சேரே
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டை அள்ளிய இந்திப் படம், ‘சேரே’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.ஒரு மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் லத்தீப், ஜெகதீஷ், பரம்ஜீத், ஹரியா ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். தூக்கிலிடும் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஹரியா.
மற்ற மூவரும் நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். சிறுவர்கள் திருடன் - போலீஸ் விளையாடுவதைப் போல, வயதான நண்பர்கள் விசாரணை விளையாட்டை விளையாடுகிறார்கள். அதாவது நால்வரில் ஒருவர் குற்றவாளி, இரண்டாம் நபர் நீதிபதி, மூன்றாவது நபர் குற்றவாளி சார்பாக வாதிடும் வழக்கறிஞர், நான்காம் நபர் நீதிக்காக குரல் கொடுக்கும் போராளி வழக்கறிஞர்.
தினமும் ஏதாவது குற்றச் சம்பவத்தை எடுத்துக்கொண்டு விளையாடுவது அவர்களது வழக்கம். இவர்களிடம் வசமாக மாட்டிக்கொள்கிறார் சமீர். ஒரு விளம்பர நிறுவனத்தின் சிஇஓவான சமீருக்கு குற்றவாளி வேடம் கொடுக்கப்படுகிறது. வெறும் விளையாட்டுக்குத்தான் என்று சம்மதிக்கிற சமீர் சந்திக்கப்போகிற விளைவுகள்தான் படத்தின் கதை. எங்கேயும் பிசகாமல் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. லத்தீப்பாக பிரமாதப்படுத்தியிருக்கிறார் அமிதாப் பச்சன். மற்ற கதாபத்திரங்களும் அசத்தல். வித்தியாசமான அனுபவத்தைத் தரும் இப்படத்தின் இயக்குநர் ரூமி ஜெப்ரி.
|