தமிழகத்தில் முதல் முறையாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுத் திடல்!



செல்போனைத் தொட்டாலே பிள்ளைகளை  பெற்றோர் கண்டித்த காலம் இருந்தது. இப்போதோ கொரோனா காரணத்தால் ஆன்லைன் வகுப்பிற்காக ஒரு தொகை செலவிட்டு, ஆண்ட்ராய்டு வாங்கித்தரும் கட்டாயத்திற்கு ஒவ்வொரு பெற்றோருமே ஆளாகி இருக்கின்றனர். இதன் உச்சமாக இப்போது படிப்பு கடந்தும் பொழுது போக்கிற்கென ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் மூழ்கி எழும் அவலத்திற்கு இன்றைய மாணவக்கூட்டம் மாறிப் போயிருக்கிறது.

இந்நிலையில்தான் ஒரு மகத்தான மாற்றத்தை ஓர் அரசு பெண்கள் பள்ளி நிகழ்த்தியிருக்கிறது.மதுரை உலகனேரியில் இருக்கிறது அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி. எல்கேஜி துவங்கி 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் 2,364 மாணவிகளைக் கொண்ட இந்த பள்ளியில் புதுமையாக பாரம்பரிய விளையாட்டுத் திடல் இருக்கிறது.‘‘இந்த ஆன்லைன் விளையாட்டிலிருந்து மாணவிகளை மீட்டெடுக்க நினைச்சோம். அதோடு நம்ம பாரம்பரிய விளையாட்டோட மகத்துவத்தையும் இளைய சமூகம் தெரிஞ்சுக்க இந்த பாரம்பரிய விளையாட்டுத் திடலை எங்க பள்ளில உருவாக்கி இருக்கோம்...’’ உற்சாகத்துடன் சொல்கிறார் பள்ளி தலைமைஆசிரியை சுசித்ரா.

தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரையில் உள்ள இந்த உலகனேரி பெண்கள் பள்ளியில்தான் இந்த ‘பாரம்பரிய விளையாட்டுத் திடல்’ இருக்கிறது. பள்ளி வளாகத்திற்குள் மரங்கள் சூழ்ந்து இயற்கை எழிலுடன் நிழல் பரவிய தரைப்பகுதியில் வட்ட வடிவில் இந்த ‘விளையாட்டுத் திடல்’ இருக்கிறது. இதில் அமர்ந்து மாணவிகள் விதவிதமான பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிக் களிக்கின்றனர். பல்லாங்குழி, பரமபதம், சொட்டாங்கல், தாயம், நேர்கோடு... என ஒவ்வொன்றிற்கும் ஒரு விளையாட்டுப் பகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் சதுரங்கம் விளையாடவும் ஓர்இடம் இருக்கிறது.

‘‘எங்க பள்ளில மூன்றே முக்கால் ஏக்கருக்கு இடவசதியோடு வகுப்பறைகளும், ஏராளமான மரங்களும் இருக்கு. மற்ற விளையாட்டுகளுக்கென தனி திடலும் இருக்கு. ஆனாலும் செல்போன் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி விடாம பள்ளியிலும், வீட்டிலும் நம்ம பாரம்பரியமான, உள்ளார்ந்த திறன்களை மேம்படுத்துற விளையாட்டை மாணவிகளுக்கு கற்பிக்கணும்னு ஆசை இருந்தது. அதோட வெளிப்பாடுதான் இந்த தனியான பாரம்பரிய விளையாட்டுத் திடல்.

1980களில் அதிகளவில் விளையாடப்பட்ட இந்த பாரம்பரிய விளையாட்டுகளை மாணவிகள் இப்ப ரொம்பவே விருப்பத்தோடு விளையாடுறாங்க. இந்த சிமெண்ட் தளத்துல பல்லாங்குழிக்கான குழிகளோடு, ஒவ்வொரு விளையாட்டுக்கான களமும் பெயிண்ட்டால வரைஞ்சிருக்கோம். கொரோனா தொற்றின் தீவிரத்தால கடந்த ஒன்றரை ஆண்டுகளா வீடுகளுக்குள்ளேயே முடங்கிப்போய் ஆன்லைன் வகுப்புக்காக தொடர்ச்சியா செல்போன்கள்ல சிக்கிப்போன மாணவிகளோட அயர்ச்சியைப் போக்க இந்த மரத்தடி நிழல் விளையாட்டு ரொம்பவே உதவிகரமா இருக்கு.

ஒவ்வொரு வகை பழைய விளையாட்டுக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கு. அத்தனையும் மூளைக்கு வேலை தரும் விளையாட்டு. பொறுமையை போதிக்கும். மனசுக்கு உற்சாகம் தரும். அச்சத்தைப் போக்கி, தைரியத்தை அள்ளித்தரும். உதாரணமா பாம்பும், ஏணியும் கொண்டு விளையாடுற ‘பரமபதம்’ இருக்கே... இது, சரிவுகளைக் கண்டு கலங்காம தொடர்ந்து முயற்சி செஞ்சா, மிகப்பெரிய உயரத்தைத் தொடலாம்னு உணர்த்தும். அத்தோடு, தன்னம்பிக்கையை மாணவிகளுக்கு வளர்த்தெடுக்கும்.

இதைப்போலத்தான் சொட்டாங்கல்லும், தாயமும், நேர்கோடும். இந்த விளையாட்டுகள் வாழ்க்கையில வெற்றியை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தருது.
இன்னும் சிறப்பா இளைய சமூகத்தினர் தங்கள் வீடுகளில் இருக்கும் முதியோரிடம் இந்த விளையாட்டோட நுட்பங்களை தெரிஞ்சுக்கறாங்க. இதுல மூத்தோர்கள் மீதான இளையோர் அன்பும் பெருகுது. வகுப்புகளுக்கான நேரம் தவிர, ஓய்வான நேரங்கள்ல எல்லாம் எப்பவுமே இந்த திடல்ல அதிகளவுல மாணவிகளைப் பார்க்க முடியுது...’’ என்கிறார் சுசித்ரா.

செய்தி: செ.அபுதாகிர்

படங்கள்: வெற்றி