Family Tree - டிரெய்லர் தயாரிப்பில் ராட்சசன்!



ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் இரும்புப்பெட்டிக்கு டிரெய்லர் என்று பெயர். இது நகர்வதற்காக வாகனத்தைப் போல சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆனால், தானாக இயங்காது. எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் இதனை இழுத்துச் செல்ல வேண்டும்.இந்த டிரெய்லர் தயாரிப்பில் உலகளவில் முன்னணியில் இருக்கும் குடும்ப நிறுவனம், ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’. 129 வருடங்களாக இயங்கிவரும் இந்நிறுவனம், பல வகையான டிரெய்லர்கள், டிப்பர் வாகனங்களுக்கான பாடிகளைத் தயாரித்து வருகிறது.

ஃப்ரான்ஸ் ஹெயின்ரிச் ஸ்மிட்ஸ்

ஜெர்மனியின் ஆல்டன்பர்ஜ் எனும் கிராமத்தில் 300 வருடங்களுக்கு மேலாக இரும்பை உருக்கும் கொல்லர் தொழிலைச் செய்து வந்த குடும்பத்தில் பிறந்தவர் ஃப்ரான்ஸ் ஹெயின்ரிச் ஸ்மிட்ஸ். அவரது குடும்பத்தொழிலைக் குறிக்கிறது ‘ஸ்மிட்ஸ்’ எனும் பெயர்.கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த ஆல்டன்பர்ஜில், 1856ம் வருடம் பிறந்தார் ஃப்ரான்ஸ் ஹெயின்ரிச் ஸ்மிட்ஸ்.
அவரது அப்பா இரும்புப் பட்டறையை நடத்திவந்தார். போக்குவரத்துக்கு குதிரை வண்டிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட காலம் அது. அதனால் குதிரைக்கு லாடம் அடிக்கும் தொழிலுக்கு கடுமையான போட்டி நிலவியது. எல்லோராலும் இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. குதிரைக்கு லாடம் அடிப்பதற்கான திறனும், நேர்த்தியும் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வங்கித் தேர்வைப் போல ஒரு தேர்வு இருந்தது. இந்த தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே லாடம் அடிக்க முடியும் என்று சட்டம் வேறு.

இத்தேர்வை 1884ல் எழுதி, லாடம் அடிக்க தகுதியானவர் என்ற சான்றிதழைப் பெற்றார் ஸ்மிட்ஸ். அதே வருடத்தில் தந்தையின் பட்டறையையும் தன்வசமாக்கிவிட்டார்.
இந்தப் பட்டறையில் லாடம் அடிப்பதோடு விவசாயக் கருவிகள் உட்பட பல இரும்புப் பொருட்களைப் பழுதுபார்த்தார் ஸ்மிட்ஸ். குதிரைக்கு லாடம் அடிப்பதில் ஆரம்பித்த ஸ்மிட்ஸின் பிசினஸ், ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’லாக பரிணமித்ததற்கான காரணங்களில் ஒன்று, இரண்டாம் வில்ஹெல்மின் ஆட்சி.

ஆம்; 1888ல் இளைஞரான இரண்டாம் வில்ஹெல்ம் ஜெர்மனியின் அரசராக மகுடம் சூடினார். தொழில்துறை வளர்ச்சியை அடிப்படையாக வைத்து பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார் வில்ஹெல்ம். அடுத்த இரண்டு வருடங்களில் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய தொழில்மயமாக்கப்பட்ட நாடாக வளர்ச்சியடைந்தது ஜெர்மனி. அப்போது ஜெர்மனியின் மக்கள் தொகை 5 கோடி. 1900களிலேயே ஜெர்மானியர்கள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொழில்துறையிலும், பிசினஸிலும் ஈடுபடத் தொடங்கினர். இதனால்தான் இன்று தொழில்துறையில் முன்னோடியாக இருக்கிறது ஜெர்மனி.

தொழில்துறைக்கு அடுத்து போக்குவரத்திலும் துரிதமான மாற்றங்களைக் கொண்டுவந்தார் வில்ஹெல்ம். குறிப்பாக ரயில் பாதை 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு விரிவடைந்தது. ஸ்மிட்ஸின் ஊரான ஆல்டன்பர்ஜ் வழியாகவும் ரயில்பாதை சென்றது. இப்பாதையில் சரக்கு ரயில்கள் மட்டுமே பயணித்தன.

ஆல்டன்பர்ஜ் வியாபாரிகள் ரயிலில் கொண்டுவரப்படும் சரக்குகளைக் கொள்முதல் செய்து, குதிரை வண்டிகள் மூலமாக ஊருக்குள் எடுத்துச் சென்றனர். சரக்குகளைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல மரத்தினாலான ஒரு பெட்டியை வடிவமைத்து, அதை குதிரை வண்டியுடன் பிணைத்திருந்தனர். அந்தப் பெட்டி நகர்வதற்காக மரத்தினாலான சக்கரங்களும், அதன் மேல் இரும்பினாலான உருளைகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆல்டன்பர்ஜின் சாலைகள் கரடுமுரடானவை; குண்டும், குழியுமாக இருக்கும். அதனால் அந்தப் பாதையில் செல்லும்போது சக்கரத்துக்கும், குதிரையின் லாடத்துக்கும் பிரச்னைகள் உண்டாகும். அப்படி பிரச்னை ஏற்பட்டால் அதை சரிசெய்ய அங்கே பல பட்டறைகள் இருந்தன. அவற்றில் முதன்மையானது ஸ்மிட்ஸின் பட்டறை.

மரத்தாலான வண்டிச் சக்கரங்களின் விளிம்பில் இரும்பை உருக்கி ஊற்றி வலிமையான இரும்பு உருளைகளைப் பொருத்துதல் மற்றும் லாடத்தை சரி செய்வதில் கில்லாடி அவர். லாடத்தை சரி செய்யும்போது வியாபாரிகளுடன் உரையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பிசினஸைவிட, சரக்குகளை எடுத்துச்செல்லும் மரப்பெட்டிதான் அவரை வசீகரித்தது. லாடம் அடிப்பதையும், சக்கரங்களைப் பழுதுபார்ப்பதையும் விட்டுவிட்டு சரக்குப்பெட்டிகள் தயாரிப்பை நோக்கி நகர்ந்தார் ஸ்மிட்ஸ்.

இந்நிலையில் குதிரை வண்டிகள் மோட்டார் வாகனங்களாக பரிணமித்து வேகமெடுத்தன. மரச் சக்கரங்களும், இரும்பு உருளைகளும் அலுமினியம், ஸ்டீல் சக்கரங்களாகவும், ரப்பர் டயர்களாகவும் பரிணமித்தன. ஆனால், சரக்குப்பெட்டிகள் அப்படியே மரத்தில் இருந்தன. அதே நேரத்தில் வாகனத்தின் திறனை விட மிகக்குறைவான சரக்குகளை எடுத்துச்செல்லும் அளவுக்குத்தான் அந்தப் பெட்டிகள் இருந்தன.

இதைக் கவனித்தார் ஸ்மிட்ஸ். இரும்பை உருக்கி என்ன பொருளை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை சிறுவயதிலேயே அறிந்திருந்தார் ஸ்மிட்ஸ். அவரது பட்டறையிலேயே டிரெய்லருக்கு அடித்தளம் இடப்பட்டது.  உருவானது ஜெர்மனியின் முதல் டிரெய்லர். புதிதாக ஒன்றை ஆரம்பிப்பதற்கான துணிச்சல், அப்படி ஆரம்பிக்கும்போது ஏற்படுகின்ற புது சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகிய இந்த இரண்டும்தான் ஸ்மிட்ஸின் பிசினஸ் மந்திரம்.

முழுக்க முழுக்க இரும்பில் தயாரிப்பதால் ஆகும் அதிக செலவு, சில மாதங்களைக் கோரும் தயாரிப்புக் காலம், வாகனத்தில் பொருத்துவதற்கான சிரமங்கள், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சுலபமாகக் கொண்டு செல்ல முடியாதபடி அதிக எடை என பல சவால்களைச் சந்தித்தார் ஸ்மிட்ஸ். இந்த சவால்களை வெற்றிகொண்டு  சர்வதேச மற்றும் உள்நாட்டு பிசினஸில் முக்கிய இடத்தைப் பிடித்தது ஸ்மிட்ஸின் புது டிரெய்லர்.

நவீன வாகனங்களின் வருகையும், எண்ணிக்கையும் அதிகரிக்க டிரெய்லரின் உற்பத்தியும் எகிறியது. அத்துடன் வாகனத்தின் திறனைவிட அதிகளவு பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வசதியை ஸ்மிட்ஸ் உருவாக்கியிருந்ததால் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முழுமையான டிரெய்லர் தயாரிக்கும் நிறுவனமாக பரிணமித்தது ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’. ஆரம்பத்தில் நிறுவனத்தின் பெயர் ‘ஸ்மிட்ஸ் அண்ட்ஹேங்கர்’.

78 வயதில் ஸ்மிட்ஸ் ஓய்வு எடுத்துக்கொள்ள, அவரது மகன்களான ஜோசப்பும், ஆகஸ்ட்டும் நிர்வாகத்தை கையில் எடுத்தனர். தொழில்நுட்பத்தில் வல்லவரான ஜோசப் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையைப் பார்த்துக்கொள்ள, விற்பனையையும், மார்க்கெட்டிங்கையும் பார்த்துக்கொண்டார் ஆகஸ்ட். அப்போதே ஆர்டர் செய்த 3 வாரத்தில் டிரெய்லர் கைக்குக் கிடைக்கும். தவிர, 2 டிரெய்லர்களை ஆர்டர் செய்தால் தள்ளுபடி உண்டு என அறிவிப்பு செய்து அதகளம் செய்தனர் சகோதரர்கள். பிறகு டிரெய்லர் மட்டுமல்லாமல் ஃப்ளாட்பெட் தயாரிப்பு, வாகனங்களுக்கான பாடி கட்டுதலிலும் இறங்கினர்.

‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’ தொட்டதெல்லாம் லாபத்தைக் கொண்டுவந்தது. காரணம், அவர்கள் செய்ததை அதற்கு முன் யாருமே செய்யவில்லை. பின்னர் வந்த தலைமுறையினர் வருடந்தோறும் 45 ஆயிரத்துக்கும் அதிகமான டிரெய்லர்களைத் தயாரிக்கும் நிறுவனமாக ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’லை வளர்த்தெடுத்துவிட்டனர்.

முக்கிய நிகழ்வுகள்

முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனியில் வணிக வாகனங்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. இதன் விளைவாக 1935ல் தனது முதல் டிரெய்லரை கட்டமைத்தது ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’. இதற்குப் பிறகு டிரெய்லருடன், வாகனங்களுக்கு பாடி அமைத்தலிலும் இறங்கியது. 1950ல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் குளிர்சாதன வசதி கொண்ட டிரெய்லர் அறிமுகப்படுத்தப்பட்டது.

‘ஸ்மிட்ஸை’ப் பற்றிக் கேள்விப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் டேங்கர் வடிவமைத்துத்தர வேண்டுகோள் விட்டன. 1973ல் டேங்கர் தயாரிப்பில் இறங்கி பட்டையைக் கிளப்பியது ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’.

1970ல் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஹெயின்ஸ் ஸ்மிட்ஸும், பீட்டர் ஸ்மிட்ஸும் தலைமைப் பொறுப்புக்கு வந்தனர். மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப்பிரிவுக்குத் திறமை வாய்ந்த நபர் தேவைப்பட்டார். 1974ல் பெர்ன்ட் ஹோஃப்மான், ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’லின் விற்பனைப் பிரிவின் தலைவரானார். சர்வதேச அளவில் பிசினஸ் எகிறியது. ஹோஃப்மானின் குடும்பமும் பிசினஸில் ஒரு அங்கமாகியது.

1980களில் உற்பத்தியைவிட ஆர்டர்கள் அதிகமாகக் குவிந்தன. ஆனால், ஆல்டன்பர்ஜில் இருந்த ஆலை தயாரிப்புக்குப் போதுமானதாக இல்லை. அதனால் ஆல்டன்பர்ஜில் உள்ள தொழிற்துறை வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய டிரெய்லர் தயாரிப்பு ஆலையை அமைத்தது ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’.

1984ல் லிபியாவின் பெரு நகரங்களில்  குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த தட்டுப்பாட்டை நீக்க வேண்டுமானால் 4000 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர்க் குழாய்களைக் கட்டமைக்க வேண்டும். அதுவும் விரைவாக. குறித்த நேரத்துக்குள் தண்ணீர்க் குழாயை அமைத்து, லட்சக்கணக்கான மக்களின் தாகத்தைத் தீர்த்தது லிபிய அரசு.

இதை எட்டாவது அதிசயமாகக் கொண்டாடுகின்றனர். இந்த அதிசயத்துக்குப் பின்னணியில் ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’லும் இருக்கிறது. ஆம்; எடை மிகுந்த தண்ணீர்க் குழாய்களை எடுத்துச் செல்வதற்கான பிரத்யேக டிரெய்லரை வடிவமைத்தது ‘ஸ்மிட்ஸ்’தான். இது லோ - லோடர் டிரெய்லர் என்று அழைக்கப்படுகிறது. 1994ல் கர்ட்டன்சைடர்ஸ், கன்டெய்னர், டிப்பர், பாக்ஸஸ் தயாரிப்பிலும் இறங்கியது.

1998ல் சர்வதேச அளவில் பிசினஸ் சக்கைப்போடு போட்டது. ஆனால், ‘ஸ்மிட்ஸ் அண்ட்ஹேங்கர்’ என்ற பெயர் பல நாடுகளைச் சென்றடையவில்லை. அதனால் நிறுவனத்துக்கு புதிதாக வணிக முத்திரையும், பிராண்ட் பெயரும் தேவைப்பட்டன. ‘ஸ்மிட்ஸ் கார்கோபுல்’ என்று நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டு அதுவே பிராண்டாகிவிட்டது. கார்கோ என்பது சரக்குகளையும், புல் என்பது நிறுவனத்தின் வணிக முத்திரையான நீல வண்ண யானையையும் குறிக்கிறது. 1999ல் லித்துவேனியாவிலும், 2002ல் ஸ்பெயினிலும், 2017ல் துருக்கியிலும் கிளைகளைத் திறந்தது.

இன்று

ஜெர்மனியில் உள்ள ஹோர்ஸ்ட்மர் எனும் நகரத்தில் தலைமையகம் இயங்கிவருகிறது. இந்நிறுவனத்தில் 5,700 பேர் வேலை செய்துவருகின்றனர். நான்காம் தலைமுறையைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் ஸ்மிட்ஸ் சேர்மனாக உள்ளார். 2019-20ம் நிதியாண்டின் மொத்த விற்பனை 16,197 கோடி ரூபாய்!              

த.சக்திவேல்