சன்னி



‘அமேசான் ப்ரைமி’ல் வாரத்துக்கு ஒரு மலையாளப்படம் இறங்குவது வழக்கமாகிவிட்டது. இந்த வாரத்தின் புது வரவு, ‘சன்னி’.  கேரளாவில் லாக்டவுனும், குவாரண்டைனும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் துபாயிலிருந்து கொச்சிக்கு வருகிறார் சன்னி. கட்டாய குவாரண்டைனுக்காக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள விலையுயர்ந்த சொகுசு அறையில் தங்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்கள் தங்கிய அறை அது.

இப்படியான ஓர் அறையில் தங்கும் அளவுக்கு சன்னி ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நொடியிலிருந்து குடித்துக்கொண்டே இருக்கிறார்.
ஹோட்டலில் வேலை செய்பவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் போன் செய்து மது வாங்கி வரச் சொல்கிறார். லாக்டவுன் அமலிலிருப்பதால் மது விற்பனைக்குத் தடை. ஹோட்டல் நிர்வாகமும் மதுவிற்கு அனுமதி மறுத்துவிட, திணறிப்போகிறார் சன்னி.

உண்மையில் இந்த சன்னி யார்... அவரது பின்னணி... எதற்காக கொச்சிக்கு வந்திருக்கிறார் என்பதே திரைக்கதை. ஒரே ஒரு நடிகர், ஒரு ஹோட்டல் அறை, போன் வழியான உரையாடல்கள், அரிதாக முகம் காட்டும் கதாபாத்திரங்களை வைத்து படமாக்கியிருப்பது சிறப்பு.  சன்னியாக வியப்பூட்டுகிறார் ஜெயசூர்யா. படத்தின் இயக்குநர் ரஞ்சித் சங்கர்.