும் இருக்கு தேவதையும் இருக்கு. அந்த இரண்டு குணத்தையும் இந்தப் படத்தில் பார்க்கலாம்.

மிஷ்கின் யார்... நல்லவரா கெட்டவரா..?

முப்பது வருடங்கள் பழகிய நண்பர்களுக்குக் கூட ஒரு கட்டத்துல ஏதோ ஒரு சம்பவத்தால் நாம கெட்டவங்களா மாறிடுவோம். யாருக்குமே எப்பவுமே நல்லவங்களா இருக்கவே முடியாது. அதேபோல் எல்லாருடைய பார்வையும் கோணமும் மாறிக்கிட்டே இருக்கும். அதையும் மீறி நம்ம கூட இருக்கிற சிலருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லவங்களா நம்ம நடந்துகிறோம்... அவ்வளவே.

‘பிசாசு 1’ - ‘பிசாசு 2’ என்ன வித்தியாசம்?

முழுமையாவே வித்தியாசமான படம். அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் ஒரே வித்தியாசம் பிசாசு மட்டும்தான். மற்றபடி கதை, கதைக்களம் லொகேஷன்... எல்லாமே வேற.  

ஃப்ரான்சைஸ் படங்கள் கொடுக்குறதுல என்ன சவால்கள் இருக்கு?

நான் சவாலாகவே பார்க்கல. தயாரிப்பாளர்களுக்கு சவால்கள் இருக்கும் அல்லது முந்தைய படத்தினுடைய வெற்றியை கேட்கறாங்க. படம் முடிந்தவுடனே எப்படி இருக்குனு வெளிய பேசறாங்க. எனக்கு பெரிய அளவில் சவால் இல்லை. சந்தோஷமாதான் இருக்கு.

இசை..?

இளையராஜாவை விட்டு பிரிந்தவுடன் அடுத்து யார்னு யோசிச்சேன். கார்த்திக் ராஜாதான் மனதில் பட்டார். இசை பற்றி நிறைய படிக்கிறேன். அதனாலேயே என் படத்துக்கு ஒரு நல்ல இசையைக் கொடுக்க முடியுது. இந்தப்படத்தில் அற்புதமான மியூசிக் ட்ரீட் உண்டு.

‘துப்பறிவாளன் 2’..?

விஷால் எடுக்கப் போகிறார்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். நல்லபடியா எடுக்கட்டும். முக்கியமா நல்லா இருக்கட்டும். அவரும் நல்லவர் நானும் நல்லவன்... இதனால் ஏற்பட்ட கோபம் சண்டையா உண்டாகி ஒருவருக்கு ஒருவர் பேச வைச்சது. இது போதும்னு தோணுது. இந்த சண்டையை அப்படியே முடிச்சுக்க நினைக்கிறேன். அவரும் திறமையானவர். நல்லா வரணும்.

பூஜா ஹெக்டே, அனு இமானுவேல்னு உங்களுடைய ஹீரோயின்ஸ் டாப் மார்க்கெட்டை பிடிச்சுடறாங்களே..?

எனக்கே எப்படின்னு தெரியல! ‘முகமூடி’ல ஒண்ணுமே தெரியாம பூஜா வந்தாங்க. அப்ப சின்னப் பொண்ணு வேற. ஆனா, பயங்கர கிரேஸான ஒரு நடிகை. அந்த உழைப்புதான் அவருக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட்டை கொடுத்திருக்குனு நம்புறேன். ‘முகமூடி’ பெரிசா போகலை... நானும் மிகப்பெரிய உழைப்பை அந்தப்படத்துக்கு கொடுக்கல. ஆனா, பூஜா திறமைசாலி. அனு இம்மானுவேல் கூட அப்படிதான். திறமைசாலி.

‘பிசாசு 2’ என்ன கொடுக்கப் போகுது?

பயம் கொடுக்கும். அதிர்ச்சியைக் கொடுக்கும். கூடவே குடும்பமாக சேர்ந்து பார்க்கக்கூடிய படமா இருக்கும். ஆனா, ரொம்பவே பயமுறுத்தும். அதை மட்டும் சொல்லிக்கறேன். பயப்படத் தயாரா இருங்க!

ஷாலினி நியூட்டன்