பருவ மழை அறிக்கை என்ன சொல்கிறது?



கடந்த மாதம் அக்டோபர் இறுதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென்னகப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்தது. அதைத் தொடர்ந்து புவி மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திலும் புதுவையிலும் அதிக மழை பொழிந்தது. சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் வெள்ளக் காடாய் மிதந்தன.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பெரு மழைக்குப் பின் இதுதான் அதிகப்படியான மழைப்பொழிவு என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் இப்படியான சூழலில் மத்திய அரசின் புவி விஞ்ஞான அமைச்சகத்தில் இருந்து இந்த ஆண்டுக்கான பருவ மழைகள் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தென்மேற்கு பருவக்காற்று தொடர்பாக இந்த அறிக்கை விரிவாகவே பேசுகிறது. இப்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடர்பான அறிக்கையும் விரைவில் வரக்கூடும்.

தென்மேற்கு பருவக்காற்றைப் பொறுத்தவரை கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலங்களில் எதிர்பார்த்ததை விடவும் சற்று அதிகமாகவே 96 முதல் 104 சதவீதம் வரை பெய்திருக்கிறது என்பது நல்ல விஷயம்.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் 87 சென்டிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பரவலாக இருந்துள்ளது. இது கடந்த 1961ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான நீண்ட கால அளவிலான சராசரியை விடவும் ஒரு சதவீதம் மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தென்மேற்கு பருவக்காற்றானது இந்தியாவின் தென்மேற்குப் பகுதிகளில் 96% என்பதாகவும் மத்திய இந்தியாவில் 104 சதவீதம் என்பதாகவும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 88% என்பதாகவும் தென்னகப் பகுதிகளில் 111 சதவீதம் என்பதாகவும் பொழிந்து தள்ளி உள்ளது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

வழக்கமாக அதிக மழைப் பொழிவு பெறும் பகுதிகளில் இந்த முறையும் 106 சதவீதத்திற்கு மேல் மழைபெய்து இருக்கிறது. இந்த பகுதிகளில்தான் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்தியா முழுவதும் உள்ள முப்பத்தி ஆறு வானிலை மைய சப் டிவிஷன்களிலும் 20 டிவிஷன்களிலும் சேர்ந்து மொத்தமாக 58 சதவீத பகுதிகளில் சராசரி அளவிலான மழை பொழிந்து உள்ளது. 10 சப் டிவிஷன்களில் 25 சதவீதம் கூடுதலான மழைப் பொழிவு நிகழ்ந்துள்ளது. ஆறு சப் டிவிஷன்களில் 17 சதவீதம் குறைவான மழைப் பொழிவு நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், லடாக், மேற்கு உத்தரப்பிரதேசம், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது.இந்திய அளவிலான மாதாந்திர மழைப்பொழிவுக் கணக்கீட்டை பார்க்கும்போது இந்த தென்மேற்கு பருவக்காற்று தனித்துவமான ஒரு வரலாற்று நிகழ்வாக உள்ளது. எல்லா மாதங்களும் ஒரே மாதிரியான சராசரி அளவாகப் பெய்யாமல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அளவில் இந்த ஆண்டு மழைப் பொழிவு இருந்திருக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இந்த காலகட்டங்களில் 110%, 93%, 76%, 135 சதவீதம் என்பதாக மழை பொழிந்து இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாத மத்தியில் உருவான தீவிரமான புயலான குலாப், பரவலான மழைப் பொழிவைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறது. இந்த குலாப் புயலால் தென்மேற்கு பருவக்காற்றின் சராசரி மழைப்பொழிவு விகிதம் மேம்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.இதுபோலவே, அரபிக் கடலில் மே மாத மத்தியில் உருவான டாக்டே புயலும், வங்காள விரிகுடாவில் மே மாத இறுதியில் உருவான யாஸ் புயலும் போதுமான மழைப்பொழிவைக் கொடுத்ததோடு, பருவக்காற்றையும் மிகச்சரியாக இயக்கிச் சென்றிருக்கிறது.

இதனால்தான் இந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி இந்தியா முழுவதும் பரவலாக தென் மேற்குப் பருவக் காற்று தொடங்கியது. இது, எதிர்பார்த்ததைவிட ஐந்து நாட்கள் தாமதம் என்றாலும் குறித்த காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு இந்த புயல்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன.தென்மேற்குப் பருவக்காற்று இப்படி சற்று தாமதமாக ஜூலையில் தொடங்கியதற்கும், தொடக்கத்தில் வலுவில்லாமல் இருந்ததற்கும் வங்காள விரிகுடாவில் நிலவிய சில அசாதாரணமான வானியல் சூழ்நிலைகளே காரணம் என்கிறது இந்த அறிக்கை.

இதனால்தான் பருவக்காற்று இமயமலைப் பகுதிகளிலேயே சற்று பின்தங்கி, வடகிழக்கு இந்தியாவிலும் பீகாரிலும், கிழக்கு உத்தரப் பிரதேசத்திலும் வெள்ளத்தை உருவாக்கியதோடு, மத்திய இந்தியாவில் குறைவான பருவமழைப் பொழிவையும் நிகழ்த்தியது.ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த சில இயற்கையான வானியல் குளறுபடிகள் இந்தியாவின் சில பகுதி களில் 76 சதவீதம் குறைவான மழைப் பொழிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் உருவான சில வானியல் மாற்றங்களை இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.மொத்தத்தில் இந்த தென் மேற்குப் பருவமழை இந்தியாவிற்கு நல்ல மழைப் பொழிவைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

இப்போது நிலவி வரும் வடகிழக்கு பருவ மழையும் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவைத் தந்துகொண்டிருக்கிறது என்றே அறிக்கைகள் காட்டுகின்றன.கடந்த அக்டோபர் மாதம் மட்டும் இந்திய அளவில் 100.7 சென்டிமீட்டர் மழை பொழிந்து உள்ளது. இது வட மேற்குப் பிராந்தியத்தில் 67 சென்டிமீட்டராகவும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் 148.6 செ.மீ என்பதாகவும் மத்திய இந்திய பிராந்தியத்தில் 59.6 சென்டிமீட்டர் என்பதாகவும் தென்னிந்திய பிராந்தியத்தில் 185 சென்டிமீட்டர் என்பதாகவும் பெய்திருக்கிறது.

அக்டோபர் முதல் கடந்த வாரம் வரையிலான ஒட்டுமொத்த இந்திய அளவில் 113.6 சென்டிமீட்டர் அளவு மழை பொழிந்திருக்கிறது. இதில் தென்னிந்தியாவில் 243.5 செ.மீ மழை பொழிந்திருக்கிறது. நவம்பர் மாத நிலவரம் கடந்த வாரம் வரை இந்திய அளவில் 12.9 சென்டிமீட்டர்; தென்னிந்திய அளவில் 58.5  சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. இது நிச்சயம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மாறிவரும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் இந்தியாவின் பருவ மழையில் பாரிய மாற்றங்கள் சமீபமாக உருவாகி இருக்கின்றன என்கிற நிதர்சனத்தையும்  மீறி இந்த ஆண்டுக்கான மழைப் பொழிவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஆனால், வனங்களையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடையே உள்ளது.
கடந்த வாரத்தில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகள் மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு இருப்பதை நாம் உணர வேண்டும்.

மாறிவரும் உலகப் பருவநிலைக்கு ஏற்ப நம்முடைய செயல்பாடுகளை வகுத்துக் கொண்டால்தான் பருவ மழையை நம்யிருக்கும் நமது விவசாயம் உயிர்ப்போடு இருக்கும். அதோடு 15 லட்சம் வருடங்களாக இந்த மண்ணில் உலவிக் கொண்டிருக்கும் பருவக் காற்றும் பருவமழையும் என்றென்றும் நம்மோடு பிணைந்து இருக்கும். நாமும் வளமாக இருப்போம்.  

இளங்கோ கிருஷ்ணன்