குக்கர் திருமணம்!



இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளைஞர் கொய்ரூல் ஆனம். பத்து நாட்களுக்கு முன்பு வரை பக்கத்து வீட்டுக்காரருக்குக் கூட கொய்ரூலைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால், இன்று உலகம் அறியும் ஒரு நபராக டிரெண்டாகி விட்டார் அவர். ஆம்; கடந்த வாரத்தில் தனக்கு சோறு சமைத்துத் தந்த குக்கரைத் திருமணம் செய்துகொண்டார். மணமேடையில் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்ட குக்கரும், விலையுயர்ந்த ஆடையுடன் மணமகன் தோற்றத்திலிருந்த கொய்ரூலும் இருக்கும் புகைப்படம்தான் சமீபத்திய வைரல்.

‘‘வெண்மையானது, அன்பானது, எனக்கு சோறு சமைத்துப் போடுகிறது...’’ என்று குக்கரைத் திருமணம் செய்வதற்கான காரணங்களை அடுக்கியிருந்தார் கொய்ரூல். இந்த விசித்திரத் திருமணத்துக்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாழ்த்து பின்னூட்டம் இட்டிருந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, திருமணம் முடிந்த நான்கு நாளிலேயே குக்கரை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார் கொய்ரூல். திருமணத்தைவிட விவாகரத்து செய்தி செம வைரலாகிவிட்டது. கொய்ரூல் அடுத்து எதை திருமணம் செய்யப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.

த.சக்திவேல்