மேஸ்ட்ரோ



இந்தியில் சக்கைப்போடு போட்ட ‘அந்தாதூனி’ன் தெலுங்கு ரீமேக்தான் ‘மேஸ்ட்ரோ’. ‘ஹாட் ஸ்டாரி’ல் நேரடியாக வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.கண் தெரியாத மாதிரி பாசாங்கு செய்கிறான் பியானோ கலைஞன் அருண். இசையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இந்தப் பாசாங்கு பரிசோதனை. ஒரு ரெஸ்டாரண்டில் அருணுக்கு பியானோ வாசிக்கும் வேலை கிடைக்கிறது. அந்த ரெஸ்டாரண்டின் முக்கிய வாடிக்கையாளர் பிரபல நடிகர் மோகன்.

அருணின் திறமையில் மயங்கும் மோகன் தனது வீட்டுக்கு வந்து பியானோ வாசிக்க அருணுக்கு அழைப்பு விடுக்கிறார். மோகனின் வீட்டுக்கு அருண் போகிறார். அங்கே மோகன் கொலை செய்யப்பட்டு தரையில் கிடக்கிறார். தனது காதலனுடன் சேர்ந்து மோகனைக் கொலை செய்தது சிம்ரன்தான் என்பது அருணுக்குத் தெரிய வருகிறது. இருந்தாலும் கண் தெரியாத மாதிரி அருண் நடிக்க வேண்டியிருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அருணின் வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதே அசத்தலான திரைக்கதை.‘அந்தாதூனு’க்கு நியாயம் செய்திருக்கிறது ‘மேஸ்ட்ரோ’. சிம்ரனாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் தமன்னா. அருணாக மனதில் நிற்கிறார் நிதின். படத்தின் இயக்குநர் மேர்லபகா காந்தி.