வாழையிலை பேக்கிங்!



பிளாஸ்டிக் பொருட்கள் நமது சுற்றுச்சூழலை சூனியமாக்கி வரும் நிலையில் தாய்லாந்து நாட்டில் உணவுப் பொருட்களை வாழையிலையில் பேக்கிங் செய்து கொடுத்து வருகின்றது ‘ரிம்பிங் சூப்பர் மார்க்கெட்’.1932ல் தாய்லாந்து நாட்டின் சியான்மாய் நகரில் தொடங்கப்பட்டது ரிம்பிங் சூப்பர் மார்க்கெட். தாய்லாந்து மக்களால் ‘பச்சை மாளிகை’ என்று இந்த சூப்பர் மார்க்கெட் அழைக்கப்படுகிறது.
காய்கறி, பழங்கள், மளிகைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் என ஆறு பல்பொருள் அங்காடிகளை ஒரே வளாகத்தில் கொண்ட ரிம்பிங்கில் அனைத்தையும் வாழையிலையில் மட்டுமே பேக்கிங் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாங்கும் பொருட்களில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ஆண்டு முழுவதுமே தாய்லாந்தில் வாழை விளைகின்ற காரணத்தால் வாழை இலைகளை பேக்கிங்குக்கு ஏற்ற வடிவில் அழகாக வெட்டி மடித்து, மூங்கில் தப்பைகளால் அவற்றைக் கட்டி கண்களைக் கவரும் விதங்களில் பொருட்களை பேக்கிங் செய்து பாதுகாப்பாக வாடிக்கையாளர்களிடம் கொடுக்கிறார்கள்.

இவர்களின் வாழை இலை பேக்கிங்கில் மனதைப் பறிகொடுத்த பர்ஃபெக்ட் என்ற ரயில் எஸ்டேட் நிறுவனம் அவற்றைப் புகைப்படமாக்கி தங்கள் முகநூல் பக்கத்தில் பதிவேற்ற, புகைப்படங்கள் அத்தனையும் வலைத் தளங்களில் வைரலாகி ஹிட்டடித்தன.
 
இவர்களின் இந்த அசத்தலான வாழையிலை பேக்கிங் முறையைப் பல்வேறு நிறுவனங்களும் இப்போது காப்பி அடிக்கத் தொடங்கியுள்ளனர். விளைவு-வியட்நாம் நாட்டிலும் இது பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவிலும் ‘சன்னி பீ’ என்ற நிறுவனம் இந்த முறையினைப் பின்பற்றி காய்கறிகளை வாழை இலையில் பேக்கிங் செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து வருகிறது.

தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த வாழை இலையை இன்றைய தலைமுறை விசேஷங்களில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை உள்ள நிலையில் வாழை இலை பயன்பாடு மட்டுமல்ல, வாழை இலை பேக்கிங் முறையும் அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்,
இல்லையா?

மணிமகள்