அறிவியல் விஞ்ஞானி to அதிபர்...ஜெர்மன் அம்மா!
கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் உலக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்... ஜெர்மன் மக்களால் ‘அம்மா’ என அன்புடன் அழைக்கப்பட்ட ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சிக் காலம் கடந்த செப். 26ம் தேதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. அறிவியல் விஞ்ஞானியாக இருந்து நாட்டின் அதிபராக உயர்ந்து உலக அரங்கில் சக்திவாய்ந்த தலைவராக ஏஞ்சலா எப்படி உருவெடுத்தார்? ‘We can do it’ என்ற ஒற்றை முழக்கம்தான் ஏஞ்சலா மெர்க்கலை உலக அரங்கில் தவிர்க்க முடியாத தலைவராக நிலைநிறுத்தி வைத்துள்ளது.
ஜெர்மனியின் இரும்புப் பெண்; ஜெர்மனியின் அடையாளம்; ஒற்றை ஆளாக ஐரோப்பிய யூனியனைச் சுமப்பவர்; பேச்சுவார்த்தை மூலம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் வல்லவர்... என இவருக்கு பல அடையாளங்கள் உண்டு. ஹிட்லருக்குப் பிறகு ஜெர்மனியை உலகிற்கு அடையாளப்படுத்திய ஏஞ்சலா மெர்க்கல் ஜூலை 17, 1954ம் ஆண்டு பிறந்தார். இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பின் கிழக்கு, மேற்கு என ஜெர்மன் இரண்டாகப் பிரிக்கப்பட்ட காலம் அது.
ஏஞ்சலா குழந்தையாக இருந்தபோது அவருடைய குடும்பம் கம்யூனிஸ்ட்கள் பிடியில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் குடியேறியது. அவரது தந்தை ஹோர்ஸ்ட் காஸ்னர் தேவாலய பாதிரியாராக பணியாற்றி வந்தார். ஆன்மீகத் தளத்தில் இயங்கினாலும் சோஷலிசக் கொள்கையின் தீவிர ஆதரவாளர் அவர். தாய் ஹெர்லின் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்தார். குடும்பத்தோடு உணவு உண்ணும் வேளைகளில் நடப்பு அரசியல் குறித்து விவாதிப்பதை ஏஞ்சலாவின் தந்தை வழக்கமாக வைத்திருந்தார். அரசியல் குறித்த கனவுகள் ஏஞ்சலாவின் மனதில் துளிர்விடத் தொடங்கிய காலமும் அதுதான்.
ஆனால், சுதந்திரப் பறவையான அவருக்கு ஆரம்பகட்டத்தில் இருந்தே கம்யூனிச சித்தாந்தத்தின் மீது இனம்புரியாத வெறுப்பு இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான GTRஇல் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்குத்தான் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக தந்தையின் வற்புறுத்தலின் பேரில் GTRஇல் உறுப்பினராகச் சேர்ந்தார் ஏஞ்சலா.
தந்தை கண்டிப்பானவர் என்பதால் தனது அரசியல் ஆசையை தாயிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருபுறம் அரசியல் கனவுகள் இருந்தாலும், மறுபுறம் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினார். லீப்சிக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த அவர், சில காலம் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1977ல் தன்னுடன் படித்த உல்ரிச் மெர்க் கல் என்பவரைத்திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்தக் காதல் திருமணம் ஐந்தே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது.
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானவர், சில காலம் இடிபாடுகளால் பாதிக்கப்பட்ட வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்தார். உல்ரிச் மெர்க்கலுடனான திருமணம் தோல்வியில் முடிந்தாலும் அவருடைய பெயரைத்தான் இன்று வரை தன் துணைப் பெயராக பயன்படுத்தி வருகிறார். 1981ல் குவாண்டம் வேதியியலாளரும், பேராசிரியருமான ஜோக்கிம் சாவ ருடன் இணைந்து வாழ ஆரம்பித்தார். 1986ல் குவாண்டம் வேதியியல் பிரிவில் டாக்டரேட் பட்டம் பெற்ற அவர் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.
அப்போதுதான் முதன் முதலாக தன் உறவினர் திருமணத்திற்காக மேற்கு ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டார். மேற்கு ஜெர்மனியில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த அவருக்கு மீண்டும் அரசியல் ஆசை துளிர்க்க ஆரம்பித்தது. 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஒட்டுமொத்த ஜெர்மானிய தேசத்தின் தலை எழுத்தையே மாற்றி எழுதக் கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கம்யூனிச ஆட்சியின் மீது வெறுப்படைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கத்தி, கடப்பாரையோடு பெர்லின் சுவரைத் தகர்த்தெறிந்தனர்.
பெர்லின் சுவர் இடிப்புக்குப் பிறகு ‘டெமாக்ரட்டிக் அவேக்கனிங்’ என்ற புதிய கட்சியின் செய்தித் தொடர்பாளராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் ஏஞ்சலா மெர்க்கல். கூச்ச சுபாவமுள்ள ஏஞ்சலாவின் திடீர் அரசியல் பிரவேசம் அவருடைய நண்பர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தின. ஜெர்மனியை ஒன்றிணைக்கும் முயற்சியில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் ஒரு செய்தித் தொடர்பாளராக தன்னுடைய பணியை கச்சிதமாகச் செய்து வந்தார் ஏஞ்சலா.
1990ல் கிழக்கு ஜெர்மனுடன், மேற்கு ஜெர்மன் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு ‘கிறிஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன்’ கட்சியில் ஐக்கியமானார். கிழக்குப் பிராந்திய மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கட்சியில் ஏஞ்சலாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் கட்சித் தலைவர் ஹெல்மட் கோல். 1990ல் தேர்தலில் வெற்றி பெற்ற ஏஞ்சலாவிற்கு பிரதமர் ஹெல்மட் கோல் அமைச்சரவையில் மகளிர் மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சக்தி வாய்ந்த சுற்றுச் சூழல், அணுசக்தித் துறை அமைச்சர் பொறுப்பு ஏஞ்சலாவைத் தேடி வந்தது. அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட அவர் அந்நாட்டு அதிபர் ரொனால்ட் ரீகனைச் சந்தித்துப் பேசினார்.
சோவியத் யூனியனைத் தீவிரமாக எதிர்த்து வந்த ரீகனை தன் குருவாக ஏற்றுக் கொண்டார். இதன்பிறகுதான் ஆண் ஆதிக்கம் நிரம்பிய ஜெர்மன் அரசியலில் தன் அரசியல் சதுரங்கத்தை ஆடத் தொடங்கினார். கூச்ச சுபாவத்தோடு வசீகரமில்லாமல் வளம் வந்த ஏஞ்சலா மெர்க்கலை ஆரம்பத்தில் அவரது சக அமைச்சர்கள் யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்த போது பருவ நிலை மாற்றம் தொடர்பாக உலகளாவிய மாநாட்டைக் கூட்டினார். இது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சிகளுக்குள்ளும் அவரது செல்வாக்கை உயர்த்தியது.
1997ல் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் முதல் சோதனைக் காலத்தை சந்தித்தார் அவர். அணுக்கரு உலைக் கழிவுகளை போல்பெர்ன் என்கிற இடத்தில் கொட்டுவதற்கு உத்தரவிட்டிருந்தது ஜெர்மன் அரசு. இதை எதிர்த்து அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஏஞ்சலாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். கலவரமாக மாறிய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திணறினார் ஏஞ்சலா. இதைத் தொடர் ந்து அவரது பதவி பறிக்கப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் காத்துக்கிடந்தன. ஆனால், பிரதமர் ஹெல்மட் கோல்அவர்களிடம் தனக்கிருந்த செல்வாக்கின் மூலம் தப்பித்தார்.
1998 பொதுத் தேர்தலில் ஹெல்மட் கோல் தலைமையிலான ’கிறிஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன்’ கட்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தன்னுடைய சொல் பேச்சைத் தட்டாதவரான ஏஞ்சலா மெர்க்கலைக் கொண்டு வந்தார் கோல். அதே ஆண்டில் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்த ஜோக்கிம் சாவரைத் திருமணம் செய்து கொண்டார் ஏஞ்சலா . 1999ல் தன்னுடைய குருநாதர் ஹெல்மட் கோல் உட்பட தன்னுடைய முக்கிய கட்சித் தலைவர்கள் ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியபோது அவர்களை வெளிப்படையாக விமர்சித்தார் மெர்க்கல். அரசியலில் தன்னால் வளர்த்துவிடப்பட்ட ஏஞ்சலா தனக்கு எதிராக அரசியல் செய்வதை ஹெல்மட் கோலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே 2007ல் ஹெல்மட் கோல் மறைவுக்கு மெர்க்கல் இரங்கல் உரை நிகழ்த்துவதற்கு கோலின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
2000ம் ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் கோல் ஆதரவு பெற்ற வேட்பாளரை வீழ்த்தி CDU கட்சியின் முதல் பெண் தலைவராக மகுடம் சூடினார். 2002 பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கணிசமான இடங்களை மெர்க் கல் தலைமையிலான CDU கட்சி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜெர்மன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஏஞ்சலா, பொருளாதாரம் மற்றும் அந்நிய உறவுகளில் செய்த மேம்பாடுகள் இவருடைய செல்வாக்கை அதிகப்படுத்தின. இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா வுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.
2005ல் ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சியுடன் கூட்டணி அமைத்து 22-11-2005ல் ஜெமானிய தேசத்தின் முதல் பெண் பிரதமராகப் பதவி ஏற்றார் ஏஞ்சலா மெர்க்கல். அரசு நிர்வாகத்தில் வெளிப்படையாகச் செயல்பட்டாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை ரகசியமாக வைத்துக் கொண்டார். நாட்டு வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஏஞ்சலா மெர்க்கலை ‘அம்மா’ என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தார்கள் ஜெர்மன் மக்கள். பிரதமரானதும் முதல் வேலையாக அமெரிக்காவின் நட்பு சக்தியாக தன் னை அடையாளப்படுத்திக் கொண்டார். அமெரிக்காவின் உதவி மட்டுமில்லை என்றால் தன்னால் அரசியலில் இவ்வளவு பெரிய உயரத்தைத் தொட்டிருக்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்தார்.
அதே நேரம் அவருடைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுடனான உறவு இதுவரை இல்லாத வகையில் மோசமடைந்தது. 2007ல் ஏஞ்சலாவுடனான சந்திப்புக்கு தனது லேப்ரடார் நாயுடன் வந்திருந்தார் ரஷ்ய அதிபர் புடின். நாய்களமீது மெர்க்கலுக்கு இருக்கும் பயத்தைத் தெரிந்து கொண்டு அவரைச் சீண்டுவதற்காகவே இந்தக் காரியத்தை புடின் செய்ததாக ஜெர்மன் ஊடகங்கள் விமர்சனம் செய்தன.
2011ல் ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ஜெர்மனியில் அணு உலைகளைப் படிப்படியாக மூடுவதற்கு முடிவெடுத்தார். ஜெர்மனியின் அரசியலைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்ட அணு உலை நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புகளை மீறி இதை துணிந்து செயல்படுத்தினார்.
2015ல் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுக்கத் துணிந்தார். போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிரியா அகதிகளுக்கு ஜெர்மனியில் இடம் கொடுத்தார். மெர்க்கலின் சொந்தக் கட்சித் தலைவர்களே அதிபரின் இந்த முடிவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், இது மனிதாபிமானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் இதில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார் மெர்க்கல். ஹிட்லரால் ஜெர்மனிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கும் விதமாக மனிதாபிமானத்தோடு செயல்படுகிறார் மெர்க்கல் என அவரின் புகழ் உலக அளவில் பரவியது.
2005ல் தொடங்கி 16 வருடங்களுக்கு மேலாக ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தைத் தன் கைப் பிடியில் வைத்திருந்தார் ஏஞ்சலா. அரசியலில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தாலும் ஜெர்மனியின் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் என்றால் அது ஏஞ்சலா மெர்க்கல்தான். அரசியல், அந்நிய உறவு மேம்பாட்டுக்காக மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களைத் தவிர ஏஞ்சலாவை கால்பந்து விளையாட்டு மைதானங்களில் அதிகம் காணலாம்.
ஜெர்மனி விளையாடும் எல்லா விளையாட்டுகளையும் அரங்கிற்கே சென்று பார்ப்பது இவரது வழக்கம். ஐரோப்பிய யூனியனில் அதிக காலம் அதிபரான பெருமையைப் பெற்ற ஏஞ்சலா, ஏற்கனவே அறிவித்திருந்தது போல் அரசியலில் இருந்து விலகி தன் தாயுடன் இருக்கப் போகிறாரா என்பதை உலகம் உற்று நோக்குகிறது.
அன்னம் அரசு
|