திராவிடம் 2.0



சில மாதங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியான ‘திராவிட மாடல்’ (Dravidian Model) எனும் புத்தகம் தமிழ் வாசகப் பரப்பில் பெரும் அதிர்வை உண்டாக்கியது. இதன் ஆசிரியர்களில் ஒருவர் கலையரசன். சென்னையில் உள்ள எம்.ஐ.டி.எஸ்(MIDS) எனும் வளர்ச்சிக்கான ஆய்வு நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், இப்போது உலகப் பல்கலைக்கழகங்களில் சிறப்பு ஆய்வாளராக இருக்கிறார். சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதியிருந்தார். ‘திராவிடம் 2.0: எதிர்கால செயலுக்காக சிந்திப்பதற்கான நேரம்’ என்பது அதன் தலைப்பு. அந்தக் கட்டுரையின் சாராம்சத்தைப் பார்ப்போம்.

‘பெரியார், அண்ணா, கலைஞர் எனும் திராவிடத்தின் முப்பெரும் தூண்களை திமுக கொண்டாடி வருகிறது. அதே நேரத்தில் இந்த தூண்களால் தமிழகம் அடைந்த மாற்றங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. உற்பத்திப் பொருளாதாரத் துறையின் உயிரோட்டமும், மக்கள் நலத் திட்டங்களும் தமிழ்நாட்டை நவீனமாக மாற்றியுள்ளன.

குறிப்பாக இவை அடிக்கட்டுமானங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. உதாரணத்துக்கு, தமிழகத்தின் மக்கள் தொகையில் வெறும் 30% மக்களே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் விளைவு விரைவான நகரமயமாதல். நகரமயமாதலால் தொழிற்சாலைகளில் வேலைசெய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த மாற்றங்கள் எல்லாம் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் ஆகிய மூன்று சமூகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கின. ஆனாலும் அந்த வாய்ப்புகள் இந்த மூன்று சமூகங்களின் முதல் தலைமுறையினருக்கே சாதகமாக இருந்தது. இரண்டாம் தலைமுறையினருக்கு வேறுவகையான சவால்களை உண்டாக்கியது. இதுதான் திராவிடக்கொள்கையின் முன்பிருக்கும் இன்றைய சவால். இந்தப் பிரச்னை தமிழ்நாட்டுக்கே உரிய பிரச்னை என்பதிலும் சந்தேகம் இல்லை.

திராவிடத்தின் ஆரம்ப கால சமூக கொள்கைத் திட்டங்கள் இந்த மூன்று சமூகங்களின் முதல் தலைமுறையினருக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் வளர்ச்சியைக் கொண்டு வந்தது. சாதி அடிப்படையிலான வேலையானது கூலி வேலையாக பரிணாமம் அடைந்தது. இதை திராவிடக் கொள்கையின் ஆரம்ப கால சாதனையாகச் சொல்லலாம். ஆனால், திராவிடக் கொள்கைகள் மூலம் அரசு மேலும் ஆற்றவேண்டிய காரியங்கள் உள்ளன என்பதைத்தான் பின்வரும் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

குறிப்பாக அந்தக் கூலி வேலைகள் கவுரவமான வேலையாக இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். விவசாயத்தைவிட்டு தொழிற்சாலைகளை நோக்கி மக்கள் சென்றனர். ஆனால், அந்த வேலைகள் நிரந்தரமான வேலையாக இல்லை. தவிர, அவை பகுதி நேர வேலையாக மட்டுமே அமைந்துபோனது தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
உதாரணமாக 2018 - 2019க்கான தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வு, ‘தமிழகத்தில் 62% தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழில்களில் இருப்பதாகவும், இந்தத் தொழிலாளர்களில் 82% பேருக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லை...’ என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறது.

நிரந்தர வேலையில் இருக்கும் சொற்பமானவர்களிலும் கூட 75.2% பேர் எந்தவித தொழில் ஒப்பந்தத்திலும் இல்லை என்று அந்த ஆய்வு சொல்கிறது. இந்த அமைப்பு சாரா தொழில்களுக்கும், அதன் விளைவான வருமானக் குறைபாடுகளுக்கும் மூல காரணம், கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் பின்பற்றப்படும் கல்வி தொடர்பான மோசமான திட்டங்களே. தவிர, ‘அனைவருக்குமான கல்வி’ எனும் திராவிட சமூகநீதிக் கொள்கையில் உள்ள குறைகளைக் கவனப்படுத்துவது தேவையாக உள்ளது. 2019 - 2020க்கான ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் ‘கல்வியில் மாணவர்களின் செயல்திறன்’ எனும் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.

உதாரணமாக 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 4 பேரில் ஒருவர் ‘க்ளாஸ் 2 லெவல்’ புத்தகத்தை வாசிக்க முடியாமல் இருக்கின்றனர். அதேபோல 50% மாணவர்களுக்கு சாதாரண வகுத்தல் கணிதமே தெரியவில்லை என்று அந்த ஆய்வு குற்றம் சாட்டுகிறது. இதுதான் அந்த மாணவர்களை அடுத்த கட்ட கல்லூரி, தொழில்களுக்கும் செல்ல வைக்கும். இந்தியாவில் 27.1% மாணவர்களே உயர் கல்வியில் சேர்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் 51.4% மாணவர்கள் உயர்கல்விக்குப் போவது ஆரோக்கியமான விஷயம். இருந்தாலும் பள்ளிப்பருவ வெளிப்பாடுகள் தமிழகத்தின் தொழில் சந்தையை மிகவும் பாதிக்கக்கூடியது.

கல்லூரிகளில் தமிழக மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம், தனியார் கல்லூரிகள். மட்டுமல்ல, இந்திய அளவில் கல்விக்கடன் வாங்கிப் படிக்கும் மாணவர்களில் 5ல் ஒரு மாணவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். தவிர, இந்த தனியார் கல்லூரிகள் ஒன்றிய அரசின் கல்லூரிக்கான கட்டுத்திட்டங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. அதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் தரத்தில் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். அத்துடன் இந்த மாணவர்களால் மற்ற இந்திய மாணவர்களுடன் போட்டிபோட முடியாமல் போகிறது.

முன்பு குறிப்பிட்ட 3 சமூகங்களில் இருந்து முதல்முறையாக (திராவிட கொள்கைப்படி இரண்டாம் தலைமுறையினர்) உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களே இதில் அதிகமாக மாட்டிக்கொள்கின்றனர்.தமிழகத்தில் பொது சுகாதாரம், மருத்துவத்தில் சமூகநீதிக் கொள்கைகள் பின்பற்றப்பட்டாலும் தனியார் மருத்துவ சேவையின் அசுர வளர்ச்சியைப் பற்றி இங்கும் யாரும் பேசுவதில்லை. ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான செலவு தமிழகத்தில் கிட்டத்தட்ட 35,581 ரூபாயாக இருக்க, இந்திய அளவில் 31,845 ரூபாயாக இருப்பது தமிழக மருத்துவத்துறையில் தனியாரின் செல்வாக்கைப் புரியவைக்கிறது. இது கொரோனா காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த சில விஷயங்களால் தெளிவாகப் புலப்படுகிறது.

உதாரணமாக ஆந்திராவைவிட தமிழகத்தில் அதிகமான கொரோனா இழப்புகள் நிகழ்ந்தன. அதுபோல கேராளாவைவிட தமிழகத்தில் இரட்டிப்பு. இவையெல்லாம் பொதுசுகாதாரத்தைவிட தனியார் மருத்துவம் இங்கே கோலோச்சுவதைத்தான் காண்பிக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்துக்கு அண்மையில் திமுக அரசு ஒரு நெம்புகோலாக இருந்தாலும் பொருளாதார ரீதியில் சாதிய சமத்துவமின்மை இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பது நிரூபணமாகிறது.

கிராமங்களில் ஓரளவு சாதிய ஏற்றத்தாழ்வு குறைந்தாலும், இது இன்று நகரத்துக்கு இடம் மாறியிருக்கிறது. நகரத்தில் ‘நம்ம சாதி’ என்ற அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுப்பதன் மூலம் சாதி இன்னும் உறுதியாக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களே அரசு சேவைகளில் தலித்களுக்கு இடஒதுக்கீடு பற்றி அறிவிப்பு செய்கையில் தமிழகம் இதுபோன்ற அறிவிப்புகளைச் செய்யாமல் இருப்பது சிந்தித்துப் பார்க்கவேண்டியவை. தமிழகத்தில் தலித்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக்கொண்டு வருவதும் திராவிடத்தின் சமூகக் கொள்கைகளில் மாற்றம்வேண்டும் என்பதை சூசகமாக வலியுறுத்துகிறது.

அடுத்து பெண்கள். தமிழகத்தில் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை 42%. குஜராத்தில் 34%. மகாராஷ்டிராவில் 41.3%. இந்திய அளவில் 31%.
இது தமிழக சாதனைதான். தவிர, விவசாயம் அல்லாத வேலைகளில் ஈடுபடும் தமிழகப் பெண்களின் எண்ணிக்கை 61%. ஆனால், இந்த எண்ணிக்கை குஜராத்தில் 34%. மகாராஷ்டிராவில் 35%தான்.  

ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்திருப்பதை என்னவென்று சொல்வது? 2015 - 16ன் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 45% பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர். பீகாரிலும் இதே நிலைதான். ஆனால், இந்திய அளவில் 33%தான் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

பொருளாதாரத்தில் கூட தமிழகத்தின் மொத்த உற்பத்தி குறைவாகவே உள்ளது. அதாவது 8.7%. இந்திய மாநிலங்களிலேயே மிகவும் குறைந்தளவு உற்பத்தி இது.
தமிழகத்தின் வருமானத்தில்கூட அதிகளவு டாஸ்மாக்கில் இருந்துதான் கிடைக்கிறது. வசதி படைத்தவர்களிடமிருந்து அதிகளவு வரிகளை வசூலிப்பதன் மூலமே தமிழகப் பொருளாதாரத்தை மீட்க முடியும்.

ஆனால், ஊழலும், வேண்டியவர்களுக்குப் பொருளாதாரத்தை அடகு வைத்ததும் தமிழக நிதி நெருக்கடியை அதிகமாக்கிவிட்டது. திராவிட அரசியலில் கட்சிகள்தான் அதிகாரத்திலும், பணம் படைப்பதிலும் முன்நிற்கின்றன. ஊழல்களைப் பார்த்தால் இது தெள்ளத்தெளிவாகத் தெரியும். இது தேர்தலில் ஒரு வேட்பாளர் செய்யும் செலவில் இருந்தே புரியும்.
எல்லாத் துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவருவது இன்றைய தேவையாக உள்ளது. இதை திமுக அரசு கவனத்தில் கொண்டு எதிர்காலத் திட்டங்களை வகுப்பது மிக மிக அவசியம்.’

டி.ரஞ்சித்