கொடி கட்டிப் பறக்கும் உலக போதைப் பொருள் வர்த்தகம்!
கிழக்கில் தங்க முக்கோணம்... மேற்கில் தங்க பிறை... நடுவில் இந்தியா...
மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறது போதைப் பொருள். காரணம் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான். தில்லியைச் சேர்ந்த நிறுவனமொன்று ஃபேஷன் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து க்ரே ஆர்க் என்ற பெயரில்பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை சொகுசு கப்பல் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஆர்யன் கான் உள்ளிட்ட பிரபலங்களின் பிள்ளைகளும் அடக்கம்.
இந்த சொகுசு கப்பலில், நடுக்கடலில் போதை பார்ட்டி நடந்ததாகவும் இதை அறிந்த கடலோர காவல்படை அந்த சொகுசு கப்பலைச் சுற்றி வளைத்து போதைப் பொருட்களைப் பயன்படுத்தியவர்களைப் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.இப்படி பிடிபட்டவர்களில் ஆர்யன் கானும் ஒருவர் என்பதால் இச்செய்தி பிரேக்கிங் நியூசாகி இருக்கிறது.இதனைத் தொடர்ந்து இந்தச் செய்தி மூலம் குஜராத்தில் கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ போதைப் பொருள் விவகாரத்தை பாஜக திசை திருப்பப் பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டினை எதிர்க் கட்சிகள் முன்வைக்கின்றன.
அது என்ன 3,000 கிலோ போதைப் பொருள்..?
கடந்த செப்டம்பர் 15ம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கிட்டத்தட்ட 3,000 கிலோ ஹெராயின் ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டது. ஆப்கானிஸ்தான் வழியாக இந்த போதைப் பொருள் இரு கன்டெய்னர்களில் வந்திருக்கிறது. இதுவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் மிக அதிக அளவிலான வேட்டை இதுதான்.இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இந்த முந்த்ரா துறைமுகம் அதானியின் கட்டுப்பாட்டில் - மேற்பார்வையில் - இருக்கிறது என்பதுதான்.
இது தொடர்பான வாதப்- பிரதிவாதங்கள் நடந்து வரும் நிலையில் முக்கியமான உண்மை வெளிப்பட்டிருக்கிறது.அதுதான் போதைப் பொருள் கடத்தலின் கேந்திரமாக, முக்கியமான ஸ்பாட் ஆக இந்தியா மாறியிருக்கிறது என்ற நிஜம்.கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு - இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் போதைக் கடத்தலில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்கள் என்ற செய்தி கசிந்து வருகிறது.
தெலுங்கு திரையுலகின் மாஸ் மகாராஜாவான ரவிதேஜாவின் தம்பி இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை போதை வழக்கில் கைதாகி இருக்கிறார் என்பதும், இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை சமயத்தில் போதைப் பொருட்கள் குறித்த பேச்சுகள் மீடியாவில் அடிபட்டதும் இதற்கான சில சோறு பதங்கள். இப்போது ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் விசாரணை வளையத்தில் சிக்கியிருப்பதால் இந்த விஷயம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்த விசாரணையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை விட இந்தியா எப்படி உலகின் போதைப் பொருள் கடத்தலின் முக்கியமான ஸ்பாட் ஆக மாறியது... என்ற வினா முக்கியமானது. இது தொடர்பாக குஜராத் ஆபரேஷனில் பங்கெடுத்த மத்திய உளவுத் துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டோம். தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அவர் சில விவரங்களைப் பகிர்ந்தார்.
போதை என்றாலே, பெரும்பாலானோர் மதுவை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி உலகம் முழுவதும் மற்ற போதைப் பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது. எதிர்கால சந்ததியையே சீரழிக்கும் சக்தி வாய்ந்தவை இப்போதைய மருந்துகள். இதன் வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், மார்பின் மற்றும் சில மருந்துகள் இளைஞர்களிடம் வேகமாகப் பரவும் பழக்கங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. உடலை மட்டுமின்றி, மனதையும் சிதைத்து, குடும்ப வாழ்க்கையையும் அழித்து, முடிவில் மரணத்துக்கே அழைத்துச் செல்பவை இப்போதை பொருட்கள்.
மூலப்பொருட்களை பயிரிடுதலில் துவங்கி, வளர்ப்பு, விளைச்சல், அறுவடை, ஏற்றுமதி என பல கட்டங்களாக இதன் வர்த்தகம் நடக்கிறது. மருந்துப் பொருட்கள் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இவை விற்கப்படுகின்றன.ஆண்டுக்கு 40 டிரில்லியன் (40 லட்சம் கோடி ரூபாய்) டாலர் அளவுக்கு, போதைப் பொருள் விற்பனை உலகம் முழுவதும் நடக்கிறது என ஐநா சபையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆரம்பம் என்ன?
போதை உண்டாக்கும் மருந்துப் பொருட்கள் மீது 19ம் நூற்றாண்டின் இறுதியில்தான், தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. சில நாடுகளில் போதைப் பொருள் கடத்துவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கசையடியும், மரண தண்டனையும் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் போதைப் பொருளுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படுவதில்லை.
யு.என்.ஓ.டி.சி. (மருந்துகள் மற்றும் குற்றம் தொடர்பான ஐநா சபை அலுவலகம்), போதைப் பொருள் வர்த்தகத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது. உலக அளவில் ஆண்டுதோறும் 500 டன் ஹெராயின் விற்பனை செய்யப்படுகிறது. இதில், மியான்மர், லாவோஸ் நாடுகளில் 50 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆப்கனில் 400 டன் ஹெராயின் மற்றும் மார்பின் தயாரிக்கப்படுகிறது.
போதை பாதை
ஆப்கனில் இருந்து ரஷ்யா, ஈரான், துருக்கி, கிரீஸ், வடகிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தையை போதைப் பொருள் அடைகிறது. இச்சந்தையின் ஆண்டு வர்த்தக மதிப்பு 2000 கோடி டாலர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆப்கனின் வடக்குப் பகுதியில், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் வழியாக கசகஸ்தான் மற்றும் ரஷ்யாவை அடைகிறது. இச்சந்தையின் ஆண்டு வர்த்தக மதிப்பு 1300 கோடி டாலர்.
கொகைன்
இந்த போதைப்பொருள் கொலம்பியா, வெனிசுலா மற்றும் பொலிவியாவில் தயாரிக்கப்பட்டு, மேற்கு ஆப்ரிக்கா வழியாக மற்ற நாடுகளுக்கு சரக்கு விமானங்கள் மூலம் கடத்தப்படுகிறது. 2004 வரை ஹெராயின் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த தென்கிழக்கு ஆசியாவை, 2008ல் ஆப்கன் பின்னுக்குத் தள்ளியது. அபின் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருட்களும் இங்கிருந்தே அதிகமாக ஏற்றுமதியாகின்றன.
போதையில் இந்தியா
இந்தியாவில், கஞ்சா, அபின், கஞ்சா செடியின் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் ‘சரஸ்’ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.‘தங்க முக்கோணத்தை’ (பர்மா, தாய்லாந்து, லாவோஸ் நாடுகளை இணைத்தால் கிடைப்பது) கிழக்கிலும், ‘தங்க பிறையை’ (ஈரான், ஆப்கன், பாகிஸ்தான் பகுதிகளை இணைத்தால் கிடைப்பது) மேற்கிலும் எல்லையாகக் கொண்டுள்ளதால், போதைப் பொருள் வர்த்தகம் இந்தியா வழியாக அதிகம் நடக்கிறது.நேபாளத்தின் வடக்குப் பகுதியிலிருந்து மரிஜுவானா, ஹசிஷ் என்ற போதை வஸ்துகள் உலக அளவில் கடத்தப்படுகின்றன. ‘தங்க முக்கோணம்’ மற்றும் ‘தங்க பிறை’யை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து கஞ்சா, மார்பின், பிரவுன் சுகர் (ஹெராயின்) போன்றவை கடத்தப்படுகின்றன.
கசகசா செடி
‘பாபாவெர் சோம்னிபெரம்’ (கசகசா) செடியில் இருந்து அபின் பெறப்படுகிறது. கசகசா காயின் பக்கவாட்டில் கீறிவிட்டால், பால் சுரக்கும். அது கெட்டியானதும் தனியாகப் பிரிக்கப்படும். இதனுடன் சில ரசாயனங்களைச் சேர்த்து அபின், ஹெராயின், மார்பின் தயாரிக்கின்றனர்.இந்தியாவில் முன்பு 60 ஆயிரம் ஹெக்டேர்களில் பயிரிடப்பட்ட கசகசா, போதைப் பொருள் அச்சத்தால், பெருமளவு குறைக்கப்பட்டது. மருத்துவ தேவைக்காக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள காஷிபூர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமக் ஆகிய இடங்களில் அபின் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களில் மரிஜுவானா, ஹசிஷ் தயாரிக்கப்பட்டு ஹூப்ளி வழியாக மும்பைக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு, கடல் வழியாக கடத்தப்படுகிறது.
உற்பத்தி செய்யும் நாடுகள்
* ஹெராயின்: உலகில் 90 சதவீதம் ஹெராயினை, ஆப்கானிஸ்தான் உற்பத்தி செய்கிறது. இங்கிருந்து கசகஸ்தான், துருக்கிக்கு கடத்தப்பட்டு, சுத்தம் செய்யப்படுகிறது. அங்கிருந்து கிரீஸ் நாட்டின் மெர்ஸிலிஸ் துறைமுகத்திற்கு கொண்டு சென்று ஐரோப்பாவுக்கு அனுப்பப்படுகிறது. * எக்ஸ்டஸி போன்ற செயற்கை போதைப் பொருட்கள், பெரும்பாலும் நெதர்லாந்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. * கொகைனை கொலம்பியா அதிகம் உற்பத்தி செய்கிறது. அங்கிருந்து கரீபியன் கடல் பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து சரக்குக்கப்பலில் ஹாலந்து, ஜெர்மனிக்கு கடத்தப்படுகிறது. * கரீபியன் பகுதியில் கஞ்சா விளைவிக்கப்படுகிறது. அங்கிருந்து விமானம் மூலம், மேற்கு ஆப்ரிக்கா மற்றும் மொராக்கோவிற்கு கடத்தப்படுகிறது. தொடர்ந்து லாரிகள், கப்பல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
கடத்தப்படும் முறைகள்
* பெரும்பாலும், கப்பல்களில் ஏற்றப்படும் சரக்கு கன்டெய்னர்கள் மூலம் கடத்தப்படுகிறது.
* போதைப் பொருட்களை மாத்திரைகளாக மாற்றி, பயணிகளை உட்கொள்ளச் செய்து கடத்தப்படுகிறது.
* சிறு படகுகள், சிறு விமானங்கள் மூலம் கடத்தப்படுகின்றன.
இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய போதைப் பொருள் தடுப்பு சட்டம் 1985ன்படி, போதைப் பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ம் தேதி, தொடங்கப்பட்டது.இது, நாட்டில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைக் கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் தில்லி. மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட 12 நகரங்களில் செயல்படுகிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப் பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல், கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இச்சட்டம் சொல்கிறது. இதை மீறுவோருக்கு 10 முதல் 30 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கலாம். குற்றங்களின் தன்மையைப் பொறுத்து, மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.
ட்ரான்ஸிட் பாயிண்ட் ஆகத் திகழும் இந்தியா
1990களில் பிரவுன் சுகர், மேட்ரக்ஸ் டேப்லட், கஞ்சா... போன்ற போதைப் பொருட்கள் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு போய்க் கொண்டிருந்தன. இவை எல்லாம் துறைமுக நகரங்களிலிருந்து மற்ற நாடுகளுக்கு படகில் எடுத்துச் செல்லப்பட்டு நடுக்கடலில் பரிமாற்றமாகி கடத்தப்பட்டன. இந்த ட்ெரண்ட் 2000 - 2018 வரைக்கும் தொடர்ந்தது.
அந்த நேரத்தில் ‘கன்டெய்னர் டிராஃபிக்’ வந்தது. அதாவது கன்டெய்னரில் மறைத்து வைத்து மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அதேபோல் ஏர்போர்ட்டில் ‘கேரியர் டிராஃபிக்’ அல்லது ‘கார்கோ’ மூலமாக கடத்தும் குருவிகளின் நடமாட்டமும் அதிகரித்தது. இதுதவிர கூரியர் மூலம் பார்சலிலும் மற்ற மேற்குலக நாடுகளுக்குப் போனது.
சிந்தடிக் ட்ரக்ஸ் என்று சொல்லக் கூடிய கெட்டாமைன், ஹெப்பிட்ரைன் இதோடு ஹெராயினும் அதிக அளவில் போனது. கெட்டாமைனுக்கு ‘சுனாமி’ என கடத்தல்காரர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்! சுருக்கமாகச் சொல்வதென்றால் போதைப் பொருட்களுக்கு இந்தியா என்பது ‘ட்ரான்ஸிட் பாயிண்ட்’.
இந்த நிலை கடந்த இரு ஆண்டுகளாக மாறியுள்ளது. இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது, இப்போது இந்தியாவிற்குள் புழக்கத்தில் அதிகமாகியுள்ளது. முக்கியமான போதைப் பொருளான கொகைன் அதிகமாக இந்தியாவிற்குள் வருகிறது. கடந்த ஏப்ரம் மாதம் கூட தூத்துக்குடியில் 350 கிலோ கொகைன் கைப்பற்றப்பட்டது. கன்டெய்னரில் மரத்தடிகள் என்று சொல்லி இவை கொண்டு வரப்பட்டன. இதன் மதிப்பு ரூ.2,000 கோடி என்கிறார்கள்.
இதுபோன்று மும்பை, அகமதாபாத், சென்னை, தில்லி விமான நிலையங்களிலும் கணிசமான அளவுக்கு போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளன. இரு வருடங்களுக்கு முன் உலகம் முழுவதும் ரூ.50 லட்சம் கோடிக்கு போதைப் பொருட்கள் பிசினஸ் நடப்பதாக கண்டறியப்பட்டது.
திரைப் பிரபலங்கள்
அல்ல; குருவிகள் கடத்தலில் இருப்பவர்கள் பெரிய ஒருங்கிணைப்பாளர்கள். அவர்கள் பெரும்பாலும் வெளி நாடுகளில்தான் இருப்பார்கள். இந்தியாவில் பல லேயர்களில் போதைப் பொருட்கள் பாஸ் ஆகிறது. அதாவது போதைப் பொருளை நுகரும் ஒருவர் 18வது அல்லது 20வது லேயரில்தான் இருக்கிறார். பணம் இருப்பவர்களால் மட்டுமே போதைப் பொருளை வாங்க முடியும்.
இந்தியாவில் ஒரு கிராம் கொகைன் ரூ.6,000லிருந்து ரூ.8,000 வரை விற்கப்படுகிறது. அதே போல் கருப்புப் பண ஜெனரேஷனும் இதில் இருக்கிறது. எனவே பெரும் புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மூலமாக மற்ற எல்லா இடங்களுக்கும் போய்க்கொண்டிருக்கிறது. பாலிவுட்டைப் பொறுத்தவரை மும்பையில் உள்ள நிழல் உலக தாதாக்களின் கட்டுப்பாட்டில்தான் எல்லா நடிகர்களும் இருக்கிறார்கள். எனவே, மாஃபியாக்கள் இவர்களை குருவிகளாக பயன்படுத்துகிறார்கள்.
இதைத் தடுப்பதற்கு ஒரே வழி கடல் வழிப் பாதையில் நம் உளவுத்துறையின் பலத்தை அதிகரிப்பதே. அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையாக இல்லாமல், நேர்மையானவர்களாக பணிபுரிய வேண்டும். ஏனெனில் அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்களுக்கு வேண்டியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படலாம்.
அன்னம் அரசு
|