போலீஸ் மியூசியம் அன்புடன் வரவேற்கிறது!
கடந்த வாரம் சென்னையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே திருச்சியிலும், கோவையிலும் காவல் அருங்காட்சியகங்கள் சிறப்பாக இயங்கிவரும் நிலையில், சென்னையில் திறந்திருப்பது பொதுமக்களுக்குக் கூடுதல் சுற்றுலா இடமாக மாறியிருக்கிறது. எழும்பூர் பாந்தியன் சாலையிலுள்ள பழைய சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகமே இப்போது அருங்காட்சியகமாக உருப்பெற்றுள்ளது.
1842ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை அப்போது அருணகிரி முதலியார் என்பவரிடமிருந்து 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினர்.1856ம் ஆண்டு இந்தக் கட்டடத்திலிருந்து மெட்ராஸ் மாகாண காவல் ஆணையாளர் அலுவலகம் செயல்படத் தொடங்கியது. அப்போது மெட்ராஸ் நகர முதல் காவல் ஆணையாளராக லெப்டினன்ட் கர்னல் ஜெ.சி.போல்டர்சன் இருந்தார். 2013ல் வேப்பேரியில் புதிய காவல் ஆணையாளர் அலுவலகம் கட்டப்பட்டதும், சுமார் 180 ஆண்டுகள் பாரம்பரியம் நிறைந்த இந்தக் கட்டடம் அப்படியே கிடந்தது.
‘‘இங்க நிறைய பிரிவுகள் வரவர கட்டடம் போதுமானதா இல்ல. அதனால, வேப்பேரியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டதும் அங்கே போனாங்க. கடைசியா, இந்த அலுவலகத்தில் ஜார்ஜ் சார் கமிஷனரா இருந்தார். அதன்பிறகு, இந்தக் கட்டடம் பயன்படுத்தப்படல. இதை அப்படியே விட்டுடக்கூடாதுனு ஏடிஜிபி அமல்ராஜ் சார் அப்போதிருந்த டிஜிபி திரிபாதி சார்கிட்ட சொன்னார். ஏற்கனவே, அமல்ராஜ் சார் திருச்சி மற்றும் கோவையில் காவல் அருங்காட்சியகங்களை ஆர்வத்துடன் உருவாக்கியிருந்தார். அதனால, இதை அருங்காட்சியகமா மாத்தலாம்னு டிஜிபி சார்கிட்ட ஒப்புதல் கேட்டார். டிஜிபி சாரும் ஒப்புதல் வழங்க கடந்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கினது.
பிறகு, இப்போதிருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு சாரும் அதை தொடர்ந்து செய்ய ஒப்புதல் அளித்தார். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் புதுப்பிக்கிற வேலைகளை செய்தாங்க. சுமார் ஆறு கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் இந்த அருங்காட்சியகம் உருவானது. இந்த இடம் 24 ஆயிரம் சதுரஅடி கொண்டது...’’ என ஓர் அறிமுகம் தந்தார் அருங்காட்சியகப் பொறுப்பு காவல் ஆய்வாளரும், இதற்காக பல்வேறு பணிகளை உடனிருந்து செய்தவருமான ரதிதேவி.
போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருக்கும் நீலநிற ப்ளைமவுத் காரைப் பார்த்தபடியே அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்தோம். அப்போதைய ஆணையாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் பணிக்காக இந்தக் காரை பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அதை நினைவுபடுத்தும் விதமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன்பின்னால் பழைய போலீஸ் வேன் ஒன்று கம்பீரமாக நிற்கிறது. தொடர்ந்து பிரிட்டிஷ் கால போலீஸ் சைக்கிள்கள் நம்மை வரவேற்கின்றன. இதில், போலீஸ் சைக்கிள் என்கிற சீமை வண்டி ரொம்பவே ஆச்சரியப்படுத்துகிறது. இதனையடுத்து, போலீஸ் வாகனங்களான புல்லட்களும், கடற்கரையிலும், கடலினுள்ளும் பயன்படுத்தும் வாகனங்களும், 2009ல் தமிழக முதல்வருக்காக தமிழ்நாடு காவல்துறை முதல்முதலாக வாங்கிய குண்டு துளைக்காத டாடா சஃபாரி காரும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
முதல் அறைக்குள் சென்றோம். காவல்துறையின் பரிணாம வளர்ச்சிக் கூடம். இதில் காவல்துறையின் வரலாறு, வளர்ச்சி தவிர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் புலனாய்வு பற்றிய ஒரு தொகுப்பும், வீரப்பன் வழக்கு பற்றிய தொகுப்பும், இந்தி எதிர்ப்பு போராட்டப் படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அடுத்த அறைக்குள் செல்கையில் ஒரு குட்டி சிறை வரவேற்கிறது. 1914ல் கட்டப்பட்டு பாழடைந்துபோன இந்தச் சிறையை கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இருந்து மீட்டெடுத்து இங்கே காட்சிப்படுத்தியுள்ளனர்.
பார்வையாளர்களுக்கு சிறை அனுபவத்தை கொடுப்பதற்காக இதற்குள் சென்று புகைப்படம் எடுக்க அனுமதிக்கின்றனர். அருங்காட்சியகத்தைப் பார்வையிட வந்த பலரும் இதனுள் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இதனருகே 1837ல் உருவாக்கப்பட்ட சென்ட்ரல் சிறைச்சாலையின் வரலாறு மற்றும் புகைப்படத் தொகுப்பு வியப் பளிக்கிறது. இதிலுள்ள பெரும்பாலான புகைப்படங்கள், இந்தச் சிறை இடிக்கப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பு தேசிகன் கிருஷ்ணன் என்பவரால் எடுக்கப்பட்டதாக அங்குள்ள குறிப்பு சொல்கிறது.
அங்கிருந்து காவல்துறை வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க வைக்கும் பிரிவிற்குள் நுழைந்தோம். வெடிகுண்டு கண்டுபிடித்தல் பிரிவில் ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பல்வேறு மூலப்பொருட்களாலான வெடிமருந்து மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. தவிர, வெடிகுண்டு தேடுதல் கருவிகள், கண்ணிவெடி மாதிரிகள், பிரஷர் குக்கர் மற்றும் பொம்மை வெடிகுண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள், இவற்றைக் கண்டறியும் கருவிகள், காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்புக் கவசங்கள், எப்போது இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது என்கிற வரலாறு உள்ளிட்ட சகலமும் இங்கு காணமுடிகிறது.
இதில், கடித வெடிகுண்டு கண்டுபிடிப்பான் என்கிற கருவி ஆச்சரியப்படுத்துகிறது. இந்தக் கருவியால் கடிதத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள உலோகங்களையும், மிகச்சிறிய குண்டுகளின் நுண்ணிய கூறுகளையும் கண்டறிய முடியும் என்கிறது அதன் கீழுள்ள குறிப்பு. அங்கிருந்து நடந்தால் கள்ள நோட்டுத் தடுப்புப் பிரிவு வருகிறது. கோயமுத்தூர் கள்ளநோட்டு கிருஷ்ணன் அந்தக் காலத்தில் பரபரப்பான வார்த்தை என்கிற குறிப்பும், அந்த வழக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட அச்செழுத்துக்கள், பிளாக்குகள், மிஷின்கள் ஆகியவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளனர். நல்ல நோட்டிற்கும், கள்ள நோட்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் எடுத்துக்காட்டியிருந்தனர். பொதுமக்கள் இதை ஆர்வமுடன் ரசிப்பதைப் பார்த்தபடியே சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவிற்குள் வந்தோம்.
இந்தப் பிரிவால் மீட்டெடுக்கப்பட்ட கற்சிலைகள், ஐம்பொன் சிலைகள் ஆகியவற்றை காட்சிக்கு வைத்திருந்தனர். ‘‘இங்குள்ள சிலைகள் எல்லாம் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டவை. முகப்பு வாயில்ல இருக்கிற விளக்கும், மாடியில் இருக்கிற விளக்கும் கூட மீட்கப்பட்ட விளக்குகள்தான். ரொம்ப பழமையானது. அப்புறம், அங்க ஒரு பழமையான புளியமரம் வச்சிருக்கோம். அது திருவக்கரையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது...’’ என்கிறார் காவல் ஆய்வாளர் ரதிதேவி.
தொடர்ந்து மெட்ராஸ் காவல்துறை வாத்திய இசைக்குழுவின் வாத்தியங்களை பார்வையிட்டோம். அந்தக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட வாத்தியக்குழு இன்று காவல்துறையில் இன்றியமையாத பிரிவாகிவிட்டது. இதன்பிறகு, தமிழ்நாடு காவல்துறையின் தொலைத் தொடர்பு பிரிவின் கருவிகள், வாக்கி டாக்கிகள் என சகலமும் பார்வைக்கு வைத்து, காவல்துறையில் டெலி கம்யூனிகேஷன் எவ்வளவு முக்கியமானது என்பதை பறைசாற்றியிருந்தனர். இதில் 1955ம் ஆண்டு தொடங்கப்பட்ட காவல்துறையின் கன்ட்ரோல் ரூமை அப்போதைய பிரதமர் நேரு பார்வையிட்ட புகைப்படம் அரிதானது.
அங்கிருந்து காவல் ஆணையாளர் அறைக்குள் சென்றோம். அமைதி தவழும் அந்த அறைக்குள் இரண்டு பெண்கள் ஆணையாளரின் சேர் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அறையைச் சுற்றிலும் முன்னாள் காவல் ஆணையாளர்களின் புகைப்படங்கள் மிளிர்கின்றன.ஆணையாளரின் மேஜையில் பிரிட்டிஷ் காலத்திய 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலிவர் 9 டைப் ரைட்டர் அழகூட்டுகிறது. அதனருகே உள்ள இன்க்வெல், அதாவது லைட், ஆஷ் ட்ரே, பெல், இன்க், நோட்குறிப்பு வைக்கிற இடம் என சகலமும் அடங்கிய பாக்ஸ் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. பழைய ஃபேன், கோட், தொப்பி ஸ்டாண்ட் உள்ளிட்டவை அப்போதைய காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
இதில், முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் ‘Best probationer’ என பிரதமரிடம் இருந்து வாங்கிய ரிவால்வரை காட்சிப்படுத்தியிருந்தனர். இதை வால்டர் தேவாரமே அருங்காட்சியகத்திற்கு அளித்துள்ளார். அங்கிருந்து வெளியே வருகிற இடத்தில் கியாஸ்க்கில் காவல்துறையின் தகவல்களைப் பார்க்க முடிகிறது. ‘‘மூணு இடத்துல இந்த கியாஸ்க் வச்சிருக்கோம். அதாவது மூணு டிவிகள்ல டிஸ்பிளே. இப்ப பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த அருங்காட்சியகத்துக்கு வரும்போது அவங்களுக்கு புரிகிற மாதிரி கியாஸ்க் இருக்கும். இதுல குட் டச், பேட் டச்னா என்னனு சின்னப் பசங்க புரிகிற மாதிரி ஸ்லைடு இருக்கு. அடுத்து பள்ளி, கல்லூரியில் படிக்கிறவங்க என்னென்ன தேர்வுகள் எழுதினா காவல் பணிக்கு வரமுடியும் என்பதற்கு ஒரு ஸ்லைடு கொடுத்திருக்கோம்.
அப்புறம், ஐபிஎஸ் அதிகாரிகள் எழுதின நூல்கள் என்னனு சொல்லியிருக்கோம். சைலேந்திரபாபு சார் 11 நூல் எழுதியிருக்கார். அதுமாதிரி மற்ற அதிகாரிகள் எழுதின நூல்கள் கொடுத்திருக்கோம். இத்துடன், தமிழ்நாடு போலீஸ் அகடமினா என்ன... யார் யாருக்கெல்லாம் பயிற்சி கொடுக்குறாங்க, அதுசம்பந்தமான ஸ்லைடும், டிஜிபி முதல் காவலர் வரை உள்ள போலீஸின் படிநிலைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கோம். அடுத்து, காவல்துறையில் சாதித்தவர்கள் பெயரை போட்டிருக்கோம். உதாரணத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்ற நாகநாதன் பெயர் இருக்கு. இந்தமாதிரி தேசிய அளவில் பதக்கங்கள் பெற்றவர்கள் பெயரெல்லாம் இதிலிருக்கு.
அப்புறம், எல்லோரும் காவல்துறைனா சட்டம் ஒழுங்குனு மட்டுமே தெரிஞ்சிருப்பாங்க. ஆனா, சிபிசிஐடி, வீடியோ பைரசி, தமிழ்நாடு கமாண்டோ ஸ்கூல், ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ், கோஸ்ட்டல் செக்யூரிட்டி, குதிரைப்படை, மோப்பநாய் பிரிவு, தடயவியல் துறை பிரிவுனு கிட்டத்தட்ட 50 யூனிட்கள் வரை இருக்கு என்பதையும், அதைப் பத்தின சுருக்கமான தகவல்களையும் தந்திருக்கோம். பள்ளி, கல்லூரியில் படிக்கிறவங்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும். இதுதவிர பெண்கள் உதவி மையம், எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்கும் முறை, எஸ்ஓஎஸ், நிர்பயா கவுன்சிலிங் உள்ளிட்ட தகவல்களும் போட்டிருக்கோம்...’’ என்கிறார் காவல் ஆய்வாளர் ரதிதேவி.
இங்கிருந்து மாடிக்கு சென்றோம். இங்கே பழைய வாள்களாலான சேர் ஒன்று வரவேற்கிறது. இதில், பார்வையாளர்கள் பலரும் அமர்ந்து புகைப்படம் எடுத்தபடி இருந்தனர். மாடியை பழமையான வாள்களும், விதவிதமான துப்பாக்கிகளும், தோட்டாக்களும் அலங்கரித்திருந்தன. மிஷின் கன், ஆக்ஷன் கன் எனப் பல்வேறு கன்கள் வியப்பூட்டுகின்றன. ஸ்டிக் துப்பாக்கி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனுடன் இலங்கைத் தமிழ்ப் போராளிகளிடமிருந்து 1992ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 87 மிமீ மோட்டார் என்கிற சிறு பீரங்கி வகை ஆயுதத்தைப் பார்க்க முடிகிறது.
இதன்பிறகு, போக்குவரத்துக் காவல்துறை பற்றின செய்திகள், காவல்துறை பயன்படுத்தும் புகைப்படக் கருவிகள், கைரேகைப் பிரிவு பற்றின தகவல்கள், தமிழ்நாடு இயற்கைப் பேரிடர் மீட்புப் படையின் சாதனைகள், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியிருந்தனர். கடைசியாக, காவல்துறையினர் வாங்கிய பதக்கங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன. தமிழ்நாடு காவல் துறையைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் ஒரு பொக்கிஷம்.
அருங்காட்சியக குறிப்புகள்
* தினமும் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம். * செவ்வாய்க்கிழமை விடுமுறை. * பெரியவர்களுக்கு பத்து ரூபாய், சிறியவர்களுக்கு 5 ரூபாய் எனக் கட்டணம் வைத்திருக்கிறார்கள்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|