நடிகைக்கென்று ஓர் மனம்



‘‘அப்பா, இது உங்களுக்கு வீடு. எனக்கு கோயில். கோயிலுக்கு வரக்கூடாதுன்னு பகவான் சொல்லிட்டா அதுக்காக பக்தன் வராம இருந்திடுவானா? நான் வீட்டுக்கு வெளில நின்னு கும்பிட்டுக்கிறேன்...”கட் என்றார் டைரக்டர் சீனிவாசன்.படப்பிடிப்புத் தளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல்கள் எழுந்தன.
நடிகை கங்கா எந்த பொசிஷனில் நின்று வசனம் பேசி நடித்துக் கொண்டிருந்தாரோ அதே பொசிஷனில் அப்படியே சிலை போல் நின்றிருந்தாள். அவளுக்கு எதிரே நின்றிருந்த கேரக்டர்கள் கூட தள்ளிப் போய்விட்டிருந்தார்கள். கட் சொன்ன பிறகும் இவள் ஏன் இப்படி நிற்கிறாள் என்று சீனிவாசன் அருகில் போய் “கங்கா...” என்று அழைத்தவுடன் திரும்பினாள்.

“கேரக்டரோட ஒன்றிட்டீங்க போலிருக்கு...’’ இயக்குநர் சொல்ல, “எஸ் சார்...” என்று அசட்டுப் புன்னகையுடன் தனது இருக்கைக்கு வந்தமர்ந்த கங்கா, காட்சியின் பாதிப்பிலிருந்து அகலவில்லை என்பது டச்சப் பெண்ணிடமிருந்து வாங்கிய டவலுடன் யோசனையில் அவள் அமர்ந்திருந்தபோதே எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.‘வெளில போ... இனி இங்க வராதே...’ என்று சொன்ன தந்தையிடம் அன்றொரு நாள் இதேபோன்றதொரு அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளைப் பேசி மன்றாடியது ஞாபகத்துக்கு வந்தது.

சினிமாவில் நடிகையாகும் வெறித்தனமான ஆசையில் வீட்டில் அனுமதி கேட்கப் போக, அம்மாவும் அப்பாவும் தீயைத் தொட்டது போல் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்க ஆரம்பிக்க, வீட்டை விட்டு வெளி வந்து விட்டாள். கடுமையான போராட்டம். எண்ணற்ற அவமானங்கள். அனைத்தையும் எதிர் கொண்டு போராடி முதல் படம் சான்ஸ் கிடைத்து நடித்து முடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓட, ரசிகர்கள் கனவுக் கன்னி என்று கொண்டாட ஆரம்பித்தார்கள்.

தமிழ் சினிமா அவளுக்கான இடத்தை அள்ளி வழங்கியது. இப்போதாவது தன் பெற்றோரின் கோபம் தணிந்திருக்கும் என்று ஆவலுடன் வீட்டுக்குச் சென்றவளை அப்பா கன்னத்தில் மாறி மாறி அறைந்து வீட்டை விட்டு விரட்டினார். அம்மாவும் தம்பியும் வேடிக்கை பார்த்தார்கள். கங்கா  நடித்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்றது சந்தோஷத்தைத் தந்தாலும், தமிழ்நாடே ஏற்றுக்கொண்ட தன்னை தன் வீடு ஏற்க மறுப்பது அந்த சந்தோஷத்தையே அனுபவிக்க முடியாமல் செய்து விட்டிருந்தது.

ஒரு பெரிய பத்திரிகையின் விருது விழாவில் சிறந்த நடிகை அவார்டு கிடைக்க, ஆர்வமாய் பெற்றோரைப் பார்க்கச் சென்றாள். வீட்டையே காலி பண்ணிக் கொண்டு எங்கு செல்கிறோம் என்பதைக் கூட சொல்லாமலே சென்று விட்டிருந்தார்கள். கங்கா எந்த விழாவுக்குச் சென்றாலும் அவளைப் பார்க்க கூட்டம் கூடியது. கூட்டத்தில் தன் குடும்பத்தைத் தேட ஆரம்பித்தாள்.‘‘மேடம்...’’குரல் கேட்டு நிமிர்ந்தாள்.உதவி இயக்குநர் சரண் நின்று கொண்டிருந்தான்.

‘‘நான்தான் ஏற்கனவே கால்ஷீட் இல்லன்னு சொல்லிட்டேனே. திரும்பத் திரும்ப வந்து என்னைப் பார்த்தா கால்ஷீட் கிடைச்சிடுமா?’’
அருகில் வந்த இயக்குநர் சீனிவாசன் சொன்னார். ‘‘கங்கா... என்னோட ரெண்டு படத்துல இவன் ஒர்க் பண்ணிருக்கான். நீங்க கதை கேட்டு ஓகே பண்ணீங்கன்னா அவன் வாழ்க்கை செட்டில் ஆகிடும்...’’‘‘சார்... கால்ஷீட் இன்னும் ரெண்டு வருசத்துக்கு ஃபுல்...’’‘‘ஓகே...” என்றபடி நகர்ந்தார் அவர்.

‘‘நான் வந்தது கதை சொல்றதுக்காக இல்ல...” சரண் தயக்கமாய்ச் சொன்னான்.‘‘பின்னே?’’‘‘உங்க குடும்பத்தைப் பார்த்தேன்...’’அதிர்ந்தாள். நம்ப முடியாமல் சரணைப் பார்த்தாள். அவன் தலையாட்டவும் , ‘‘ரியலி...’’ ஆச்சரியமாய் கத்தியபடி எழுந்தாள்.
படப்பிடிப்புத் தளத்தில் எல்லாரும் அவளையே  பார்க்க, டக்கென்று சுதாரித்தாள். ‘‘ஒண்ணுமில்ல. சூப்பர் சீன் ஒண்ணு சொன்னார், அதான்...’’
இதை எதிர்பார்க்காத சரண் ஆச்சரியமானான்.

சரணைப் பார்த்து “உட்காருங்க...’’ என்றபடி எதிரிலிருந்த சீட்டைக் காட்டினாள். உதவி யாளரிடம் திரும்பி, ‘‘டென் மினிட்ஸ் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்...’’ என்றாள். ‘‘சொல்லுங்க... எங்க பார்த்தீங்க? எப்படி இருக்காங்க?’’“என் ஃபிரெண்டு கல்யாணத்திற்காக திருச்சிக்கு போனப்ப, சாப்பிடறதுக்காக நைட் ஒரு டிபன் சென்டருக்கு போயிருந்தோம்...’’ ஆரம்பித்தான் சரண்.‘‘மச்சான்... என்னடா ஒரு டிபன் சாப்பிட இவ்வளவு  தூரமா அழைச்சிட்டு போவே?” சரண் சலித்துக் கொண்டான்.

‘‘இதோ வந்துடுச்சு வா. இங்க செம டேஸ்ட்டா இருக்கும்...’’தென்னம் ஓலைகளால் பின்னப்பட்ட தட்டிகளால் அடைத்து உருவான டிபன் கடை அது. சரணும் அவன் நண்பர்களும் ஒரு டேபிளை குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர். வியாபாரம் அடுப்பில் வெந்து கொண்டிருந்த இட்லிகளைப் போலவே சூடு பிடித்தபடி இருந்தது. சரண் அப்போதுதான் கவனித்தான். சுவரில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைத் தாளில், ‘அரசியல் கூட பேசலாம். சினிமா பற்றி பேசக் கூடாது’ என்று எழுதியிருந்தது.

கோபம் வந்து, ‘‘வாடா, இங்க சாப்பிட வேணாம்...’’ என்று எழுந்தான். “டேய் அதெல்லாம் ஏன் கண்டுக்கறே. உட்காரு...” என்றான் நண்பன். இட்லித் தட்டை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்த பெரியவர் ‘‘டேய்... சார் கிளம்பறாரு. என்னனு பாரு...’’ என்றார்.கடைப் பையன் அருகே வந்து கேட்பதற்குள், சரண் அந்தப் பெரியவரைப் பார்த்து சொன்னான். ‘‘நான் சினிமால வேலை பார்க்குறேன்.

எனக்கு சோறு போடற டிபார்ட்மென்ட் அதான். இப்படி சொன்னா நான் எப்படி இங்க சாப்பிடறது?”“என்ன பண்றது. ஒருத்தருக்கு சோறு போடறதுதான் இன்னொருத்தரை வாழ விடாம தடுத்திட்டிருக்கும்...” பெரியவர் இட்லித் தட்டில் தண்ணீர் தெளித்துக் கொண்டே சொன்னார்.அந்தப் பெரியவரின் மனைவி இப்போது கல்லாவிலிருந்து குறுக்கிட்டார். ‘‘இங்க பாருங்க. வயிறார சாப்பாடு போடறோம். அதுல எதுனா குறை இருந்திச்சுனா கேளுங்க. இந்த நோட்டீஸ்ல இருக்கிற வார்த்தைக்கு எல்லாம் சாப்பிடாம போகாதீங்க...’’

“இதுக்கு பின்னாடி கண்டிப்பா எதுனா ஒரு கதை இருக்கும்...’’ நண்பனின் காதை சரண் கடித்தான்.தட்டில் சூடாய் இட்லி வரவும் சாப்பிடத் தொடங்கினார்கள். அந்த அம்மாதான் சாம்பார் ஊற்றினார். ஒரு தாய் எப்படி பிள்ளைக்கு பரிமாறுவாரோ அப்படித்தான் பரிமாறினார். நண்பன் சொன்னது போலவே அமிர்தம்தான். கடை பையன் தண்ணீரை டம்ளரில் ஊற்றியபடி சரண் காதில் மெதுவாகக் கேட்டான். ‘‘சார் சினிமால இருக்கீங்களா?’’
‘‘ஆமாம்...’’

‘‘எனக்கு நடிக்கிறதுனா ரொம்ப ஆசை. நிறைய டிக் டாக் வீடியோ ரிலீஸ் பண்ணிருக்கேன். எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுக்க முடியுமா?”
‘‘உன் பேர் என்ன?’’“சுரேஷ், சத்தமா பேசாதீங்க. முதலாளி சுடு தண்ணியை முகத்துல ஊத்திடுவார். அப்புறம் நான் பெரிய ஹீரோவா வர்றது தடைபட்டுடும். முதலாளிக்கு சினிமான்னா பிடிக்காது. அவரோட பொண்ணு சினிமா ஆசைல ஓடிப் போயிடுச்சு...”‘‘பொண்ணு இப்ப எங்க இருக்கு?’’‘‘எங்க இருக்கா? நடிகை கங்காதான் இவங்க பொண்ணு!”

டக்கென்று  நண்பர்கள் நிமிர்ந்தார்கள். அடுப்பில் பானையில் இட்லித்  தட்டை அடுக்கிக் கொண்டிருந்த பெரியவரை ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகப் பார்த்தான் சரண்.

“கங்காவோட தம்பி ஒருத்தர் இருந்தாரு. அவர்தான் கல்லால உட்கார்ந்திருப்பார். தியேட்டர்ல படம் ரிலீஸ் நேரத்துல வேற நடிகரோட கோஷ்டி கூட சண்டை போட்டு கத்திக்குத்தாகி இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்காரு...’’

கங்கா சீட்டை விட்டே எழுந்து விட்டாள். உதவியாளரும் சரணும் சூழ்நிலையை உஷார்படுத்தவே அமர்ந்தாள். ஒரு நிமிடம் முழுதாய் கரைந்திருக்க, திடீரென்று சொடக்கு போட்டாள். ‘‘நாம நாளைக்கு அவங்களை பார்க்கப் போறோம்...’’“வேணாம் மேடம். அது பரபரப்பா இருக்கிற கடைத்தெரு.  கூட்டம் கூடிடும். அவங்களுக்கும் கோபம் குறைஞ்ச
மாதிரி தெரியல...”‘‘எனக்கு எப்படியும் அம்மா இல்லேன்னா தம்பிய சமாதானப்படுத்திடலாம்னு தோணுது...”“சரி மேடம். வரேன்...”‘‘எனக்கு பெரிய உதவி பண்ணிருக்கீங்க. கண்டிப்பா உங்க படத்துல நடிக்கிறேன். நீங்க மீடியாக்கு அறிவிச்சுட்டு வேலையை ஆரம்பிச்சிருங்க. கூடவே நாம நாளைக்கு ஊருக்கு போக ஏற்பாடும்  
பண்ணிடுங்க...” சரண் சந்தோஷமாய் தலையாட்டினான்.

டைரக்டர் ஷாட் ரெடி என்றழைக்கவும் கங்கா எழுந்து சென்றாள். அடுத்த காட்சியில் கங்கா அழுது நடிக்க வேண்டியிருந்தது. அவளுக்கு கிளிசரின் தேவைப்படவில்லை.
அடுத்த நாள். வழக்கமாக உபயோகிக்கும் காரை எடுக்காமல் புதிதாக வாங்கியிருந்த காரை உதவியாளர் மூர்த்தி ஓட்டி வர சரண் பக்கத்தில் அமர்ந்திருந்தான். கங்கா பின் இருக்கையில் இருந்தாள். கண்களுக்கு கருப்பு கிளாஸ், தலையில் தொப்பி அணிந்திருந்தாள்.

‘‘என்ன... ரோடு காலியா இருக்கு...’’
‘‘இப்ப மட்டும் நீங்க கீழே இறங்குங்களேன். தெருவெல்லாம் தலைகளா தான் தெரியும்...” சரண் சொல்லி புன்னகைக்கவும் கங்காவும் புன்னகைத்தாள்.திருச்சி வந்து சேர மாலை நான்கு மணி ஆகிவிட்டது. அந்த டிபன் சென்டர் நோக்கி கார் விரைந்தது. அந்தத் தெருவில் நுழைந்து அந்த டிபன் சென்டர் அருகே வந்து காரை நிறுத்திய போது சரணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  
அந்த டிபன் கடை இருந்த இடமே தரை மட்டமாகி இருந்தது. தடுப்புகள் உடைக்கப்பட்டு எங்கும் சாப்பாடு சிதறிக் கிடக்க நாய்கள் சாப்பிடுவதற்கு அடித்துக் கொண்டிருந்தன.

பிளாஸ்டிக் ஸ்டூல்கள் உடைந்து கிடந்தன.கங்கா அவனுக்கு மேல் அதிர்ச்சியானாள். “என்னாச்சு?’’‘‘நீங்க கீழே இறங்க வேண்டாம்...’’ என்று சொல்லிவிட்டு சரண் மட்டும் இறங்கி ஓட்டமும் நடையுமாய் பக்கத்தில் இருந்த கடையில் நுழைந்து கேட்டான். “என்ன ஆச்சு?”“ஏங்க... வியாபாரத்தை பார்ப்பேனா... வெட்டியா உட்கார்ந்து பதில் சொல்லிட்டிருப்பேனா...”

கடையில் பொருள் வாங்க நின்றிருந்த பெண் சொன்னாள். “அங்க ஒரு பையன் செல்போனோட உட்காந்திருக்கான் பாருங்க... அவன்கிட்ட கேளுங்க...”
அவள் காட்டிய திசையில் பார்த்தான். அன்று கடையில் பார்த்த அந்தப் பையன் சுரேஷ்தான் உட்கார்ந்திருந்தான்.

சரணைப்  பார்த்ததும் சுரேஷ் ஆச்சரியமாகி எழுந்தான். “வாங்க சார்... நீங்க என்னைக் கூப்பிட வருவீங்கன்னு தெரியும். ஆனா, இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல...”
“காமெடி பண்ணாதே... கடை என்னாச்சு?” “அதுவா...” சலிப்பானவன் தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்த படி, “நேத்து ஒரு ரசிகர் மன்ற குரூப் சாப்பிட வந்தாங்க. சினிமா பற்றி பேசிக்கிட்டு இருந்தாங்க. பெரியவர் பேசக் கூடாதுனு சொன்னார். அப்படித்தான் பேசுவோம்னு சொன்னாங்க.

போகப் போக அவங்க பேச்சு ரொம்ப ஆபாசமா இருந்துச்சு. ‘காத்திருக்காத காதல்’ படத்துல கங்கா ஆடிய டான்ஸ் பற்றி பேசி, என்ன உடம்புடா இதுனு ஆரம்பிச்ச உடனே அவங்க பையன் தட்டிக் கேட்டாரு. அவரை அடிச்சாங்க. பெரியவரும் கேட்டார். அவரையும் அடிச்சாங்க. அப்புறம் கடைய அடிச்சு உடைச்சு களேபரம் பண்ணிட்டு போயிட்டாங்க. அவங்க கட்சி சார்புடையவங்கங்கிறதால தெருவுல இருக்கிற யாராலயும் ஒண்ணும் பண்ண முடியல. அழுதுகிட்டே மூணு பேரும் கோபத்தோட எங்க போறோம்னு கூட சொல்லாம கெளம்பி போயிட்டாங்க...” என்றான்.

சரண் பெருமூச்சு விட்டபடி காரை நோக்கி வந்தான். அவன் சொல்லச் சொல்ல கங்கா செய்வதறியாது திகைத்தாள். கலங்கிய கண்களுடன், தரைமட்டமான அந்த இடத்தையே  பார்த்துக் கொண்டிருந்தவள்  திடீரென்று காரை விட்டுக் கீழே இறங்கினாள்.சரண், மூர்த்தி இருவரும் இதை எதிர்பார்க்காததால் வேண்டாம் என்று குரல் கொடுத்தபடி தடுக்க முனைய, அவர்களைத் தள்ளிவிட்டு முன்னேறினாள். தரைமட்டமாகி இருந்த இடத்திற்கு வந்ததும் சிதறடிக்கப்பட்டிருந்த பொருட்களை ஒவ்வொன்றாய்ப் பார்த்தாள்.  

தூரத்தில் நின்றுகொண்டிருந்த சுரேஷ்,  கங்காவைப் பார்த்ததும் பரவசத்துடன் நெருங்க... தெருவில் போவோர் வருவோர் கூட இப்போது அவளைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
சரணும், மூர்த்தியும் “சரி... சரி... வாங்க. எல்லாரும் பார்க்கிறாங்க...” பதறினார்கள். அவள் லட்சியம் செய்யவே இல்லை. பித்துப் பிடித்தாற் போல் அங்குமிங்கும் ஓடி கண்களை அலைய விட்டாள்.

அருகில் வந்து உறுதிப்படுத்திக் கொண்ட சுரேஷ், “சினிமா நடிகை கங்கா டோய்...” என்று உற்சாகமாய்க் கத்தவும், கூட்டம் கங்காவை நோக்கி விரைய ஆரம்பித்தது.
சுரேஷைக் கடிந்தபடி சரணும் மூர்த்தியும் இப்போது கங்காவை பாதுகாப்பதில் முனைந்தார்கள்.

“என்னடா ஷூட்டிங் எதுனா நடக்குதா?”
“கேமராலாம் காணுமே...”
“ட்ரோன் வச்சு எடுக்கிறாங்களோ என்னவோ...”
“ஆனாலும் இவ்வளவு கூட்டத்திலேயும் சூப்பரா நடிக்குது பாரு...”
“எவ்வளவு சிகப்பா இருக்கா பாரு...”“சிகப்பு கலர் புடவைக்கு மேட்ச்சா ஜாக்கெட். நாம எத்தினி கடை ஏறி இறங்கினாலும் நமக்கு கிடைக்குதா பாரு...”

இப்படியான குரல்களுக்கு இடையே, எனக்கு வேலை வெட்டி இல்லியா என்று கேட்ட கடைக்காரர் ஒரு டேபிள் மேல் ஏறி நின்று கங்காவையும் தன்னையும் இணைத்து ஒரு
செல்ஃபி எடுக்க முயன்று கொண்டிருந்தார்.தன்னைச் சுற்றி நின்று வேடிக்கை  பார்க்கும்  கூட்டத்தை கங்கா கவனிக்கவே இல்லை. தன் அம்மாவின் நைந்து போயிருந்த புடவையை எடுத்து அணைத்த படி கதறி அழ ஆரம்பித்தாள்.அவளது அழுகையை கூட்டம் கண்டு கொள்ளவே இல்லை. கங்காவிடம் நெருங்கவும், பேசவும், படமெடுக்கவும்  தொடர்ந்து முண்டியடித்தனர்.l

ஆர்.வி.சரவணன்