உலகின் முதல் ஃபிளையிங் டீக்கடை!



‘‘பாஸ் ரெண்டு டீ...’’ என கேட்டதுதான் தாமதம்... கையில் வாக்கி டாக்கி எடுத்து யாருக்கோ ரகசிய தகவல் சொல்வதுபோல் பேசுகிறார் அந்த டீக்கடைக்காரர்.
வேளச்சேரி 100 அடி ரோட்டில் இருக்கிறது அந்த டீ பாய் டீக்கடை. பார்ப்பதற்கு ஒரு மாடல் விமானத்தின் கெட்டப்பில். ஒரே ஒரு நபர் மட்டும் அங்கே நிற்பார்.

 டீக்கடையோ கொதிக்கும் பாய்லர், அனல் கக்கும் அடுப்போ என எதுவும் இல்லாமல் வெறுமனே ஒரு டேபிள் சகிதமாக நிற்கும் அவரிடம்  டீ எனக் கேட்டால் வாக்கி டாக்கி எடுத்து ஆர்டரை வரிசையாகச் சொல்கிறார். சிறிது நேரத்தில் ஒரு லிப்ட் மூலம் மேலிருந்து நாம் கொடுத்த ஆர்டர் கீழே இறங்கி வருகிறது!
ஆம்! உலகின் முதல் ஃபிளையிங் டீ!

 அட  நல்லா இருக்கே என கடையின் உரிமையாளர் ஜோசப் ராஜேஷைச் சந்தித்து முழுக் கதையும் விசாரித்தோம். ‘‘சொந்த ஊர் கரூர். அங்கேயேதான் பிறப்பு, படிப்பு எல்லாமே. என்னுடைய சகோதரர் போலீஸ். காலேஜ் முடித்த உடனேயே சகோதரர் போலவே நானும் போலீஸ் வேலைனு முடிவு செய்துதான் வாழ்க்கையை ஆரம்பிச்சேன். முழுமையாகவே ஒரு போலீஸ்காரனுக்கு என்னென்ன தேவையோ அத்தனை முயற்சிகளும் செய்தேன்.

ஆனாலும் அந்தக் கனவு நிறைவேறவே இல்ல. அடுத்து என்னன்னு தெரியாம மிகப் பெரிய வெறுமை சூழ்ந்து எதைப் பார்த்தாலும் விரக்தி அடைஞ்சேன். ஒரு கட்டத்துல இனி அரசுப்பணி என்கிற எண்ணமே இருக்கக் கூடாதுன்னு முடிவு செய்தேன். வாங்கின அடி என்னை இன்னும் ஸ்ட்ராங்கா அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஆரம்பிச்சது. பெரிய அளவில் நேர்மையா பணம் சம்பாதிக்கணும்னு முடிவு செய்தேன். வெளிநாட்டு வேலைக்கு டிரை பண்ணினேன். கிடைக்கலை.

ஒருவழியா ஒரு பேங்க் ஜாப் கிடைச்சது. அதுவும் காலைல ஆரம்பிச்சு சாயங்காலம் வரைக்கும் மார்க்கெட்டிங் வேலை. ஆனா, அந்த வேலைதான் எனக்கு டீ மேலே ஒரு ஆர்வத்தை உண்டாக்கிச்சு. வேலை நேரத்தில் பெரும்பாலும் டீக்கடையில்தான் பொழுது போகும். சொந்தமா என்ன பிசினஸ் செய்யலாம்னு முழிச்சவனுக்கு இப்ப பாதை தெரிஞ்சது. அதேசமயம் சிகரெட், குட்கா மாதிரி விஷயங்களைத் தவிர்க்கணும்னும் முடிவெடுத்தேன். குடும்பப் பெண்களும் தயங்காம என் கடையை நோக்கி வரணும்னு ஆசைப்பட்டேன்.

அப்படி ஆரம்பிச்சதுதான் டீ பாய். நீங்கள் எங்க இருந்தாலும் அங்க டீ வரும்னுதான் ஆரம்பிச்சோம். அப்புறம்தான் இதுல ஏதாவது புதிதா பண்ணலாம்னு ஃப்ளையிங் டீக்கடையா மாத்தினேன்...’’ என்னும் ஜோசப் ராஜேஷ், டீ எப்பவும் ஸ்பெஷல் என்கிறார்.  ‘‘குறிப்பா உழைக்கும் மக்களுக்கு அது அதிக ஸ்பெஷல். எத்தனையோ பேர் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் டீ குடிச்சிட்டு நாள் முழுக்க உழைக்கிறாங்க.  அவர்களுக்கான ஒரு மரியாதைய ரொம்ப சிறப்பாக் கொடுக்கணும்னு நினைச்சேன். அந்த எண்ணம்தான் இந்த உலகின் முதல் ஃபிளையிங் டீ.

இதுவரைக்கும் டீ பாய்க்கு 68 அவுட்லெட் தமிழ்நாடு முழுக்க இருக்கு. இந்த ஃபிளையிங் டீ கான்செப்ட் இப்பதான் வேளச்சேரியில் முதல்முறையா துவங்கியிருக்கோம்.

ஆர்டர் சொன்ன  மறுகணம் வாக்கி டாக்கி மூலம் மேலே இருக்கிற கிச்சனுக்கு தகவல் போயிடும். அங்க இருந்து லிஃப்ட் மூலம் உங்க டீ கீழே இறங்கும். டீ, ஸ்நேக்ஸ், டீயிலேயே வெரைட்டிகள் இப்படி எல்லாமே இருக்கு. எனக்கு தெரிஞ்சு டீக்கடை வாசலில் அதிகம் பெண்களோ குடும்பமோ குழந்தைகளோ பார்ப்பது கஷ்டம். ஆனா, எங்க கடைல அந்தக் காட்சியைப் பார்க்கலாம்! இந்த கான்செப்ட்டை இன்னும் பல ஊர்களுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்துட்டு இருக்கேன்...’’ நம்பிக்கையோடு சொல்கிறார் ஜோசப் ராஜேஷ் .

செய்தி: ஷாலினி நியூட்டன்

 படங்கள்:ஆ.வின்சென்ட் பால்