No One Gets Out Alive



மனதை உறைய வைக்கும் திகில் படம் பார்க்க விரும்புபவர்களுக்கான நல்ல சாய்ஸ், ‘நோ ஒன் கெட்ஸ் அவுட் அலைவ்’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம். மெக்ஸிகோவிலிருந்து பிழைப்பைத் தேடி அமெரிக்காவுக்கு வரும் இளம்பெண் ஆம்பரிடம் அடையாளத்துக்கான ஆவணங்கள் எதுவுமில்லை. ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது. தங்குவதற்காக இடம் தேட... மலிவான கட்டணத்தில் பெண்கள் விடுதி இருக்கும் விளம்பரம் அவள் கண்ணில்படுகிறது.

அந்த விடுதி பாழடைந்த கட்டடமாக இருக்கிறது. அங்கேயே தங்குகிறாள். அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் அவளைபயமுறுத்துகின்றன. இதற்குப் பின்னணியில் விடுதியை நடத்திவரும் ரெட்டும், பெக்கரும் இருக்கிறார்கள். விடுதியில் தங்க வந்த எந்த பெண்ணும் உயிருடன் வெளியே போனதில்லை என்பதை அறிகிறாள் ஆம்பர்.

இன்னொரு பக்கம் அவளுடைய தோழி ஒருத்தி அடையாள ஆவணம் வாங்கித் தருவதாகச் சொல்லி, ஆம்பரிடமிருந்து பணத்தை வாங்கி தலைமறைவாகிறாள்.
நிராதரவான ஆம்பர் எப்படி ரெட், பெக்கரிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறாள் என்பதே திரைக்கதை. ஆடம் நெவில் எழுதிய நாவலை அதே பெயரில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சாண்டியாகோ மென்கினி.    

தொகுப்பு: த.சக்திவேல்