நீரின்றி அமையாது உலகு!
8. உயிரின் உயிரே !
நீரின்றி அமையாது உடல் நலம். ஆம்; மனித உடலில் 65 சதவீதம் நீர் இருக்கிறது. இந்த நீர்தான் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான நுரையீரல், மூளை, சிறுநீரகம், குடல் உள்ளிட்ட சில உறுப்புகளை இயக்குகிறது. நம் உடலில் நீர்ச்சத்து குறைந்தால், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரும்.
ஒரு மனிதன் தினமும் சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்க தண்ணீர் உதவுகிறது. நீர் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படும். உடல் எடை, சத்து குறையும். சோர்வு, தாகம், வாய் உலர்தல், மயக்கம், தலைவலி, சிறுநீர் குறைவாக அடர்த்தியாக வெளியேறுதல், சிறுநீரகங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம் ஏற்படுதல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இது சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக இருக்க உதவும். நம் ரத்தம் 83% தண்ணீரால் ஆனது. எலும்புகளில் கூட 22 சதவீதம் நீர் உள்ளது. திசுக்களுக்கும் ஆக்சிஜனை, ஊட்டச்சத்துக்களையும் எடுத்துச் செல்கிறது. சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் ஈரப்பதத்தை நுரையீரல் எடுத்துக்கொள்கிறது.
சுவாசத்தின்போது ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுவது மட்டுமல்ல, காற்றுடன் நீர்த் திவலைகளும் வெளியேற்றப்படுகின்றன. இந்த வகையில் நாம் உண்ணும் உணவை சக்திமிக்கதாக மாற்றுவதில் உதவி செய்கிறது.நீர் முக்கிய உறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உணவை குடலிலிருந்து ஜீரணித்து உறிஞ்சவும் உதவிசெய்கிறது. நம் சதைகள் 75 சதவீதம் நீரால் ஆனது. மூட்டுகளுக்கு குஷன் போல பாதுகாப்பும் அளிக்கிறது.
இந்த நீர் மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் தேவை. தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள் என அத்தனை உயிர்களுக்கும் நீர் அவசியம். சராசரியாக 70 கிலோ எடை இருப்பவரின் உடலில் 41 லிட்டர் தண்ணீர் இருக்கும். அதில் 23 முதல் 27 லிட்டர் திசுக்களின் உள்ளேயும், 7 லிட்டர் திசுக்களின் வெளியேயும் அதைச் சுற்றியும் இருக்கிறது.உடல் எடையில் 5 சதவிகிதம் நீர்ச்சத்து குறைந்தால் நம் வேலைத்திறன் 30 சதவிகிதம் குறையும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள்கூட உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். நாம் தினமும் சாப்பிடும் உணவில் இருந்தே ஒரு நாளில் நம் உடலுக்குத் தேவையான 25 சதவித தண்ணீர் கிடைக்கிறது.ஆண்கள், தினமும் 3700 மில்லி லிட்டர் அதாவது கிட்டத்தட்ட மூன்று அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், பெண்கள் தினமும் குறைந்தபட்சம் 2,700 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று கூறுகின்றனர். இது தண்ணீர் மட்டுமல்லாமல் தண்ணீர் சார்ந்த உணவுப் பொருட்களாகவும் (தண்ணீராகவோ அல்லது ஜூஸ் போன்றவையாக) இருக்கலாம்.
60 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும், அதே போல100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் பருக வேண்டும். இது எந்தவித உடல் உபாதையும் இல்லாதவர்களுக்கு.ஒருவேளை கால் வீக்கம், இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகச் செயல் இழப்பு பிரச்னை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக் கூடாது. இப்படிப்பட்டவர்களின் உடலில் அதிகமான நீர் சேர்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கண்ணாடி போன்று பிரதிபலிக்கக் கூடியது நீர். அதற்கு மணமில்லை, சுவை இல்லை. எந்தவித கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, மற்றும் கலோரிகளும் இதில் இல்லை. இப்படி ஒன்றுமில்லாத ஒரு திரவம் மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை கூடவே வருகிறது. காலையில் கண்விழித்து எழுந்தது முதல் இரவு கண் அயர்ந்து தூங்கும் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.இப்போது சொல்லுங்கள், நீர் உயிரின் உயிர்தானே?
உடலைக் கட்டுப்படுத்தும் மூளையின் எடை எவ்வளவு என்பதைப் பார்போம். வளர்ச்சியடைந்த ஆண் மூளையின் எடை ஒரு கிலோ 400 கிராமும், பெண்ணிற்கு ஒரு கிலோ 200 கிராமும் உள்ளது. அதில் 74.5 சதவீதம் தண்ணீர் உள்ளது. நம் உடலில் 5 லிட்டர் ரத்தம் (வளர்ச்சியடைந்த மனிதர்களிடத்தில்) உள்ளது. இதில் 83 சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது. நாம் மூச்சை இழுத்துவிடும் நுரையீரலில் 70 சதவீதம் அளவிற்கு தண்ணீர் உள்ளது. தசைகளில் 75 சதவீதமும், தோலில் 64 சதவீதம் தண்ணீர் உள்ளது. கட்டியாக இருக்கும் எலும்பில் கூட 22 சதவீதம் அளவிற்கு நீர் உள்ளது. நமது மரபணுவில் தண்ணீர் நீக்கமற நிறைந்துள்ளது. அந்தத் தண்ணீர் இல்லை எனில் மரபணு அழிந்துவிடும்.
நம் உடலில் நீரில் ஒரு சதவீதம் குறைந்தவுடன் நமக்கு தாகம் ஏற்படுகிறது. உடல் எடையில் 5 சதவிகிதம் நீர்ச்சத்து குறைந்தால் நம் வேலைத்திறன் 30 சதவிகிதம் குறையும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடலில் இருந்து தண்ணீர் 12 சதவீதத்திற்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டால் மரணம் நம்மைத் தழுவும். நீரின்றி எந்த உயிரினமும் வாழ முடியாது. நீர் எவ்வளவு முக்கியமானது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
நம் திசுக்களில் உள்ள நீர்மத்திலும் இரத்தநாளங்களிலும், உப்புகள், புரதங்கள், சர்க்கரைகள் என கரையும் பொருட்கள் உள்ளன. இவை தண்ணீரில் கரைகின்றன. இதனால் உயிரினங்களின் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஹார்மோன்கள் சரியாக வேலை செய்வதற்கு உதவுகின்றன. உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதற்கும் தண்ணீர் உதவுகிறது. நீர் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்கிறது. நமது உட்புற உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் ஒரு இன்சுலேட்டராக தண்ணீர் செயல் படுகிறது. உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்த, வியர்வை மற்றும் சுவாசத்தை சீராக வைப்பதற்கு நீர் உதவுகிறது.
நாம் உறங்கும் போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். உறக்கத்திற்கு முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருக்கும். காலையில் போதுமான நீரைக் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் எளிதில் வெளியேறி உங்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.நீரை அடிக்கடி குடிக்க விரும்பாதவர்கள், தண்ணீர்ச்சத்து அதிகமுள்ள ஒருசில காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.
வெள்ளரிக்காயில் 90 சதவீதம் அளவிற்கு தண்ணீர் உள்ளது. கீரைகளில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. செலரியில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. சீமை சுரைக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. முட்டைக்கோஸில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. தர்ப்பூசணியில் 91 சதவீதம் தண்ணீர் உள்ளது. பரங்கிக்காயில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. முலாம்பழத்தில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. இப்படி காய் - கனிகளை சாப்பிடுவதன் மூலம் தண்ணீரை உடலில் சேர்த்துக் கொள்ள முடியும்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களிலிருந்து நீலத் திமிங்கலம் வரை தண்ணீர் அவசியமானது. இந்த பூமிப்பந்தில் மட்டுமே கிடைக்கும் விலைமதிப்பற்ற தண்ணீரைச் சேமித்து, பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
(தொடரும்)
- பா.ஸ்ரீகுமார்
|