கற்றாழை பேட்டரிகள்... சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது ... விலையும் மலிவு!



கற்றாழையில் மின் பேட்டரிகளை உருவாக்க முடியுமா? முடியும் என தம்ப்ஸ்அப் காட்டுகிறார்கள் பொறியியல் பட்டதாரிகளான நிமிஷா வர்மாவும், நவீன் சுமனும்.
கற்றாழைச் சாறுடன் பிற மூலிகை தயாரிப்புகளைச் சேர்த்து பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, அபாயமில்லாத கிரீன் பேட்டரிகளை இவர்கள் உருவாக்கி வருகின்றனர். இதற்காக பார்சிலோனாவிலும், இந்திய ஒன்றிய அரசிடமிருந்தும் ஸ்டார்ட்அப் விருதுகளைப் பெற்றுள்ளனர்.

‘‘பொறியியல் பட்டதாரிகளான லக்னோவைச் சேர்ந்த நிமிஷா வர்மாவும், ராஜஸ்தான் பண்டியைச் சேர்ந்த நவீன் சுமனும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படும் சில மூலிகைக் கூறுகளைச் சேர்த்து, முதல்ல பேட்டரி எலக்ட்ரோலைட்டை தயாரிச்சாங்க.
பிறகு, கற்றாழைச் சாறிலுள்ள ரசாயன சக்தியிலிருந்து மின் ஆற்றலை உருவாக்கும் முறையைக் கண்டுபிடிச்சாங்க. இந்த ஐடியா இவங்களுக்கு வரக் காரணமே இந்தியாவின் பேட்டரி கழிவுகள்தான். இதுக்கு ஒரு பசுமை தீர்வை ஏன் காணக்கூடாதுனு யோசிச்சாங்க. அதன் விளைவுதான் கற்றாழை பேட்டரிகள்...’’ என்றபடி பேசத் தொடங்கினார் ஸ்டார்ட்அப் தொழில்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும்  மும்பையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் சேதுராமன் சாத்தப்பன்.

‘‘சாதாரண பேட்டரிகளை உருவாக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்ல 97% நாம் இறக்குமதி செய்றோம். இவை வெடிக்கும் அபாயம் உள்ளவை. தவிர இந்த பேட்டரிகளைப் பயன்படுத்திட்டு தூக்கி எறியும் போது நிலங்கள்ல நச்சுப்பொருட்களை வெளியிடுது. இதனால நீரும், காற்றும் மாசுபடுது. இந்தியாவுல ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் மெட்ரிக் டன் பேட்டரி கழிவுகள் வருது. இது இந்தியாவின் மின் கழிவுகளில்  82%. இதனால, நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் நோயாளிகள் இறக்கிறாங்க. தவிர, கல்லீரல் சிரோசிஸ் நோயாளிகள் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் புதிதாகக் கண்டறியப்படுறாங்க.

இவங்கள்ல 69% பேர் இது போன்ற பேட்டரி கழிவுகளைத் தூக்கியெறியும் பகுதிகளுக்கு அருகில் வசிக்கிறதா ஓர் ஆய்வு சொல்லுது. ஆனா, இந்த இகோ ஃப்ரண்ட்லி கற்றாழை பேட்டரியால் எந்த தீங்கும் கிடையாது. இவங்க இருவரும் நச்சு இல்லாத பேட்டரி ஒன்றை உருவாக்கணும்னு முடிவு செய்ததும், ஒன்பதுக்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்களை ஆராய்ச்சிக்கு எடுத்திருக்காங்க. ஆனா, சரியான எலக்ட்ரோலைட் கிடைக்கல. அப்பதான் அலோ வேரானு ஆங்கிலத்துல சொல்லப்படுற கற்றாழைச் சாற்றினை முயற்சி செய்து பார்த்திருக்காங்க. அதிலிருந்து முதல்ல 0.9 வோல்ட் எனர்ஜி கிடைச்சிருக்கு. அப்புறம், படிப்படியான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1.5 வோல்ட் நிலையான எனர்ஜி கிடைச்சது.

இவங்க கற்றாழையில் சோதனை செய்த அதேநேரம், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரி, வாழைப்பழம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்லயும் முயற்சி செய்து பார்த்திருக்காங்க. உருளைக்கிழங்குல இருந்து 0.68V உருவாக்க முடிஞ்சிருக்கு. ஆனா, நாலு நாட்கள் மட்டுமே இந்த எனர்ஜி நீடிச்சிருக்கு. வாழைப்பழம் 0.73V அளவு ஆற்றலை உருவாக்கியிருக்கு. ஆனாலும் நீடிக்கல. கற்றாழை மட்டுமே நீண்ட நிலையான ஆற்றலைத் தந்திருக்கு. அதனால, கற்றாழைச் சாற்றினைத் தேர்ந்தெடுத்திருக்காங்க.

இந்த கற்றாழை ஒரு மலிவான மூலப்பொருள். 2 ஏக்கர் நிலத்தில் 30 டன் கற்றாழை வளர்க்கலாம். இதிலிருந்து 72 ஆயிரம் பேட்டரிகளை உருவாக்க முடியும். பிறகு, அடுத்த பத்து வாரங்கள்ல மீண்டும் கற்றாழை வளர்ந்திடும். அதேபோல, கடைகள்ல கிடைக்கிற பேட்டரிகளை விட இந்த கற்றாழை பேட்டரி விலை குறைந்தது. சாதாரண பேட்டரியை விட 1.5 மடங்கு அதிகம் உழைக்கக்கூடியது.

ரிமோட் கன்ட்ரோல்கள், கடிகாரங்கள், ரேடியோக்கள், ஃப்ளாஷ் லைட், ரூம் ஃபிரஷ்னர், டிஜிட்டல் ஸ்டில் கேமரா, எம்பி 3 பிளேயர் உள்ளிட்டவற்றில் 1.5 வோல்ட் பேட்டரிகளே பயன்
படுத்தப்படுது. இந்த வகைகளில் இந்தியா ஆண்டுக்கு 5,800 கோடி பேட்டரிகளை உபயோகிக்குது. இந்த கற்றாழை பேட்டரிகளைப் பயன்படுத்தும்போது சாதாரண பேட்டரிக்கான நம்முடைய இறக்குமதி செலவு பெரியளவுல குறையும்...’’ நம்பிக்கை மிளிர சொல்கிறார் சேதுராமன் சாத்தப்பன்.

பி.கே.